அமீரக செய்திகள்

UAE: கோர்ஃபாக்கானில் நீங்கள் இலவசமாகப் பார்க்கக்கூடிய ஐந்து முக்கிய இடங்கள்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தின் குடியிருப்பாளர்கள் பெரும்பாலும் செல்லக்கூடிய முக்கிய சுற்றுலா தலங்களில் கோர்ஃபாக்கானும் ஒன்றாகும். கரடுமுரடான ஹஜர் மலைகள் மற்றும் அழகிய கடற்கரைகளைக் கொண்டு பிரம்மிக்க வைக்கும் கோர்ஃபாக்கானில் நீங்கள் இலவசமாகப் பார்க்கக்கூடிய ஐந்து இடங்கள் உள்ளன. அவற்றைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

1. அல் ரஃபிசா அணை (Al Rafisah Dam):

நீங்கள் இயற்கை ஆர்வலராக இருந்தால், அல் ரஃபிசா அணை ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். அங்கிருக்கும் பசுமையான நிலப்பரப்புகள் மற்றும் மனிதனால் உருவாக்கப்பட்ட நீர்வீழ்ச்சி மற்றும் ஹஜர் மலைகளால் சூழப்பட்ட நீர் தேக்கம் உங்களை இயற்கையின் ஆழத்திற்கு அழைத்துச் செல்லும்.

நீங்கள் ஷார்ஜா-கோர் ஃபக்கான் நெடுஞ்சாலையில் சென்றால், ஒரு மணி நேரத்திலேயே அல் ரஃபிசா அணையைச் சென்றடையலாம். அங்கு ஏரிக் காட்சியுடன் கூடிய உணவகம், குழந்தைகளுக்கான வெளிப்புற விளையாட்டு பகுதிகள், ஓய்வு பகுதி, ஒரு மசூதி போன்றவற்றைக் காணலாம்.

அல் ரஃபிசா அணையில் உங்களுக்காக காத்திருக்கும் செயல்பாடுகள்: நீங்கள் அணையை இலவசமாகப் பார்வையிடலாம் என்றாலும், பெடல் படகுகள் அல்லது டோனட் படகுகளில் (pedal boats or doughnut boats) குறிப்பிட்ட கட்டணத்தில் சவாரியை அனுபவிக்கலாம்.

அங்கு கயாக்கிங் (kayaking) செய்வதற்கு ஒரு நபருக்கு 30 திர்ஹம் மற்றும் ஒரு குடும்பத்திற்கு 250 திர்ஹம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. மேலும், நீங்கள் கயாக்கிங் செய்யும் போது, பல்வேறு வகையான பறவைகள், மீன்கள் மற்றும் ஹஜர் மலைத்தொடரின் பரந்த காட்சிகளை ரசிக்கலாம்.

அதேசமயம், அலாதியான அனுபவத்தைப் பெற வேண்டுமெனில், மலையின் விளிம்பிற்கு செல்லும் 730 மீ நடைபாதையைச் சுற்றி நடைபயணம் மேற்கொள்ளலாம். அல் ரஃபிசா அணையில் அமைக்கப்பட்டுள்ள பல இருக்கைகளில் அமர்ந்தவாறே நீர்வீழ்ச்சியின் அழகை ரசிக்கலாம்.

2. ஷீஸ் பார்க் (Shees Park)

ஷார்ஜாவின் வாதி ஷீஸில் அமைந்துள்ள ஷீஸ் பூங்கா ஹஜர் மலைகளுக்கு இடையில் அமைந்துள்ளது. பார்வையாளர்கள் கோர்பக்கன் சாலை S142/E55 வழியாக இப்பகுதியை அடையலாம். நீங்கள் செல்லும் வழியிலேயே, பாரம்பரிய குடியிருப்புகள், விவசாய நிலங்கள் மற்றும் பேரீச்சம்பழ தோட்டங்களை பார்க்கலாம்.

சுமார் 11,300 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள பூங்காவில் குழந்தைகள் விளையாடும் பகுதி, அர்ப்பணிக்கப்பட்ட பார்பிக்யூ பகுதிகள் மற்றும் மனிதனால் உருவாக்கப்பட்ட 25 மீட்டர் உயர நீர்வீழ்ச்சி போன்றவை உள்ளன.

3. கோர்ஃபக்கன் பீச்:

சுமார் மூன்று கிலோமீட்டர் தொலைவிற்கு நீண்டிருக்கும் இந்த பிறை வடிவ கடற்கரை பார்வையாளர்களுக்கு பல்வேறு நீர் விளையாட்டு நடவடிக்கைகளை வழங்குகிறது. இதில் மீன்பிடித்தல், டைவிங், பாராசெய்லிங், கயாக்கிங் மற்றும் ஜெட் ஸ்கை போன்றவை அடங்கும்.

4. அல் சுஹுப் ரெஸ்ட் ஏரியா:

இது கடல் மட்டத்திலிருந்து 600 மீட்டர் உயரத்தில் இருப்பதால், கோர்பக்கான் நகரத்தின் அற்புதமான காட்சிகளை வழங்குகிறது. இங்கு 30 மீட்டர் விட்டம் கொண்ட இரண்டு மாடி பறக்கும் தட்டு வடிவ கட்டிடம் உள்ளது. உச்சிக்கு செல்ல வேண்டுமெனில், முதலில் நகரின் கடற்கரையோரமாக S104 (ருகைலட் சாலை – Rugaylat Road) வழியாக செல்ல வேண்டும்.

5. கோர்பக்கன் ஆம்பிதியேட்டர் மற்றும் நீர்வீழ்ச்சி

ரோமானிய கட்டிடக்கலையால் ஈர்க்கப்பட்ட கோர்பக்கன் ஆம்பிதியேட்டர், முதன்முதலில் 2020 இல் திறக்கப்பட்டது. இது 1,700 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது மற்றும் ஒரே நேரத்தில் 3,500 பார்வையாளர்களை அனுமதிக்கும்.

இது நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு சிறந்த வெளிப்புற இடமாக அமைகிறது. சூரிய மறைவிற்கு பிறகு, முழு ஆம்பிதியேட்டரும் பிரகாசமாக ஒளிரும். நீங்கள் மேலிருந்து பார்த்தால், கோர்ஃபக்கன் கார்னிச்சின் பரந்த காட்சிகளை ரசிக்கலாம்.

இந்த ஆம்பிதியேட்டரை ஒட்டி, 45 மீட்டர் உயரமுள்ள ‘Waterfall Cave’ நீர்வீழ்ச்சி உள்ளது. இது மனிதனால் உருவாக்கப்பட்டது என்றாலும், இரவில் விளக்குகளால் ஒளிரும் போது அற்புதமாக காட்சியளிக்கும். அதுமட்டுமின்றி, நீர்வீழ்ச்சியிலும் மேலே பார்க்கும் ஜன்னல்களுடன் கட்டப்பட்டிருப்பதால், அங்கிருந்து பொதுமக்கள் பாறைகளில் தண்ணீர் ஓடுவதைக் காணலாம்.

Related Articles

Back to top button
error: Content is protected !!