துபாய் ரன்: 2 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு..!! மக்கள் கூட்டத்தால் அலை மோதிய ஷேக் சையத் சாலை..!!
துபாய் ஃபிட்னஸ் சேலஞ்சின் (DFC) மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அம்சங்களில் ஒன்றான துபாய் ரன் இன்று வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. துபாய் ரன் நிகழ்வின் காரணமாக இன்று காலை, துபாயின் ஷேக் சயீத் சாலையானது துபாய் ரன் நிகழ்வில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான குடியிருப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்களால் நிரம்பி வழிந்து காணப்பட்டது. இந்த துபாய் ரன்னில் 226,000 நபர்கள் பங்கேற்றதாக கூறப்பட்டுள்ளது.
இதில் பெரியவர்கள், சிறுவர்கள், குழந்தைகள் என அனைத்து வயதினரும் ஆராவரத்துடன் கலந்து கொண்டு தங்களின் ஓட்டத்தை நிறைவு செய்தனர்.
இதில் முக்கியமாக துபாயின் பட்டத்து இளவரசரான மாண்புமிகு ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அவர்கள் மற்றும் அவரது குழுவினர், உலகின் மிகப்பெரிய ஓட்ட நிகழ்வான துபாய் ரன்னில் கலந்து கொண்டனர். இது குறித்து துபாய் இளவரசர் “துபாய் ரன்னில் இணைந்த அனைத்து 226,000 பங்கேற்பாளர்களுக்கும் ஒரு பெரிய நன்றி!” என்று சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
Find Your Dream Job Today in UAE/GCC with KHALEEJ TAMIL Jobs Portal
துபாய் ரன்னை முன்னிட்டு துபாயில் மூடப்பட்ட சாலைகளானது காலை 10 மணிக்குப் பிறகு மீண்டும் திறக்கப்பட்டது. தன்னார்வலர்களின் கூற்றுப்படி, காலை 6:30 மணிக்கு அதிகாரப்பூர்வமாக தொடங்கிய நிகழ்வுக்கு மக்கள் அதிகாலை 3:30 மணிக்கே வரத் தொடங்கியதாக கூறப்படுகின்றது.
துபாயின் முக்கிய சாலையாக கருதப்படும் ஷேக் சையத் சாலையானது எப்போதுமே வாகனங்கள் நிறைந்து காணப்படும். வருடத்தின் இந்த ஒரு நாள் மட்டுமே இந்த சாலை வாகனங்கள் இன்றி மக்கள் கூட்டத்தால் அலைமோதும் என்பது குறிப்பிடத்தக்கது.