எமிராட்டிஷேசன் திட்டத்தில் 200 காலிப்பணியிடங்களுக்கு நேர்காணல் நடத்தும் RTA..!!

துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) வரவிருக்கும் வேலைவாய்ப்பு முகாமில் பல்வேறு பொறியியல் மற்றும் அறிவியல் துறைகளில் உள்ள 200 காலிப்பணியிடங்களுக்கு, எமிராட்டிஷேசன் திட்டத்தின் ஒரு பகுதியாக எமிராட்டிகளை பணியமர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த வேலைவாய்ப்பு முகாம் மூலம், RTAவின் அறிவியல் நிபுணத்துவம் மற்றும் தொழில்முறை நடைமுறைகளைப் பயன்படுத்த எமிராட்டி பட்டதாரிகளையும் திறமையாளர்களையும் பணியமர்த்துவதே ஆணையத்தின் நோக்கமாகும் என்றும் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.
இது குறித்து RTAவின் கார்ப்பரேட் நிர்வாக ஆதரவு சேவைகள் துறையின் மனித வளங்கள் மற்றும் மேம்பாட்டுத் துறையின் இயக்குநர் அதாரி முகமது அவர்கள் பேசுகையில், இந்த வேலைவாய்ப்பு முகாமில் வழங்கப்படும் பணி நியமனமானது, எமிராட்டிஷேசன் உத்திக்கான ஆணையத்தின் வருடாந்திர பங்கேற்பினை அடிக்கோடிட்டுக் காட்டுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அந்த வகையில், புதிய பல்கலைக்கழகம், கல்லூரி மற்றும் நிறுவன பட்டதாரிகளை இந்த முகாம் ஈர்க்கும் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும், பல்வேறு ஒர்க் ஷாப்புகளை நடத்துவதன் மூலம், RTA அதன் ஊழியர்களுக்கு கற்றல் மற்றும் பயிற்சியை ஊக்குவிக்கும் பணிச்சூழலை வழங்குவதுடன் எமிராட்டிகளின் திறமைகளை வளர்ப்பதில் கவனம் செலுத்துகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
வேலைவாய்ப்பு மற்றும் நெட்வொர்க்கிங் உட்பட பல்வேறு திறன் மேம்பாடுகளைத் தேடி வரும் 15,000க்கும் மேற்பட்ட பார்வையாளர்களை இந்த வேலைவாய்ப்பு முகாம் வரவேற்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் RTA தரப்பில் கூறப்படுகிறது.
அத்துடன், துபாய் வேர்ல்ட் ட்ரேட் சென்டரில் செப்டம்பர் 19 முதல் 21 வரை நடைபெறும் ‘Ru’ya – Careers UAE Redefined 2023’ இல் நேரில் நேர்காணலில் கலந்து கொள்ளலாம் அல்லது ஆன்லைனில் பதிவு செய்யலாம் என்றும் RTA தெரிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.