அமீரக செய்திகள்

அமீரகத்தில் பிக்டிக்கெட் வாடிக்கையாளர்களை குறிவைக்கும் மோசடி கும்பல்.. குடியிருப்பாளர்களை குழப்பி நூதன முறையில் பணம் பறிப்பு.. அழைப்புகளை நம்பி ஏமாற வேண்டாம் என எச்சரிக்கை..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் குடியிருப்பாளர்களை குறிவைத்து போலி அழைப்புகள் மூலம் பொது மக்களின் தனிப்பட்ட விவரங்கள் அல்லது பரிசுகளை வழங்குவதற்காக பணம் கேட்கும் மோசடியாளர்கள் சுற்றித் திரிவதாக பிக் டிக்கெட் அபுதாபி ரேஃபிள் டிராவின் ஏற்பாட்டாளர்கள் வாடிக்கையாளர்களை எச்சரித்துள்ளனர்.

1992 இல் தொடங்கப்பட்ட பிக்டிக்கெட் ஆனது வளைகுடா நாடுகளிலேயே ரொக்கப் பரிசுகள் மற்றும் சொகுசு கார்களை வெற்றி பெற்றவர்களுக்கு வழங்கி வரும் மிகப்பெரிய மற்றும் நீண்ட கால ரேஃபிள் டிராவாகும். வருடம் முழுவதும் மாதாந்திர குலுக்கலை நடத்தும் பிக்டிக்கெட், அதிகபட்சமாக 35 மில்லியன் திர்ஹம் வரையிலான கிராண்ட் பரிசுகளை அவ்வப்போது வழங்குகிறது.

ஆனால், எவ்வளவு பெரிய கிராண்ட் பரிசாக இருந்தாலும், பிக்டிக்கெட் நிறுவனம் ஒருபோதும் அதன் வெற்றியாளர்களிடம் தங்களுடைய பரிசைப் பெற பணம் கேட்பதில்லை என்பதை போட்டி அமைப்பாளர்கள் அமீரக குடியிருப்பாளர்களுக்கும், அதன் உலகளாவிய வாடிக்கையாளர்களுக்கும் தெளிவுபடுத்தியுள்ளனர்.

இது குறித்து பிக்டிக்கெட் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் ஒருவர் கூறுகையில், போலியான சமூக ஊடகப் பக்கங்களில் ஒரு தனிநபர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவதாகவும், அவர்கள் அந்த பரிசைப் பெற ஒரு தொகையைச் செலுத்த வேண்டும் என்று கேட்கப்படுவதாகவும் அவர் எச்சரித்துள்ளார். மேலும், பிக்டிக்கெட் ஒருபோதும் உங்கள் பரிசுகளைப் பெற பணம் கேட்பதில்லை என்பதால் இது போலியானது என்று அவர் கூறியுள்ளார்.

இதுபோன்ற போலியான அறிவிப்புகள் அல்லது அழைப்புகள் மூலம், மோசடி கும்பல் உங்களை அணுகும் போது, பிக் டிக்கெட் வாடிக்கையாளர்கள் எந்த சந்தேகத்திற்கிடமான லிங்க்குகளையும் கிளிக் செய்ய வேண்டாம் அல்லது எந்தவொரு சமூக ஊடக தளங்களிலும் தங்கள் தனிப்பட்ட தகவல்களைப் பகிர வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

ஏனெனில், தனிப்பட்ட தகவல்களை வழங்குவது அடையாள திருட்டு மற்றும் மோசடிக்கு வழிவகுக்கும். ஆகையால், தகவலுக்கு எப்போதும் உத்தியோகபூர்வ ஆதாரங்களை பின்தொடருங்கள் என்று பிக்டிக்கெட் நிர்வாகம் அதன் வாடிக்கையாளர்களை அறிவுறுத்தியுள்ளது.

அதேசமயம், பிக்டிக்கெட்டில் மொபைல் ஆப் எதுவும் இல்லை என்பதைச் சுட்டிக்காட்டிய தொகுப்பாளர், வாடிக்கையாளர்கள் டிக்கெட்டுகளை அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.bigticket.ae/ மூலமாகவோ அல்லது அபுதாபி அல்லது அல் அய்ன் விமான நிலையங்களில் உள்ள கடைகளில் உள்ள கவுண்டர்களுக்குச் சென்று மட்டுமே வாங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பிக் டிக்கெட்டின் வெற்றியாளர்களுக்கு தொலைபேசியில் அல்லது அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்பட்டு அது குறித்த தகவல்கள் சமூக ஊடக தளங்களில் அறிவிக்கப்படும். எனவே, டிக்கெட்டுகளை வாங்குபவர்கள் பாதுகாப்பாக இருங்கள் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார்.

Related Articles

Back to top button
error: Content is protected !!