அமீரக செய்திகள்

துபாய் ஏர்போர்ட்டில் பயன்பாட்டிற்கு வந்த 5 புதிய ஸ்மார்ட் கேட்ஸ்.. பாஸ்போர்ட் இல்லாமல் இனி பயணிக்கலாம்.. எப்படி.?

விமான பயணிகள் தங்களின் பயணத்தை எளிதாக மற்றும் சுமூகமாக மேற்கொள்ளவும் அவர்களின் பாதுகாப்பை முன்னிலைபடுத்தியும் துபாய் சர்வதேச விமான நிலையம் பல புதிய தொழில்நுட்ப செயல்முறைகளை கடந்த சில வருடங்களாக தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. அந்த வரிசையில் துபாய் விமான நிலையத்தில் இமிகிரேஷன் செயல்முறையை மிக விரைவில் முடிக்க இப்போது புதிய செயல்முறை நடைமுறைக்கு வந்துள்ளது.

துபாய் சர்வதேச விமான நிலையம் (DXB) டெர்மினல் 3க்கு வரும் மற்றும் புறப்படும் குடியிருப்பாளர்கள், தங்களின் பாஸ்போர்ட் கட்டுப்பாட்டு நடைமுறைகளை, முக அங்கீகார அமைப்பு பொருத்தப்பட்டிருக்கும் மேம்படுத்தப்பட்ட ஸ்மார்ட் கேட்களைப் பயன்படுத்தி சில நொடிகளில் முடிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

இது குறித்து விரிவாக தெரிவிக்கையில், “இப்போது DXB டெர்மினல் 3 இல் ஐந்து புதுப்பிக்கப்பட்ட ஸ்மார்ட் கேட்கள் உள்ளன, இது பயணிகளை தங்கள் ஆப்டிக் மற்றும் முக அங்கீகாரத்தைப் (face recognition) பயன்படுத்தி இமிகிரேஷன் நடைமுறைகளை தடையின்றி மேற்கொள்ள அனுமதிக்கிறது என்று துபாயின் ரெசிடென்ஸ் மற்றும் வெளிநாட்டினர் விவகாரங்களுக்கான பொது இயக்குநரகத்தின் (GDRFA) அதிகாரி கூறியுள்ளார்.

புதிய ஸ்மார்ட் கேட்களை எவ்வாறு பயன்படுத்துவது?

முதலாவதாக, மேம்படுத்தப்பட்ட ஸ்மார்ட் கேட்களைப் பயன்படுத்த, DXB டெர்மினல் 3 இல் பயணிக்கும் குடியிருப்பாளர் தனது பாஸ்போர்ட் அல்லது எமிரேட்ஸ் ஐடியைப் பயன்படுத்தி இதற்காக பதிவு செய்ய வேண்டும்.

அதன் பின் துபாய் விமான நிலையத்தில் பயணிக்கும் குடியிருப்பாளர்கள் ஸ்மார்ட் கேட் வழியாக கேமராவை பார்த்துக் கொண்டு செல்ல வேண்டும். எந்த அடையாள ஆவணத்தையும் ஸ்கேன் செய்ய வேண்டிய அவசியமில்லை.

கண்ணாடிகள், முகமூடிகள் அல்லது தொப்பிகள் உட்பட உங்கள் முகத்தை மறைக்கும் எதையும் அகற்றினால் போதும், அதனால் உங்கள் முக மற்றும் ஒளியியல் பிரிண்ட்டை (facial and optic print) கேமரா தெளிவாக ஸ்கேன் செய்யும்.  இருப்பினும், உங்கள் பாஸ்போர்ட் அல்லது போர்டிங் பாஸ் தேவைப்படும் பட்சத்தில் அதையும் நீங்கள் தயாராக வைத்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்த புதிய முக அங்கீகார அமைப்பு தற்போது DXB டெர்மினல் 3 இல் ஐந்து ஸ்மார்ட் கேட்களில் பயன்பாட்டிற்கு வந்துள்ளதாகவும், விரைவில் டெர்மினல்கள் 1 மற்றும் 2 முழுவதும் இந்த அமைப்பு செயல்படுத்தப்படும் என்றும் GDRFA தெரிவித்துள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!