அமீரகத்தில் உள்ள குடியிருப்பு கட்டிடத்தில் ஒரு வாரமாக வேலை செய்யாத லிஃப்ட்… 15 மாடிகளுக்கு ஏறி இறங்கி சிரமப்படும் குடியிருப்பாளர்கள்..!!

ஷார்ஜாவின் அல் நஹ்தா பகுதியில் உள்ள ஒரு 15 மாடி கட்டிடத்தில் வசிக்கும் மக்கள் கடந்த ஒரு வாரமாக பெரும் சவாலை எதிர்கொண்டு வருகின்றனர். அவர்கள் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள மூன்று லிஃப்ட்களும் கடந்த ஒரு வார காலமாக செயல்பாடாததன் காரணமாக மக்கள் 315 படிக்கட்டுகளை ஏறி பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருவதாக அந்த கட்டிடத்தில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, கட்டடத்தின் பொறுப்பாளர்களிடம் பலமுறை புகார் கூறியும் எவ்வித பலனளிக்கவில்லை என்று அவர்கள் கூறியுள்ளனர். அதிகளவு படிக்கட்டுகளை ஏறுவதன் காரணமாக சிறு குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் கடந்த செப்டம்பர் 6ம் தேதி உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட ஒரு நபர் படிக்கட்டுகளில் ஏறும் வழியில், திடீரென்று உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருக்கிறார். பின்பு உடனடியாக வீட்டிற்கு அழைத்துச் சென்று அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
இதே போல் தனது குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்லும் தாய்மார் ஒருவர் கூறும் பொழுது, குழந்தைகளால் படிக்கட்டுகளை ஏற முடியாத காரணத்தினால் வேறு ஒருவரின் வீட்டில் குழந்தைகளை விட்டு விட்டதாக கூறியுள்ளார்.
இந்த சிரமங்கள் மட்டுமல்லாமல், பல படிக்கட்டுகளை ஏற வேண்டும் என்ற காரணத்தினால் மளிகை சாமான்கள் சப்ளை செய்யும் ஆட்களில் இருந்து தண்ணீர் கேன் சப்ளை செய்யும் ஆட்கள் வரை யாரும் டெலிவரி செய்ய வருவதில்லை என்று தாங்கள் படும் கஷ்டங்களை அங்கு வசிக்கும் குடியிருப்பாளர்கள் எடுத்துரைத்துள்ளனர். இதனால் மளிகை பொருட்கள் வாங்குவதற்கும், குடிதண்ணீருக்கும் கூட பெரும் சிரமப்படுவதாக தெரிவித்துள்ளனர். இப்படியே போனால் குடிநீர் கிடைப்பது கூட சவாலான விஷயமாக மாறக்கூடும் என்று அடிப்படை தேவைகளுக்காக தாங்கள் ஏங்குவதை தெரிவித்துள்ளனர்.
ஒரு நாளைக்கு அலுவலகம் சென்று வர, குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் சென்று வர என நான்கு முறைக்கு மேலாக படிக்கட்டுகளை ஏற வேண்டியதிருப்பதால் உடலில் உள்ள ஆற்றல் முழுவதும் இதற்காகவே செலவழிக்கப்படுவதாகவும், உடல்நலம் மிகவும் சோர்வடைவதாகவும் அவர்கள் தாங்கள் படும் அல்லல்களை கூறியுள்ளனர்.
மேலும் இது குறித்து கட்டிட நிர்வாகத்தை பலமுறை தொடர்பு கொண்ட பொழுதும் பதில் ஏதும் கிடைக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் விரைவாக லிப்ட் சரியாகும் என்ற நம்பிக்கையிலேயே ஒவ்வொரு நாளையும் அவர்கள் கழிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.