அமீரக செய்திகள்

அபுதாபிக்குள் நுழைவதற்கான நடைமுறைகளில் மாற்றம்..!! சுற்றுலாவாசிகள் அபுதாபி வர அனுமதி.!! புதிய விதிமுறைகளை அறிவித்த பேரிடர் மேலாண்மைக்குழு..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனாவிற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருந்தாலும் தலைநகரான அபுதாபியில் மட்டும் கொரோனாவிற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கடுமையாகப் பின்பற்றப்பட்டு வருகின்றன. குறிப்பாக, அமீரகத்தின் மற்ற பகுதிகளில் சுற்றுலாவாசிகள் வருவதற்கு அனுமதி அளித்த போதிலும், அபுதாபியில் மட்டும் வெளிநாடுகளில் இருந்து சுற்றுலாவாசிகள் வருவதற்கு தற்பொழுது வரை தடை இருந்து வருகிறது.

மேலும், மற்ற பகுதிகளில் இருந்து அபுதாபிக்கு வரும் நபர்கள் கொரோனாவிற்கான PCR நெகடிவ் டெஸ்ட் ரிசல்ட் வைத்திருக்க வேண்டியது அவசியமான ஒன்றாக உள்ளது.

இந்நிலையில், அபுதாபி நெருக்கடி, அவசரநிலைகள் மற்றும் பேரிடர் மேலாண்மைக் குழு தற்பொழுது வரை அபுதாபியில் நடைமுறையில் இருக்கும் கொரோனாவிற்கான தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை புதுப்பித்துள்ளதாக அறிவித்துள்ளது. தற்பொழுது அறிவித்திருக்கும் புதிய விதிமுறைகள் நாளை (டிசம்பர் 24) முதல் நடைமுறைக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு ஏற்ப பொருளாதார, சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு நடவடிக்கைகளின் செயல்பாட்டு திறனை (capacity) அதிகரித்துக்கொள்ள இக்குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதில் ஷாப்பிங் மற்றும் பொழுதுபோக்கு மையங்கள், உணவகங்கள் மற்றும் நர்சரிகள் ஆகியவை அடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சோதனை நடைமுறைகளில் மாற்றம்

தற்பொழுது வரை அமீரகத்தின் மற்ற பகுதிகளில் இருந்து அபுதாபிக்குள் நுழைவதற்கு 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்டிருக்கும் கொரோனாவிற்கான PCR அல்லது DPI நெகடிவ் டெஸ்ட் ரிசல்ட் வைத்திருக்க அறிவுறுத்தப்பட்ட நிலையில், இனி அபுதாபிக்குள் 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்டிருக்கும் கொரோனாவிற்கான PCR அல்லது DPI நெகடிவ் டெஸ்ட் ரிசல்ட் வைத்திருக்க வேண்டும் என கூறி கொரோனா சோதனைக்கான செல்லுபடி காலத்தை நீட்டித்துள்ளது.

அதே போல், அபுதாபிக்கு வரும் நபர்கள் அபுதாபியில் தொடர்ந்து தங்க நேரிடுமானால் அவர்கள் அபுதாபிக்கு வந்த நான்காவது மற்றும் எட்டாவது நாட்களில் கொரோனாவிற்கான PCR சோதனை மேற்கொள்வது கட்டாயமாக இருந்தது. தற்பொழுது அதில் திருத்தம் செய்யப்பட்டு அபுதாபிக்கு வரும் நபர்கள் தொடர்ந்து அபுதாபியில் தங்கினால் அவர்கள் 6 வது நாளில் கொரோனாவிற்கான PCR சோதனை மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அபுதாபி குடியிருப்பாளர்களுக்கும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள்

அபுதாபியில் கொரோனாவிற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கடுமையாக மேற்கொள்ளப்பட்டு அதன் விளைவாக குறைந்த வீதத்திலேயே கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து வருவதால், சுற்றுலா பயணிகள் அபுதாபி வருவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, வெளிநாடுகளில் இருந்து அபுதாபி வரும் சர்வதேச பயணிகள் பயணத்திற்கு முன் 96 மணி நேரத்திற்குள் மேற்கொள்ளப்பட்ட PCR சோதனையின் நெகடிவ் டெஸ்ட் ரிசல்ட் வைத்திருக்க வேண்டும் எனவும், அவர்கள் அபுதாபி வந்தவுடன் மற்றுமொரு PCR சோதனை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சர்வதேச பயணிகள், குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கான நடைமுறைகளுக்கு குழு ஒப்புதல் அளித்தது.

