UAE: ஒவ்வொரு ஆண்டும் 1,000 ஊழியர்களை பணியமர்த்தும் எதிஹாட் ஏர்வேஸ்!! விமான நிறுவனத்தின் திட்டம் குறித்து விவரித்த CEO….

ஐக்கிய அரபு அமீரகத்தில் அபுதாபியை மையமாக கொண்டு இயங்கும் எதிஹாட் ஏர்வேஸ் விமான நிறுவனம் அடுத்த ஏழு ஆண்டுகளுக்கு ஆண்டுக்கு சுமார் 1000 ஊழியர்களை பணியமர்த்தும் என்று எதிஹாட் ஏர்வேஸின் CEO அன்டோனால்டோ நெவ்ஸ் (Antonoaldo Neves) தெரிவித்துள்ளார்.
தற்பொழுது நடைபெற்று வரும் துபாய் ஏர்ஷோவின் 2 ஆம் நாளில், கொரோனா தொற்று பரவலுக்குப் பிறகு விமானத்துறை எவ்வாறு மீண்டும் முன்னேறுகிறது என்பதைப் பற்றி பேசிய நெவ்ஸ், அடுத்த ஏழு ஆண்டுகளில் விமான நிறுவனத்தின் நெட்வொர்க்கை இரட்டிப்பாக்க திட்டமிட்டுள்ளாதாக தெரிவித்துள்ளார்.
இந்த வாரம் துபாய் ஏர்ஷோவில் பங்கேற்கும் எதிஹாட் ஏர்வேஸ் அதன் போயிங் 787-9 ஐ விமானக் கண்காட்சியில் காட்சிப்படுத்துகிறது, இது அக்டோபரில் வந்த புதிய 787-10 விமானத்தைத் தொடர்ந்து கடற்படையில் இணைந்த நான்கு புதிய ட்ரீம்லைனர்களில் ஒன்றாகும்.
மேலும், இந்த விமான நிறுவனம் நடப்பு ஆண்டில் 12 புதிய இடங்களை தனது விமான சேவையில் சேர்த்திருப்பதாகவும், அடுத்த ஆண்டு பத்து புதிய இடங்களைச் சேர்க்கப் போவதாகவும் எதிஹாட் ஏர்வேஸ் தெரிவித்துள்ளது.
அத்துடன் வரும் மாதங்களில், இந்தியாவிலும், பாஸ்டன் மற்றும் நைரோபியிலும் புதிய வழித்தடங்களில் விமான சேவை தொடங்க உள்ளதாகக் கூறப்படுகிறது. இவ்வாறு விமான நிறுவனத்தின் விரிவாக்கத் திட்டம் ஆண்டுக்கு ஆண்டு 10 சதவீத வளர்ச்சியை எட்டுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து விமானங்களின் சப்ளை செயின் குறித்துப் பேசிய அவர், விமானங்களுக்கு அதிக தேவை உள்ளதாகவும், ஆனால் தற்போது சந்தையில் விமானங்களின் சப்ளை பெரிதாக இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அபுதாபியின் மிட்ஃபீல்ட் டெர்மினல் பற்றிப் பேசுகையில், எதிஹாட் ஏர்வேஸ் அதன் செயல்பாட்டின் பெரும்பகுதியை புதிய டெர்மினலுக்கு மாற்றியுள்ளதாகவும், அடுத்த ஆண்டு 17 மில்லியன் பயணிகளையும், அடுத்த ஏழு ஆண்டுகளில் 33 மில்லியன் பயணிகளையும் ஏற்றிச் செல்ல உள்ளதாகவும் நெவ்ஸ் கூறியுள்ளார்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel