துபாய்: அற்புதமான புகைப்படங்களை கிளிக் செய்ய அருமையான பகுதிகள்.. நாளை கடைசி நாள்… எங்கே..??

துபாய் டிசைன் டிஸ்ட்ரிக்ட் பல அற்புதமான கலை மற்றும் வித்தியாசமான வடிவமைப்புகளுடன் பார்வையாளர்கள் கண்டு களிப்பதற்கும் தங்களை புகைப்படங்கள் எடுத்துக்கொள்வதற்கும் சிறந்த இடமாக மாற்றப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் 7 ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சி நாளை (நவம்பர் 12ஆம் தேதி) வரை நடைபெற உள்ளது. அருமையான படங்களைக் கிளிக் செய்ய விரும்புபவர்கள் இந்த இடத்தைப் பார்வையிடலாம்.
நீங்கள் டிசைன் டிஸ்ட்ரிக்ட்டுக்குள் நுழைந்ததும் முதலில் மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களால் செய்யப்பட்ட மிகப்பெரிய காற்றினால் நிரப்பப்பட்ட கலைப்படைப்பு ஒன்றைக் காணலாம். இது கபில் பீமேகரால் நிறுவப்பட்ட ‘தி ரியாலிட்டி செக்’ ஆகும். இந்த மிகப்பெரிய அமைப்பின் மூலம், இன்றைய உலகத்தைப் பற்றிய செய்தியை பீமேகர் சொல்லியிருக்கிறார்.
அதாவது, இன்றைய இன்டர்நெட் உலகில் ஆன்லைனில் அதிக நேரம் செலவிடுகிறோம், அதேவேளை சக மனிதருடன் நேரடியாக தொடர்பு கொள்ள மறந்து விடுகிறோம். எனவே, எது உண்மையானது மற்றும் முக்கியமானது என்பதைப் புலப்படுத்தும் வகையில் இந்தக் கலைப்படைப்பை நிறுவியுள்ளார்.
இதுபோல ஒவ்வொரு கலை நிறுவலுக்குப் பின்னும் உள்ள அற்புதமான செய்தியை அறிந்துகொள்ள ஆர்வமாக பார்வையாளர்கள் வருவதாகக் கூறப்படுகிறது.
அடுத்ததாக, பாலஸ்தீனிய கலைஞர் அரீன் என்பவரின் ‘பாயும் நூல்கள்’ (Flowing Thread) பார்வையாளர்கள் கிளிக் செய்துகொள்ள விரும்பும் வடிவமைப்புகளில் ஒன்றாகும். இந்த கலை வடிவமைப்பில், உலகில் மனிதர்கள் எப்படி இணைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது போல, துணியில் உள்ள ஒவ்வொரு இழையும் எவ்வாறு இணைக்கப்பட்டுள்ளது என்பதைப் பற்றி ஆரீன் சிந்தித்துள்ளார்.
வித்தியாசமான பின்னணியில் தங்களது படங்களை கிளிக் செய்ய விரும்புபவர்கள் நசீஜ் என்ற பெவிலியனுக்கு அருகில் நின்று படம்பிடிக்கலாம். மரப்பலகைகள் ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்ட பெவிலியன் இக்லூவின் வடிவத்தில் உள்ளது. இதை அமீரகத்தைச் சேர்ந்த அல்ஜைனா லூட்டா மற்றும் இந்தியாவைச் சேர்ந்த சாஹில் ரத்தா சிங் ஆகிய இரண்டு கட்டிடக் கலைஞர்கள் சிறந்து உருவாக்கியுள்ளனர்.
நீங்கள் கற்பனை செய்திடாத அளவிற்கு ஒரு மிகப்பெரிய டேபிள் டென்னிசும் இந்த வரிசையில் இடம்பெற்றுள்ளது. நாம் வழக்கமாகப் பார்ப்பதை விட பெரிய டேபிள் டென்னிஸ் என்பதால், பல வீரர்கள் ஒரே நேரத்தில் விளையாட முடியும். இது பலருக்கும் வேடிக்கையான மற்றும் அற்புதமான அனுபவத்தைக் கொடுக்கும்.
இதில் செராமிகா குழுமத்தால் செய்யப்பட்ட சிறப்பு பெரிய பீங்கான் ஸ்லாப்களைப் பயன்படுத்தியிருப்பதாக இதைக் கொண்டு வந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel