அமீரக செய்திகள்

துபாய்: புதிய வசதிகள், கட்டுமான வடிவமைப்புகளுடன் திறக்கப்பட்டுள்ள அப்ரா நிலையங்கள்: கடல் போக்குவரத்தை அதிகரிக்க RTAவின் முயற்சி….

துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA), துபாய் க்ரீக்கில் (Dubai Creek) உள்ள நான்கு அப்ரா நிலையங்களையும் வரலாற்று மற்றும் கலாச்சார அடையாளத்தை பராமரிக்கும் வகையில், முழுமையாக புதுப்பித்துள்ளதாக வியாழக்கிழமை அறிவித்துள்ளது.

பயணிகளின் கடல்வழிப் பயணத்தை பாதுகாப்பானதாக மாற்றவும், அவர்களின் அனுபவத்தை மேம்படுத்தவும், பர் துபாய் மாடல் ஸ்டேஷன், தேரா ஓல்ட் சூக் ஸ்டேஷன், துபாய் ஓல்ட் சூக் ஸ்டேஷன் மற்றும் சப்கா ஸ்டேஷன் ஆகிய நான்கு அப்ரா நிலையங்களிலும் மறுசீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக ஆணையம் கூறியுள்ளது.

குறிப்பாக, பர் துபாய் மாடல் ஸ்டேஷனின் மறுசீரமைப்புப் பணியில், பயணிகளுக்கு மேம்பட்ட வசதிகள் மற்றும் உயர் தொழில்நுட்ப சேவைகளை வழங்கும் அதே வேளையில், அதன் வரலாற்று மற்றும் கலாச்சார அடையாளம் பராமரிக்கப்படுவதையும் ஆணையம் உறுதி செய்துள்ளது.

இது குறித்து RTA இன் இயக்குநர் ஜெனரலும் நிர்வாக இயக்குநர்கள் குழுவின் தலைவருமான மட்டர் அல் டேயர் அவர்கள் பேசுகையில், அப்ரா நிலையங்களில் நிழல் வடிவமைப்புடன் இருக்கும் ஷேடட் வெளிப்புற இடங்கள் கட்டப்பட்டுள்ளதாகவும், சில்லறை விற்பனை நிலையங்கள் இப்போது பயணிகள் மற்றும் பார்வையாளர்களுக்கு சேவை செய்யும் வாய்ப்பைப் பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி, இந்த கட்டுமானத்தில் பயன்படுத்தப்படும் பொருட்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்தவை மற்றும் குறைவான செலவில் பராமரிக்கக் கூடியவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். கார்பன் உமிழ்வைக் குறைப்பது மட்டுமின்றி, அதன் சொத்து ஆயுட்காலம் 10 சதவீதம் அதிகரிக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

RTA இன் படி, இந்த அப்ரா மேம்பாட்டுத் திட்டமானது, துபாய் யுனிவர்சல் டிசைன் கோட் (Dubai Universal Design Code) உடன் மாற்றுத் திறனாளிகள் இணங்குவதன் ஒரு பகுதியாகும். அத்துடன் பர் துபாய் நிலையத்தின் பயணிகளின் திறனை 33 சதவீதம் அதிகரிக்கும் நோக்கமும் ஆகும்.

14 மில்லியன் பயணங்கள்:

துபாயின் கடல் போக்குவரத்தை ஆண்டுதோறும் 14 மில்லியன் பயணிகள் பயன்படுத்துவதாக ஆணையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, துபாய் க்ரீக்கை கடலோரப் பகுதியுடன் இணைக்கும் துபாய் வாட்டர் கேனல் திறக்கப்பட்டதிலிருந்து அப்ரா பயணங்கள், நிலையங்கள் மற்றும் பயணிகளின் எண்ணிக்கை என அனைத்திலும் கடல் போக்குவரத்து நிலையான வளர்ச்சியைக் கண்டுள்ளதாக அல் தாயர் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி, கால்வாயின் கரையிலேயே நகர்ப்புற மற்றும் சுற்றுலா வசதிகள் மற்றும் கடல் நிலையங்களை அமைப்பதன் மூலம், இத்துறை மேலும் முன்னேற்றம் காண உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். கூடுதலாக, அப்ராவில் ரிமோட் கண்காணிப்பு சாதனங்கள் மற்றும் சென்சார்களை நிறுவுவதை உள்ளடக்கிய ஒரு முன்கணிப்பு பராமரிப்பு அமைப்பைப் பயன்படுத்தியுள்ளதாக RTA கூறியுள்ளது.

அதேசமயம், தரவை பகுப்பாய்வு செய்யவும், தவறுகளை கணிக்கவும், தேவையான உதிரி பாகங்களை மாற்றுவதற்கு திட்டமிடவும் ஒரு நிகழ்நேர கண்காணிப்பு அமைப்பை (real-time monitoring system) அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக ஆணையம் அறிவித்துள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!