அமீரக செய்திகள்

இந்தியாவின் 100 பெறும் பணக்காரர்களில் இடம்பிடித்த 6 அமீரக வாழ் இந்தியர்கள்.. யார் யார்னு தெரியுமா..?

அமெரிக்காவின் பிரபல பத்திரிக்கை நிறுவனமான ஃபோர்ப்ஸ் (Forbes) 2023ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் 100 பெறும் பணக்காரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த தரவரிசைப் பட்டியலில் ஐக்கிய அரபு அமீரகத்தை தலைமையிடமாக கொண்டு தொழில் புரிந்து வரும் ஆறு இந்திய தொழிலதிபர்களும் இடம்பிடித்துள்ளனர். அதிலும் அந்த ஆறு பேரில் ஐந்து தொழிலதிபர்கள் அவர்களில் ஐந்து பேர் தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

மேலும், இந்த பட்டியலில் சுமார் 92 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி அவர்கள் முதலிடத்தைப் பிடித்துள்ளார். அவரையடுத்து, அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி 68 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

அமீரகவாழ் இந்திய தொழிலதிபர்கள்

ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள பட்டியலில், உலகில் வேகமாக வளர்ந்து வரும் ஹைப்பர் மார்க்கெட்-சூப்பர் மார்க்கெட் நெட்வொர்க்குகளில் ஒன்றான லுலு குழுமத்தின் தலைவர் யூசுபலி 27 வது இடத்தை பிடித்துள்ளார். கடந்த ஆண்டு 5.4 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 35வது இடத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, அமீரகத்தை தளமாகக் கொண்ட இந்திய வணிகர்களின் பட்டியலில் இவரே முதலிடத்தில் இருக்கிறார்.

அடுத்தபடியாக, சுமார் 4.8 பில்லியன் டாலர் சொத்துகளுடன் மேக்ஸ் (Max), சென்டர் பாயிண்ட் (Centrepoint), பேபிஷாப் (Babyshop) , இ-மேக்ஸ் (EMax) உள்ளிட்ட நிறுவனங்களின் தாய் அமைப்பான லேண்ட்மார்க் குழுமத்தின் (Landmark Group) தலைவர் ரேணுகா ஜக்தியானி 44வது இடத்தைப் பிடித்துள்ளார். 2022 இல், அவரது சொத்து மதிப்பு 2.9 பில்லியன் டாலர்களாக இருந்துள்ளது.

மேலும், மத்தியக்கிழக்கில் மிகப்பெரிய நகைக்கடை நெட்வொர்க்கைக் கொண்ட அலுக்காஸ் குழுமத்தின் நிறுவனர் ஜாய் ஆலுக்காஸ், கடந்த ஆண்டு 69வது பணக்கார இந்தியராக இருந்து தற்போது 4.4 பில்லியன் டாலர் நிகர மதிப்புடன் 50வது இடத்திற்கு உயர்ந்துள்ளார்.

இந்தப் பட்டியலில் இளம் இந்திய தொழிலதிபராக டாக்டர் ஷம்ஷீர் இடம்பிடித்துள்ளார். இவரது சொத்து மதிப்பு 3.7 பில்லியன் டாலர்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 57வது இடத்தில் உள்ள டாக்டர் ஷம்ஷீர், அரபு பிராந்தியத்தில் லைஃப்லைன், லைஃப்கேர் உள்ளிட்ட மருத்துவமனைகளுடன் மிகப்பெரிய சுகாதார சேவை நிறுவனமான புர்ஜீல் (Burjeel) ஹோல்டிங்ஸின் நிறுவனர் ஆவார். அதுமட்டுமின்றி, பட்டியலில் இடம்பெற்றுள்ள பணக்கார இந்திய மருத்துவர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.

இவரைத் தொடர்ந்து, RP குழுமத்தின் நிறுவனர் ரவிப்பிள்ளை அவர்கள், 3.2 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 69வது இடத்தில் உள்ளார். மத்திய கிழக்கில் அதிக எண்ணிக்கையிலான இந்தியர்கள் பணிபுரியும் மிகப்பெரிய நிறுவனங்களில் RP குழுமம் உள்ளது. இந்த நிறுவனம் அரேபிய நாடுகளில் Oil & Gas துறையில் பல ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

இதற்கு அடுத்ததாக இந்தப் பட்டியலில் 78வது இடத்தை பிடித்துள்ளவர் GEMS குழுமத்தின் தலைவர் சன்னி வர்கி ஆவார். இவரின் நிகர சொத்து மதிப்பு 2.93 பில்லியன் டாலர்கள் ஆகும். உலகில் உள்ள தனியார் மழலையர் பள்ளி முதல் Grade-12 வரையிலான எண்ணற்ற பள்ளிகள் அமீரகமெங்கும் GEMS குழுமத்தால் நிர்வகிப்பட்டு வருகிறது.

மேலும் மேற்கூறிய இந்த ஆறு தொழிலதிபர்களில் யூசுபலி, ஜாய் ஆலுக்காஸ், டாக்டர் ஷம்ஷீர், ரவி பிள்ளை மற்றும் சன்னி வர்கி ஆகியோர் தென்னிந்திய மாநிலமான கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் லேண்ட்மார்க் குழுமத்தின் தலைவர் மட்டுமே வடஇந்தியாவைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!