அமீரக செய்திகள்

துபாய் காவல்துறை வெளியிட்டுள்ள எச்சரிக்கை!! இந்த ஒரு விதிமீறலினால் கடந்த எட்டு மாதங்களில் 107 விபத்துகள்..!!

துபாயில் வாகன ஓட்டிகள் சாலைகளில் முறையான பாதையை கடைபிடிக்காமல் விதிகளை மீறி ஓட்டியதால் கடந்த எட்டு மாதங்களில் மட்டும் 107 விபத்துகள் ஏற்பட்டுள்ளதாகவும், அவற்றில் 3 இறப்புகள், 75 பேர் காயம் அடைந்துள்ளதாக துபாய் காவல்துறை தெரிவித்துள்ளது.

சாலை விதிமீறல்கள் குறித்து துபாய் காவல்துறையின் போக்குவரத்து பொதுத் துறையின் இயக்குநர் மேஜர் ஜெனரல் சைஃப் முஹைர் அல் மஸ்ரூயி அவர்கள் பேசிய போது, துபாய் காவல்துறையின் ஸ்மார்ட் போக்குவரத்து கண்காணிப்பு அமைப்புகள் மற்றும் ரேடார்களில் பிடிபட்ட விதிமீறல்களில் சுமார் 529,735 போக்குவரத்து விதிமீறல்கள் சாலைப் பாதைகளை முறையாக கடைப்பிடிக்காததால் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், சில வாகன ஓட்டிகள் திடீரென பாதை மாற்றங்களைச் செய்வதை குறிப்பாக, நெடுஞ்சாலைகளின் சந்திப்புகள் அல்லது எக்ஸிட் பாதைகளுக்கு அருகில் திருப்புவதையும் கண்காணித்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவர் தொடர்ந்து பேசுகையில், எமிரேட்டின் அனைத்து சாலைகளிலும் நிறுவப்பட்ட ஸ்மார்ட் அமைப்புகளால் கண்டுபிடிக்கப்பட்ட இந்த விதிமீறல்களே, சாலை விபத்துகளுக்கு வழிவகுத்துள்ளதாகக் கூறியுள்ளார்.

இதுபோன்ற திடீர் பாதை மாற்றங்களுக்கு வாகன ஓட்டிகளுக்கு 400 திர்ஹம்கள் அபராதம் விதிக்கப்படும் என்ற நினைவூட்டலையும் மேஜர் ஜெனரல் அல் மஸ்ரூயி வழங்கியுள்ளார்.

அத்துடன் எமிரேட்டின் சாலைப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக சாலைகளில் ஸ்மார்ட் சிஸ்டம் மற்றும் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதன் முக்கியத்துவம் பற்றியும் வலியுறுத்தியுள்ளார். எனவே, வாகன ஓட்டிகள் எக்ஸிட் பாதைகள் மற்றும் சந்திப்புகளில் திரும்பும் போது, அதிக விழிப்புணர்வுடன் செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Related Articles

Back to top button
error: Content is protected !!