அமீரக செய்திகள்

UAE: வாகனம் ஓட்டும்போது மழை பெய்வதை வீடியோ எடுத்தாலும் 800 திர்ஹம்ஸ் அபராதம், 4 ப்ளாக் பாய்ண்ட்ஸ்.. வானிலை தொடர்பான விதிமீறல்கள் மற்றும் அபராதங்கள் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை…

ஐக்கிய அரபு அமீரகத்தில் பல்வேறு எமிரேட்களில் பத்து நாட்களுக்கும் மேலாக இடியுடன் கூடிய கனமழை பெய்து வருவதால், சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே, வாகன ஓட்டிகள் மழைநேரங்களில் பாதுகாப்பாக ஓட்டவும், போக்குவரத்து விதிகளைப் பின்பற்றவும் அமீரகத்தில் உள்ள அதிகாரிகள் நினைவூட்டலை வழங்கியுள்ளனர். மழை நேரங்களில் போக்குவரத்து விதிகளுக்கு இணங்கத் தவறுபவர்கள் மீது கடுமையான அபராதம் விதிக்கப்படும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

அமீரகத்தின் தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM), வியாழன் அன்று நாட்டின் பல பகுதிகளில் கனமழை பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், அடுத்த இரண்டு நாட்களுக்கு தீவிரமான மழை நீடிக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஏற்கனவே இந்த ஆண்டு மே மாதம், நாட்டின் உள்துறை அமைச்சகம் வானிலை தொடர்பான 10 போக்குவரத்து விதிமீறல்களுக்கு 2,000 திர்ஹம் வரை அபராதம், 23 பிளாக் பாயின்ட்கள் மற்றும் இரண்டு மாதங்களுக்கு வாகனங்கள் பறிமுதல் என கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்திருந்தது.

வானிலை தொடர்பான 10 போக்குவரத்து விதிமீறல்கள் மற்றும் அபராதங்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

கவனத்தைச் சிதறடித்து வாகனம் ஓட்டுதல்:

வாகனம் ஓட்டும்போது வாகன ஓட்டிகள் மழை அல்லது மூடுபனியின் புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை எடுக்கக் கூடாது என்றும், வாகன ஓட்டியின் கவனம் முழுவதுமாக சாலையில் இருக்க வேண்டும் என்று அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். அதாவது வாகனம் ஓட்டும் போது வாகன ஓட்டியின் முழு கவனமும் சாலையில் இருக்க வேண்டும் என்றும் அது தவிர மற்ற செயல்கள் புரிந்தால் அது கவனச்சிதறலாகவே கருதப்படும் என கூறப்பட்டுள்ளது. இதற்கு 800 திர்ஹம் அபராதம், நான்கு பிளாக் பாயின்ட்கள் விதிக்கப்படும்.

ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுதல்:

துபாயில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஆபத்தான முறையில் சாலையில் ஸ்டன்ட் செய்த சுமார் 90 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. எனவே, மற்றவர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் விதமாகவோ, சீரற்ற வானிலையின் போது வாகன ஓட்டிகள் ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுவதையோ தவிர்க்க வேண்டும். இல்லையெனில், 2,000 திர்ஹம் அபராதம், 23 ப்ளாக் பாய்ண்ட்ஸ் மற்றும் 60 நாட்களுக்கு வாகனம் பறிமுதல் செய்யப்படும்.

அபாய விளக்குகளை எரிய விடுதல்:

சில வாகன ஓட்டிகள் மூடுபனி அல்லது மழைக்காலங்களில் வாகனம் ஓட்டும்போது தங்கள் வாகனங்களின் ஹஸார்ட் லைட்களை (hazard lights) எரிய விடுகின்றனர். ஆனால், இது சாலைகளில் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. ஆகவே, வாகன ஓட்டிகள் அபாய விளக்குகளை இயக்க வேண்டாம். மீறினால் 500 திர்ஹம் அபராதம், நான்கு பிளாக் பாயின்ட் விதிக்கப்படும்.

லைட் இல்லாமல் மூடுபனியில் வாகனம் ஓட்டினால்: 500 திர்ஹம் அபராதம், 4 பிளாக் பாயின்ட்கள்

அறிவுறுத்தல்களை மீறி மூடுபனியில் வாகனம் ஓட்டுதல்:

மோசமான வானிலை நிலவும் போது, சாலைகளில் கிடைமட்டத் தெரிவுநிலை குறையும். அந்த சமயத்தில் டிரக்குகள் மற்றும் பேருந்துகள் போன்றவை இயங்குவதற்கு காவல்துறை தடை விதிக்கின்றன. அதை மீறும் வாகன ஓட்டிகள் 500 திர்ஹம் அபராதமும், 4 பிளாக் பாயின்ட்களும் பெறுவார்கள்.

