மஸ்கட்டில் இருந்து விடுமுறைக்கு சென்னை திரும்பிய தமிழர் மாரடைப்பால் மரணம்.. நடுவானிலேயே உயிர் பிரிந்த சோகம்!!
மஸ்கட்டில் இருந்து சென்னைக்கு பறந்து கொண்டிருந்த விமானத்தில் பயணித்த தனசேகரன் என்ற 38 வயதான இந்திய நபரின் உயிர் நாடுவானிலேயே பிரிந்துள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடி என்ற ஊரைச் சேர்ந்த தனசேகரன், ஓமானின் மஸ்கட்டில் பணிபுரிந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், விடுமுறைக்காக ஓமானில் இருந்து விமானத்தில் தாயகம் திரும்பி கொண்டிருந்த தனசேகரன், பயணத்தின் நடுவே திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலியால் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக வெளியான செய்திகளின் படி, கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று (செப்டம்பர் 10) சென்னையில் விமானம் தரையிறங்கிய பிறகு, மற்ற பயணிகள் அனைவரும் விமானத்தில் இருந்து இறங்கிய பிறகும் தனசேகரன் அங்கேயே அமர்ந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைப் பார்த்த கேபின் குழுவினர், அவர் தூங்கிவிட்டதாக எண்ணி அவரை எழுப்ப முயற்சித்துள்ளனர். ஆனால், அவர் விழித்துக் கொள்ளாததால் சந்தேகித்த குழுவினர், உடனடியாக தரைக்கட்டுப்பாட்டு அதிகாரிகளிடம் நிலைமையை தெரிவித்துள்ளனர்.
அதனையடுத்து, அவரை விமான நிலையத்தின் அவசர மருத்துவ மையத்துக்குக் கொண்டு சென்று மருத்துவர்கள் சோதித்த போது, அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.
அதன் பிறகு, அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததாகவும், அவரது மரணம் குறித்து குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.