அமீரக செய்திகள்

துபாய்: மொபைல் ஃபோன் பயன்படுத்தியவாறே வாகனம் ஓட்டியதால் மட்டும் 99 விபத்துகள் பதிவு..!! காவல்துறை தகவல்..!!

துபாயில் நடப்பு ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் கிட்டத்தட்ட 35,000 க்கும் மேற்பட்ட நபர்கள் மொபைல் போன்களைப் பயன்படுத்தியவாறே வாகனம் ஓட்டியதற்காக பிடிபட்டுள்ளதாக துபாய் காவல்துறை அறிவித்துள்ளது.

மேலும், இத்தகைய பொறுப்பற்ற வாகன ஓட்டிகளின் ஆபத்தான நடைமுறை 99 விபத்துகளை ஏற்படுத்தியுள்ளது என்றும் இதன் விளைவாக ஆறு பேர் உயிரிழந்த நிலையில் 58 பேர் காயம் அடைந்துள்ளனர் என்றும் காவல்துறை இன்று (வெள்ளிக்கிழமை) தெரிவித்துள்ளது.

பொதுவாக வாகனம் ஓட்டும்போது மொபைல் போன்களைப் பயன்படுத்தும் வாகன ஓட்டிகளின் கவனம் சிதறடிக்கப்படும். அவர்களின் கவனம் சாலையில் இல்லாததால், திடீரென பாதையை மாற்றுவது, சிவப்பு விளக்குகளைத் தாண்டுவது மற்றும் நெடுஞ்சாலைகளில் குறைந்தபட்ச வேக வரம்பிற்குக் கீழே மெதுவாக வாகனம் ஓட்டுவது போன்ற விதிமீறல்களில் ஈடுபடுகிறார்கள்.

இது தொடர்பாக போக்குவரத்து பொதுத் துறையின் இயக்குநர் மேஜர் ஜெனரல் சைஃப் முஹைர் அல் மஸ்ரூய் அவர்கள் எச்சரித்தபோது, ​​வாகனம் ஓட்டும்போது தொலைபேசியைப் பயன்படுத்துவது ஓட்டுநரின் கவனத்தைத் திசைதிருப்புவது மட்டுமல்லாமல், விபத்துக்களின் வாய்ப்பையும் கணிசமாக அதிகரிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

வாகனம் ஓட்டும்போது சமூக ஊடகங்கள் அல்லது குறுஞ்செய்திகளை சரிபார்க்கும் போது ஏற்படும் தற்காலிக கவனச் சிதறலினால் பெரிய விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே, சாலையில் செல்போன் பயன்படுத்தும் வாகன ஓட்டிகளுக்கு 800 திர்ஹம் அபராதமும் நான்கு பிளாக் பாயின்ட்களும் விதிக்கப்படும் என துபாய் காவல்துறை எச்சரித்துள்ளது.

சாலையை கண்காணிக்கும் கேமராக்கள்:

அமீரகத்தின் சாலைகளில் நிறுவப்பட்டுள்ள ஸ்மார்ட் தொழில்நுட்பங்கள் தவறு செய்யும் ஓட்டுநர்களை காட்டிக் கொடுக்கின்றன. இது தொடர்பாக துபாய் காவல்துறை வெளியிட்ட வீடியோவில், அத்துமீறலை எப்படி எளிதாக கேமராவில் படம் பிடிக்கிறது என்பது காட்டப்பட்டுள்ளது.

இதுபோன்ற சாலை விதிமீறல்களை ரேடார் கருவிகள் எளிதாகக் கண்டுபிடித்து விடும். அதாவது, சரியான பாதையில் செல்லத் தவறியது, சீட் பெல்ட் அணியாதது மற்றும் திடீர் விலகல் போன்ற விதிமீறல்களை அடையாளம் காணும் என்று கூறப்படுகிறது.

ஆகையால், சாலைப் பயனர்கள் அனைவரும் போக்குவரத்து விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்றும் வாகனம் ஓட்டும்போது கவனத்தை சிதறடிக்கும் எதையும் தவிர்க்கவும் அல் மஸ்ரூய் அழைப்பு விடுத்துள்ளார்.

Related Articles

Back to top button
error: Content is protected !!