அமீரக செய்திகள்

துபாய் ஐலேண்ட்ஸ்க்கு புதிய நான்குவழி பாலம் அமைக்கும் திட்டம்: பயண நேரத்தை 104 நிமிடங்களில் இருந்து 16 நிமிடங்களாக குறைக்கும் என்று RTA தகவல்…

துபாய் ஐலேண்ட்ஸ் மற்றும் பர் துபாயை இணைக்கும் வகையில் புதிதாக 1.4 கிமீ நீளமுள்ள நான்கு வழி பாலம் அமைக்கப்படும் என்று துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) தற்பொழுது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. சுமார் 1,425 மீட்டர் நீளம் கொண்ட இந்த பாலம், ஒவ்வொரு திசையிலும் நான்கு பாதைகளைக் கொண்டிருக்கும் மற்றும் இரு திசைகளிலும் ஒரு மணி நேரத்திற்கு 16,000 வாகனங்கள் செல்லும் போக்குவரத்துத் திறன் கொண்டது என்று RTA தெரிவித்துள்ளது.

துபாய் ஐலேண்ட் திட்டத்தின் படி, துபாய் க்ரீக்கின் குறுக்கே இன்ஃபினிட்டி பிரிட்ஜ் மற்றும் போர்ட் ரஷித் மேம்பாட்டுத் திட்டத்திற்கு இடையே நீண்டு செல்லும் பாலத்தின் வழியாக பர் துபாய் பக்கத்தில் துபாய் ஐலேண்டுகளுக்கு நுழைவு மற்றும் வெளியேறும் பாதைகள் அமைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

இந்த பாலம், க்ரீக்கின் நீர் மட்டத்தில் இருந்து 15.5 மீட்டர் உயரத்தில் செல்கிறது மற்றும் 75 மீட்டர் அகல கால்வாயைக் கொண்டுள்ளது என்றும் இது பல்வேறு வகையான கப்பல்கள் துபாய் க்ரீக் வழியாக பயணிக்க அனுமதிக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கூடுதலாக, ஒரு புறத்தில் சைக்கிள் ஓட்டுபவர்கள் மற்றும் பாதசாரிகளுக்கான பிரத்யேக பாதையும் அமைக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. அத்துடன் துபாய் ஐலேண்ட் மற்றும் பர் துபாய் ஆகிய இரு முனைகளிலிருந்தும் தற்போதுள்ள சாலைகளுடன் இணைக்க சுமார் 2,000 மீட்டர் நீளத்திற்கு மேற்பரப்பு சாலைகள் அமைப்பதும் திட்டத்தில் உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த மெகா திட்டத்தை முடிப்பதற்கான ஒப்பந்தத்தில், புதன்கிழமையன்று (செப்டம்பர் 13) RTA இயக்குநர் ஜெனரலும் நிர்வாக இயக்குநர்கள் குழுவின் தலைவருமான மட்டார் அல் தயர் மற்றும் நக்கீல் நிறுவன இயக்குநர்கள் குழுவின் தலைவர் முகமது இப்ராஹிம் அல் ஷைபானி ஆகிய இருவரும் கையெழுத்திட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த வகையில், இத்திட்டம் 2026ல் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அல் டேயர் பேசுகையில், இந்த திட்டம் அல் ஷிந்தகா காரிடார் மேம்பாட்டுத் திட்டத்தின் முக்கிய கட்டம் என்றும், இது மொத்தம் 13 கிமீ பரப்பளவில் 15 குறுக்குவெட்டுகளின் கட்டுமானத்தை உள்ளடக்கியது என்றும் கூறியுள்ளார். இது 2030 ஆம் ஆண்டளவில் பயண நேரத்தை 104 நிமிடங்களில் இருந்து 16 நிமிடங்களாக குறைக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல், இந்த நான்கு வழிப் பாலங்கள் மற்றும் நீர் போக்குவரத்து மூலம் துபாய் ஐலேண்ட்களை தரை மற்றும் கடல் வழியாக எளிதாக அணுக முடியும் என்றும் அல் ஷைபானி தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button
error: Content is protected !!