அமீரக செய்திகள்

அமீரகத்தில் ஹலால் அல்லாத உணவை விற்ற உணவகத்தை மூடிய அதிகாரிகள்..!! உணவு பாதுகாப்பு விதியை மீறியதற்காக நடவடிக்கை..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் உணவகம் ஒன்று உரிமம் பெறாமல் ஹலால் அல்லாத உணவை விறபனை செய்து வந்தது உணவு பாதுகாப்பு அதிகாரிகளால் கண்டறியப்பட்டதை தொடர்ந்து அந்த உணவகத்தை அதிகாரிகள் மூட உத்தரவிட்டுள்ளனர்.

அமீரகத்தில் போதிய உரிமம் பெறாமல் ஹலால் அல்லாத உணவை வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்தது, அபுதாபியில் முசாஃபா பகுதியில் அமைந்துள்ள ‘பிராட் மணிலா (Birat Manila)’ என்ற உணவகம் என்பதும் தெரியவந்துள்ளது.

மேலும், ஹலால் உணவு தயாரிக்கப் பயன்படுத்தப்படும் அதே உபகரணங்கள் மற்றும் கருவிகளைக் கொண்டு ஹலால் அல்லாத உணவுகளை தயாரித்ததற்காகவும் உணவகத்தை நிர்வாக ரீதியாக மூடுவதற்கான உத்தரவை அபுதாபி விவசாயம் மற்றும் உணவு பாதுகாப்பு ஆணையம் (ADAFSA) வெளியிட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, உணவகம் பொது சுகாதாரத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. அந்த வகையில், இந்த உணவகம் அபுதாபி எமிரேட்டில் உணவு தொடர்பான சட்ட எண் (2) 2008 மற்றும் அதனுடன் இணைந்த உணவு பாதுகாப்பு சட்டத்தை மீறியதும் கண்டறியப்பட்டுள்ளது.

ADAFSA வெளியிட்ட அறிவிப்பின்படி, உணவகம் அதன் பழைய உபகரணங்களை மாற்றியமைத்து, உணவகம் முழுவதையும் சுத்தம் செய்த பின்னர், ஹலால் அல்லாத உணவுகளை விற்பனை செய்வதற்கு தேவையான முறையான அனுமதிகளைப் பெற்றதும் மீண்டும் திறக்கப்படுவதற்கு அனுமதிக்கப்படும் என தெரிகிறது.

குறிப்பாக, அபுதாபியில் உள்ள அனைத்து உணவு நிறுவனங்களும் வழக்கமான தரநிலை மதிப்பீடுகளுக்கு உட்பட்டவை என்பதால், எந்தவொரு உணவு நிறுவனத்திலும் ஏதேனும் மீறல்கள் கண்டறியப்பட்டால் உடனடியாக, 800555 என்ற கட்டணமில்லா எண்ணை தொடர்பு கொண்டு புகாரளிக்குமாறும் பொதுமக்களை அபுதாபியின் உணவு பாதுகாப்பு ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!