இந்த நடைமுறைகளில் ‘க்ரீன்’ என்று குறிப்பிடப்பட்ட கொரோனா பாதிப்பு மிகவும் குறைவாக இருக்கும் நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு அளித்தல் மற்றும் பிற நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கான தனிமைப்படுத்தப்பட்ட காலத்தை 10 நாட்களுக்கு மட்டும் குறைத்தல் ஆகியவை அடங்கும்.

அனைத்து பயணிகளும் தொடர்ச்சியாக 6 அல்லது அதற்கு மேற்பட்ட நாட்கள் அபுதாபியில் தங்கியிருந்தால் 6 ஆம் நாளில் PCR பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என்றும், அதே போல் 12 அல்லது அதற்கு மேற்பட்ட நாட்கள் தொடர்ந்து தங்கினால் 12 ம் நாள் PCR பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறைகளானது தொடர்ந்து மதிப்பாய்வு செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து சர்வதேச முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின்படி, ஒரு நோய்த்தொற்றுள்ள நபருடன் தொடர்பு கொண்டவர்கள் தனது 8 வது நாளில் PCR சோதனையில் எதிர்மறை முடிவை பெற்றால் அவர்களின் தனிமைப்படுத்தப்பட்ட காலத்தை 10 நாட்களுக்கு மட்டுமே குறைக்க குழு ஒப்புதல் அளிக்கும் என்று தெரிவித்துள்ளது.

மேலும், முன்னர் அறிவித்தபடி, தேசிய தடுப்பூசி திட்டம் மற்றும் மூன்றாம் கட்ட தடுப்பூசி மருத்துவ பரிசோதனைகளின் பங்கேற்பாளர்கள் அல்-ஹோஸன் (Al-Hosn) அப்ளிகேஷனில் (கோல்டன் ஸ்டார் அல்லது “E”) என்ற ஐகானை பெற்றிருந்தால் அவர்கள் வெளிநாட்டிலிருந்து திரும்பும்போது அல்லது தொற்று உள்ளவருடன் தொடர்பு கொண்டிருந்தாலும் தனிமைப்படுத்தப்பட்ட தேவைகளிலிருந்து விலக்கு அளிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறுதியாக, இந்த குழுவானது தொழில்துறை பகுதிகள் மற்றும் அதிக மக்கள் தொகை அடர்த்தி கொண்ட பகுதிகள் மற்றும் அபுதாபியில் வணிக நடவடிக்கைகளின் ஊழியர்களுக்கு குறிப்பிட்ட கால இடைவெளியில் கொரோனாவிற்கான பரிசோதனை மேற்கொள்வதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் அபுதாபிக்கு வெளியே அமைந்துள்ள SEHA பரிசோதனை மையங்களின் திறனை (capacity) அதிகரிப்பதற்கும் அபுதாபியின் நுழைவு பகுதிகளில் (entry points) அமைந்துள்ள கொரோனா பரிசோதனை மையங்களை மூடுவதற்கும் இந்த குழு ஒப்புதல் அளித்துள்ளது.

மேலும், சமூக உறுப்பினர்கள் தங்கள் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்கும் பொது சுகாதாரத்தைப் பேணுவதற்கும் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுவதற்கான உறுதிப்பாட்டைத் தொடருமாறும் அபுதாபி நெருக்கடி, அவசரநிலைகள் மற்றும் பேரிடர் மேலாண்மைக் குழு குடியிருப்பாளர்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!