அமீரக செய்திகள்

அமீரகத்திலிருந்து சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கான விமான கட்டணம் உயர்வு..!! தீபாவளியை முன்னிட்டு 20 சதவீதம் வரை அதிகரிக்கும் என்று தகவல்…

ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் இந்தியர்கள் தாய்நாட்டில் தீபாவளித் திருநாளைக் கொண்டாட விரும்பினால், முன்கூட்டியே விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வது சிறந்தது. ஏனெனில், ஏற்கனவே பெரும்பாலான இந்திய நகரங்களுக்கான விமானக் கட்டணம் அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடும்போது 15 முதல் 20 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.

மேலும், எதிர்வரும் நவம்பர் மாதம் 12-ஆம் தேதி தீபாவளிப் பண்டிகை தொடங்கவுள்ள நிலையில், அமீரகத்திற்கும் இந்தியாவிற்கும் இடையே நவம்பர் மாதம் முதல் வாரத்தில் விமான டிக்கெட்டுகளின் விலை கிடுகிடுவென உயரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக டிராவல் நிறுவன உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த செப்டம்பர் மாதம் முதல் அக்டோபர் இரண்டாம் வாரம் வரை இந்தியாவில் உள்ள பெரும்பாலான இடங்களுக்கு விமானக் கட்டணம் 780 திர்ஹம் முதல் 1,100 திர்ஹம் வரை இருந்ததாகவும், இப்போது இந்தியாவில் பண்டிகை காலம் என்பதால் டிக்கெட் விலை படிப்படியாக அதிகரித்துள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

குறிப்பாக நவம்பர் 6 முதல் 15 வரையிலான பயணத்திற்கு துபாயில் இருந்து சென்னை, பெங்களூரு விமான நிலையங்களுக்கு நேரடி விமானங்களில் 1,200 திர்ஹம்ஸ் முதல் 1,400 திர்ஹம்ஸ் வரை ஒரு வழி கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இது போன்ற சூழலில், பயணிகள் சிலர் இணைப்பு விமானங்களை தேர்வு செய்வதாக டிராவல் ஏஜென்ட்கள் கூறுகின்றனர்.

அதாவது, துபாயிலிருந்து சென்னை, பெங்களூர் உள்ளிட்ட நகரங்களுக்கு நேரடியாகப் பயணிக்காமல், டெல்லிக்கு பயணித்து அங்கிருந்து வேறு ஒரு விமானம் மூலம் பயணிப்பதாகவும் இதற்கு 700 திர்ஹம் மட்டுமே செலவாகிறது என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தியாவின் முக்கிய போக்குவரத்து மையங்களான சென்னை, பெங்களூரு மற்றும் கொல்கத்தா போன்ற நகரங்களுக்கான விமானக் கட்டணங்களும், அமீரகத்தில் இருந்து குறைவான நேரடி விமானங்களை கொண்ட நகரங்களான லக்னோ, வாரணாசி, கண்ணூர், ஜெய்ப்பூர் மற்றும் சூரத் போன்றவற்றிற்கான விமானக் கட்டணங்களும் இரட்டிப்பாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

அதுமட்டுமில்லாமல், நவம்பர் இரண்டாவது வாரத்தில் இருந்து 2024 ஜனவரி முதல் வாரம் வரை விமானக் கட்டணங்கள் உச்சத்திலேயே இருக்கலாம் என்றும், டிக்கெட் விலை சீசனின் போது, குறிப்பாக குளிர்கால பண்டிகை முடியும் வரை 1,800 முதல் 2,800 திர்ஹம் வரை இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!