அதிகாரிகளிடம் இருந்து தப்பித்து ஓடுதல்:

ஒரு காவல்துறை அதிகாரி வாகன ஓட்டியை நிறுத்த சொல்லும் போது, நிறுத்தாமல் தப்பி ஓடினால் 800 திர்ஹம் அபராதம், 12 பிளாக் பாயிண்ட்கள்.

மழைநேரங்களில் அபாயமான பள்ளத்தாக்குகளுக்கு அருகில் கூடுதல்:

நாட்டில் உள்ள பெரும்பாலான குடியிருப்பாளர்கள் மழை நேரங்களில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகள் மற்றும் அணைகளுக்கு அருகில் செல்வது எவ்வளவு ஆபத்தானது என்பதை உணராமலேயே பள்ளத்தாக்குகளுக்கு ஓட்டிச் செல்கிறார்கள். இந்த நடைமுறையைத் தடுப்பதற்காகவே 1,000 திர்ஹம் அபராதம் மற்றும் 6 பிளாக் பாயிண்ட்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளம் சூழ்ந்த பகுதிகளுக்குள் நுழைவது:

சில வாகன ஓட்டிகள் வெள்ளம் கரைபுரண்டோடும் பள்ளத் தாக்குகளில் ஓட்டிச் செல்கின்றனர். ஆனால், பலத்த நீரோட்டத்தில் சிக்கி, வாகனங்கள் அடித்துச் செல்லப்படும் அபாயம் உள்ளது. இந்த விதிமீறலுக்கு 2,000 திர்ஹம் அபராதம், 23 ப்ளாக் பாய்ண்ட்ஸ் மற்றும் 60 நாள் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகாரிகளை வேலை செய்யவிடாமல் தடுப்பது:

அவசர காலங்கள், பேரிடர்கள், நெருக்கடிகள் மற்றும் மழையின் போது ஆம்புலன்ஸ் மற்றும் மீட்பு வாகனங்கள் போன்றவற்றைத் தடுப்பது அல்லது போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதில் இருந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளைத் தடுப்பது போன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் 1,000 திர்ஹம் அபராதம், நான்கு ப்ளாக் பாய்ண்ட்ஸ், 60 நாள் வாகனங்கள் பறிமுதல் போன்ற நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும்.

இதற்கிடையில், நாட்டில் உள்ள காவல்துறை அதிகாரிகள் நேற்று (வியாழன், அக்டோபர் 26) மழையில் வாகனம் ஓட்டுவதற்கான பாதுகாப்பு ஆலோசனைகளைப் பகிர்ந்து கொண்டனர். அவற்றைப் பற்றி பின்வருமாறு பார்க்கலாம்:

வாகன ஓட்டிகளுக்கான பாதுகாப்பு வழிமுறைகள்:

  • எப்போதும் வெளியே புறப்படுவதற்கு முன், உங்கள் வாகனத்தின் டயர்களைச் சரிபார்த்து, அவை நல்ல நிலையில் உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
  • வாகனத்தின் கண்ணாடியைத் துடைக்கும் வைப்பர்கள் (windshield wipers) வேலை செய்வதையும் நல்ல நிலையில் இருப்பதையும் உறுதிசெய்யவும்
  • நீர் தேங்கிய பகுதிகள் அல்லது குட்டைகளைக் கடக்கும்போது வேகத்தைக் குறைக்கவும்
  • வாகனங்களைத் தெளிவாகப் பார்க்க பகலில் கூட முகப்பு விளக்குகளைப் பயன்படுத்தவும்
  • அபாய விளக்குகளை (hazard lights) எரிய வைத்து வாகனம் ஓட்ட வேண்டாம்
  • வாகனங்களுக்கு இடையே பாதுகாப்பான தூரத்தை கடைபிடிக்கவும்
  • சாலையில் உள்ள வேக வரம்பு பலகைகளை கடைபிடிக்கவும், தகவல் காட்சி பலகைகளை கண்காணிக்கவும்
  • வாகனம் ஓட்டும் போது  எந்த விதமான கவனச்சிதறலையும் தவிர்க்கவும்
  • பள்ளத்தாக்குகளில் வாகனம் ஓட்டுவதைத் தவிர்க்கவும்

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!