UAE: இதுவரை இல்லாதளவு இலாபத்தை பெற்ற எமிரேட்ஸ் குழுமம்..!! 6 மாதங்களிலேயே 10 பில்லியன் திர்ஹம்ஸ் இலாபம் கண்டு சாதனை..!!

துபாயில் இயங்கி வரும் எமிரேட்ஸ் குழுமம் இதுவரை இல்லாதளவில் மிகச்சிறந்த லாபம் அடைந்துள்ளதாக தற்பொழுது அறிவிக்கப்பட்டடுள்ளது. அதாவது இந்நிறுவனம் ஆறு மாதங்களில் சுமார் 10.1 பில்லியன் திர்ஹம் நிகர லாபத்தைப் பதிவுசெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டின் 4.2 பில்லியன் திர்ஹம்சுடன் ஒப்பிடுகையில் 138 சதவிகிதம் அதிகம் என்று கூறப்பட்டுள்ளது.
அதேபோல், 20.6 பில்லியன் திர்ஹம் EBITDA (Earnings Before Interest, Taxes, Depreciation, and Amortization) ஐப் பதிவுசெய்துள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலத்தில் பதிவு செய்யப்பட்ட 15.3 பில்லியன் திர்ஹம்சை விட அதிகம் ஆகும். மேலும், 2023-24 நிதியாண்டிற்கான நிறுவனத்தின் வருவாய் முதல் ஆறு மாதங்களில் 67.3 பில்லியன் திர்ஹம்சாக இருந்துள்ளது, இது கடந்த ஆண்டை விட 20 சதவீத அதிகரிப்பைக் குறிக்கிறது.
உலகெங்கிலும் உள்ள விமானப் போக்குவரத்திற்கான தேவை அதிகரித்திருப்பதால், நிறுவனத்தின் அரையாண்டு நிதி முடிவு சிறப்பாக வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அத்துடன் சமீப காலமாக எமிரேட்ஸ் ஏர்லைன்ஸின் போக்குவரத்து நெட்வொர்க்கானது தொடர்ந்து விரிவுபடுத்தப்பட்டு வருவதும் இலாபத்தை அதிகரிக்கும் என்று கூறப்படுகின்றது.
எனவே, எமிரேட்ஸ் நிறுவனம் அதன் சொந்த வலுவான பண இருப்புகளை வைத்து கடன்கள் உட்பட வணிகத் தேவைகளை பூர்த்தி செய்ய முடிந்ததாகவும் கூறப்படுகிறது. அந்தவகையில், இந்த நிறுவனம் 9.2 பில்லியன் திர்ஹம் அளவில் கொரோனா தொடர்பான கடன்களை திருப்பிச் செலுத்தியுள்ளது.
குழுமத்தின் சிறப்பான முன்னேற்றம் குறித்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் மற்றும் குழுமத்தின் CEO ஷேக் அகமது பின் சயீத் அல் மக்தூம் அவர்கள் பேசுகையில், குழுமம் முந்தைய சாதனைகளை முறியடித்துள்ளதாகவும், கடந்த நிதியாண்டின் மொத்த லாபத்தை 2023-24 ஆம் நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில் எட்டிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்ய சேவை மற்றும் தயாரிப்பு மேம்பாடுகளை செயல்படுத்தியுள்ளதாகவும், கூட்டாண்மைகள் மற்றும் தொழில்நுட்பத்தில் தொடர்ந்து முதலீடு செய்ய உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel