அமீரக செய்திகள்

துபாய்: ஒரு கிலோ டி-ஷர்ட் 25 திர்ஹம்ஸ்.. ஆடைகள் முதல் வீட்டு பொருட்கள் வரை அனைத்தும் பட்ஜெட்டிற்குள் ஷாப்பிங் செய்யலாம்..!!

உலகின் பல முன்னணி நகரங்களுடன் ஒப்பிடுகையில், வசதி படைத்தவர்கள் முதல் எளியவர்கள் வரை என அனைவரும் மகிழ்ச்சியாக வாழ்வதற்கும், அவரவர் வசதிக்கேற்ப தங்களின் சொந்த தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கும் சமமான வாய்ப்புகள் இங்கே கொட்டிக்கிடப்பதே துபாயின் சிறப்பம்சமாகும்.

இங்கு வசதி படைத்தவர்கள் மட்டுமே வாழமுடியும் என்ற சூழல் இல்லாமல், ஏழைகளும் மற்றும் குறைந்த சம்பளத்தில் பணிபுரியும் தொழிலாளர்களும் ஆடைகள் முதல் அத்தியாவசியப் பொருட்கள் வரையிலான தங்களின் சொந்த தேவைகளை குறைவான விலையில் பூர்த்தி செய்து கொள்வதற்கான வாய்ப்பும் இங்கு அதிகம்.

அதற்கேற்ப, வெறும் 4 திர்ஹம்ஸ் விலையில் துபாய் குடியிருப்பாளர்களின் ஷாப்பிங் அனுபவத்தை சொர்க்கமாக்கும் பல கடைகளும் துபாயில் ஏராளமாக உள்ளன. அதிலும் சில கடைகள் கிலோகிராம் கணக்கில் அத்தியாவசியப் பொருட்களை குறைவான விலைக்கு மொத்த விற்பனையில் விற்பனை செய்கின்றன.

அதாவது துபாயில் அல் கூஸ் பகுதியில் உள்ள Best Dress Ukay Ukay ஸ்டோர் ஆனது, ஆடைகள், பெட்ஷீட்கள், சமையலறைப் பொருட்கள், பொம்மைகள், புத்தகங்கள் மற்றும் பலதரப்பட்ட பொருட்களை ஒரு கிலோவிற்கு வெறும் 25 திர்ஹம்கள் என மொத்தமாக விற்பனை செய்கின்றது. அதுபற்றி விரிவாக கீழே பார்க்கலாம்.

டி-ஷர்ட்ஸ்:

துபாயின் பல கடைகளில் ஆறு டி-சர்ட்டுகள் ஒரு கிலோகிராம் ஆகவும், ஒவ்வொன்றும் 4 திர்ஹம்கள் என்ற அடிப்படையில் விற்பனை செய்யப்படுகிறது. இது வாடிக்கையாளர்களின் பணத்தை மிச்சப்படுத்துவதுடன் தங்களுக்கு பிடித்த ஆடைகளை பட்ஜெட்டிற்குள் வாங்கும் வாய்ப்பை வழங்குகிறது.

ஜாக்கெட்டுகள்:

ஸ்மார்ட் லெதர் அல்லது கிளாசிக் டெனிம் ஜாக்கெட் போன்ற தடிமனான கோட் வகைகளைத் தேர்ந்தெடுக்க விரும்பும் நபர்களும் இங்கு கிலோகிராம் அடிப்படையில், பட்ஜெட்டிற்குள் பேஷனான ஜாக்கெட்டுகளை ஷாப்பிங் செய்யலாம்.

பொம்மைகள்:

ஆடைகள் மட்டுமின்றி, சிறியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு பிடித்தமான கண்களைக் கவரும் மென்மையான பொம்மைகளும் 100 கிராம் முதல் 600 கிராம் வரையிலான எடையில் இங்கே உள்ளன. இவற்றை வங்க விரும்புபவர்களும் 25 திர்ஹம்களுக்கு ஒரு கிலோகிராம் பொம்மைகளை வாங்கிக்கொள்ளலாம்.

போர்வை மற்றும் படுக்கை விரிப்புகள்:

நாட்டில் கோடைக்காலம் முடிவடையவிருப்பதால், இன்னும் சில வாரங்களில் குளிர்காலம் தொடங்கிவிடும். இந்நேரத்தில் பழைய போர்வையை மாற்ற விரும்புபவர்கள் சுமார் 2 கிலோகிராம் எடையுள்ள ஒரு வசதியான போர்வையை 50 திர்ஹம்களுக்கு வாங்கலாம்.

அதுபோல, மிக மலிவான விலையில் உங்கள் படுக்கையறைகளை மேம்படுத்திக் கொள்ள ஒரு கிலோகிராம் எடையுள்ள இரண்டு வசதியான பெட்ஷீட்களை 25 திர்ஹம்களுக்கு இங்கே வாங்கலாம்.

வீட்டிற்கு தேவையான பொருட்கள்:

உங்கள் வீட்டிற்குத் தேவையான பாத்திரங்களை எடை கணக்கில் வாங்கும்போது, உங்கள் பட்ஜெட்டைத் தாண்டாமல் வீட்டு தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளலாம். ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பாத்திரங்கள் என ஒரு கிலோகிராம் எடையில் எத்தனை பொருட்களையும் வாங்கலாம்.

புத்தகங்கள்:

இங்கு கிலோகிராம் அடிப்படையிலான ஷாப்பிங் ஆடைகள், வீட்டுப் பொருட்கள் மட்டுமின்றி, புத்தகங்களும் இங்கே கிலோகிராம் விலையில் வழங்கப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!