அமீரக செய்திகள்

துபாயில் மெட்ரோ, பேருந்துகளுக்கு இனி சாம்சங் மொபைல் மூலம் பணம் செலுத்தலாம்.. டிஜிட்டல் நோல் கார்டை அறிமுகம் செய்த RTA!!

துபாயில் சாம்சங் மொபைல் ஃபோன்களைப் பயன்படுத்துபவர்கள், NolPay செயலியில் டிஜிட்டல் நோல் கார்டை நிறுவுவதன் மூலம் துபாய் எமிரேட்டில் உள்ள பொதுப் போக்குவரத்தில் பயணிப்பதற்கான கட்டணங்களை தங்களின் மொபைல் போன் மூலமாகவே செலுத்தும் வசதி இப்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அதாவது, சாம்சங் பயனர்கள் தங்கள் மொபைலில் nolPay செயலியைப் பதிவிறக்கிய பின்னர் தங்கள் ஸ்மார்ட் போன் அல்லது ஸ்மார்ட்வாட்ச் மூலம் டிஜிட்டல் பேமண்ட் முறையை மேற்கொள்ள முடியும் என்று துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

துபாய் வேர்ல்ட் டிரேட் சென்டரில் நடைபெற்ற Gitex Global 2023 தொழில்நுட்பக் கண்காட்சியின் போது, இந்த டிஜிட்டல் சேவை தொடர்பான ஒப்பந்தத்தில் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) மற்றும் Samsung Gulf Electronics ஆகியவை கையெழுத்திட்டதை தொடர்ந்து தற்போது இந்த டிஜிட்டல் சேவை நடைமுறைக்கு வந்துள்ளது.

இந்த டிஜிட்டல் நோல் கார்டுகள் பொதுப் போக்குவரத்திற்கான டிஜிட்டல் பேமெண்ட்டுகளுக்கு மட்டுமல்லாமல், துபாயில் உள்ள பல்வேறு சில்லறை விற்பனை நிலையங்களிலும் பயன்படுத்தப்படலாம் என்று RTA தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, குடியிருப்பாளர்கள் குறிப்பிட்ட மளிகை பொருட்கள், பொது பூங்காக்கள், அருங்காட்சியகங்கள் மற்றும் பலவற்றிலும் டிஜிட்டல் நோல் கார்டைப் பயன்படுத்தி தங்களின் மொபைல் போன் மூலமாகவே பணம் செலுத்திக் கொள்ளலாம்.

மேலும், இந்த டிஜிட்டல் சேவை குறித்து RTA அதிகாரிகள் விவரிக்கையில், துபாயை உலகின் முதன்மையான ஸ்மார்ட் சிட்டியாக நிலைநிறுத்துவதற்கான அரசாங்கத்தின் பார்வையை முன்னேற்றுவதற்கு இந்த ஒப்பந்தம் பங்களிக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.

இந்த டிஜிட்டல் சேவை குறித்து சாம்சங் நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் பேசுகையில், புதிய டிஜிட்டல் நோல் கார்டுகள் பயணிகள் மற்றும் நுகர்வோரின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், இது அவர்களின் ஒட்டுமொத்த அனுபவத்தை மேம்படுத்த உதவும் என்றும் கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!