அமீரக செய்திகள்

துபாய்: 1.5 மில்லியன் திர்ஹம்ஸ் விலையில் 4 கிலோ தங்கத்தால் செய்யப்பட்ட சைக்கிள் விற்பனை…!!

தங்கத்தின் நகரமான துபாயில் தங்கத்தால் செய்யப்பட்ட பிரிட்டிஷ் பந்தய சைக்கிள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. சுமார் 4 கிலோ தங்கத்தால் செய்யப்பட்ட இந்த சைக்கிளின் விலை 1.5 மில்லியன் திர்ஹம்கள் ஆகும். அதாவது சொகுசு காரான ரோல்ஸ் ராய்ஸை விட இதன் விலை அதிகம்.

ஏற்கனவே, தங்கமுலாம் பூசப்பட்ட கடிகாரங்கள் முதல் கார் வரை ஏராளமான தங்கத்தால் செய்யப்பட்ட படைப்புகளை துபாய் பார்த்திருக்கிறது. அந்த வரிசையில், இந்த சைக்கிள் புதிய படைப்பாகும்.

இது தொடர்பாக வெளியான செய்திகளின்படி, சவுதியின் தலைநகரான ரியாத்தை சேர்ந்த அல் ரொமைசான் கோல்ட் அண்ட் ஜூவல்லரி என்ற நிறுவனம், 7 கிலோ எடை கொண்ட இந்த சைக்கிளை துபாயில் உருவாக்கியுள்ளது.

தங்கத்தில் ஜொலிக்கும் ரேசிங் சைக்கிள்:

இந்த பிரிட்டிஷ் ரேசிங் சைக்கிளின் ஹேண்டில்பார்கள் முதல் சக்கரம் வரை மற்றும் கியர் செயினின் ஒவ்வொரு ரிட்ஜ் உட்பட ஒவ்வொரு பகுதியும் 24K தங்கத்தால் உருவாக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக அல் ரொமைசான் ஜூவல்லரியின் CEO முகமது அப்பாஸி என்பவர் பேசுகையில், இந்த சைக்கிளை வடிவமைத்து உருவாக்க 20 பணியாளர்கள் ஆறு மாதங்கள் உழைத்ததாகக் கூறியுள்ளார். இதில் டயர்கள், பிரேக்குகள், இருக்கை மற்றும் அவை தொடர்பான பாகங்கள் தங்கத்தால் செய்யப்பட்டவை அல்ல என்பதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இது அல் ரொமைசானின் முதல் தயாரிப்பு என்று கூறிய அவர், இது விலைமதிப்பற்ற தங்கத்தின் 18K, 21K, 22K மற்றும் 24K வகைகளில் உருவாக்கப்படலாம் என்பதையும் தெரிவித்துள்ளார்.

இந்த கோல்டு சைக்கிளானது, சமீபத்தில் ஷார்ஜா எக்ஸ்போவில் நடைபெற்ற வாட்ச் மற்றும் ஜூவல்லரி கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த போது, பார்வையாளர்களை பிரம்மிப்பில் ஆழ்த்தியுள்ளது. அதுமட்டுமின்றி, இந்தத் தனித்துவமான படைப்பை யார் வேண்டுமானாலும் வாங்கலாம் என்றும், ஏற்கனவே ஐந்து ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் இதை வாங்குவதற்கு தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button
error: Content is protected !!