அமீரகத்தில் நேற்று ஒரு புறம் அரை சதம் அடித்த வெயில்..!! மற்றொரு புறம் வெளுத்து வாங்கிய கனமழை..!! NCM தகவல்..!!

அமீரகத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) பல்வேறு பகுதிகளில் வெயிலின் தாக்கம் மிக கடுமையாக இருந்த நிலையில் மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகினர். ஆனால் அதே நேரத்தில் அபுதாபியில் இருக்கக்கூடிய அல் அய்னில் வெள்ளிக்கிழமை மாலை கனமழை பெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. துபாய்-அல் அய்ன் சாலையில் மழை பெய்யும் வீடியோக்களை அமீரகத்தின் தேசிய வானிலை ஆய்வு மையம் சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளது.
இதற்கிடையில், ஷார்ஜாவில் வெப்பநிலை அரை சதம் அடித்துள்ளது. அதாவது வெள்ளிக்கிழமை பிற்பகல் ஷார்ஜாவின் அல் தைத்தில் 50.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளதாக NCM தெரிவித்துள்ளது.
அல் அய்னில் பெய்த பலத்த மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சாலைகளைப் பயன்படுத்தும் வாகன ஓட்டிகளுக்கு பாதுகாப்பு எச்சரிக்கையையும் நேற்று அதிகாரிகள் வெளியிட்டிருக்கின்றனர். அதிகாரிகள் வெளியிட்டுள்ள எச்சரிக்கை முன்னறிவிப்பின் படி, எமிரேட்டின் சில கிழக்குப் பகுதிகளில் வீசும் பலத்த காற்றின் காரணமாக சில தளர்வான பொருட்கள் மற்றும் பலவீனமான கட்டமைப்புகள் ஆபத்தானதாக மாறலாம் மற்றும் சாலைகளில் கிடைமட்டத் தெரிவுநிலை குறையலாம்.
எனவே, மழை தாக்கி வரும் பகுதிகளில் இருந்து விலகி இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. அத்துடன் மழையின் காரணமாக, மாலை 5:20 மணியளவில், அபுதாபி காவல்துறை அல் அய்ன்-துபாய் சாலையில் வேகவரம்பை மணிக்கு 120 கி.மீ ஆக தற்காலிகமாக குறைத்து அறிவிப்பை வெளியிட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
நேற்றைய வானிலையைத் தொடர்ந்து, இன்று (சனிக்கிழமை) அதிகாலை காற்றில் ஈரப்பதத்தின் அளவு அதிகரிக்கும் என என எதிர்பார்க்கப்படுகிறது, இதன் விளைவாக சில பகுதிகளில் பனிமூட்டம் காணப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. அத்துடன் இந்த வார இறுதியில் நிலவிவரும் அதிக வெப்பநிலை காரணமாக, குறைவான மழையை உருவாக்கும் வெப்பச்சலன மேகங்கள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.