ராஸ் அல் கைமாவில் இருந்து துபாய் மாலுக்கு புதிய பேருந்து சேவை அறிமுகம்..!! கட்டணம், பயண நேரங்கள் இங்கே..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த நவம்பர் 17ம் தேதி வெள்ளிக்கிழமை முதல், ராஸ் அல் கைமாவில் இருந்து துபாய் மாலுக்கு செல்லும் புதிய பேருந்து வழித்தடம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ராஸ் அல் கைமா குடியிருப்பாளர்கள் 30 திர்ஹம்ஸ் கட்டணத்தில் துபாய் மாலுக்கு பேருந்தில் பயணிக்கலாம்.
கடந்த நவம்பர் 16, வியாழன் அன்று, ராஸ் அல் கைமா போக்குவரத்து ஆணையம் (RAKTA) துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையத்தின் (RTA) ஒத்துழைப்புடன் ஒரு புதிய இண்டர்-எமிரேட் பேருந்து வழித்தடத்தை அறிமுகப்படுத்தியுள்ளதாக அறிவித்திருந்தது. மேலும் இந்த பேருந்து வார இறுதியில் இரண்டு சேவைகளை வழங்குகிறது.
டிக்கெட் கட்டணம்:
- ஒரு வழி பயணத்திற்கு 30 திர்ஹம்.
- ஒரு சுற்றுப் பயணத்திற்கு 60 திர்ஹம்.
- மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இலவசம்.
பேருந்து சேவையின் நேரங்கள்:
இந்த புதிய பேருந்து சேவையானது, வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே கிடைக்கும்.
- ராஸ் அல் கைமாவிலிருந்து துபாய் மால் வரை: பிற்பகல் 2 மணி மற்றும் மாலை 5 மணி
- துபாய் மாலில் இருந்து ராஸ் அல் கைமா வரை: இரவு 7 மணி மற்றும் 10.30 மணி.
பயண நேரம்:
RAKTA Bus இணையதளம் – rakbus.ae இன் படி, ராஸ் அல் கைமாவில் இருந்து துபாய் மால் சென்றடைய ஒரு மணி நேரம் 45 நிமிடங்கள் ஆகும்.
பேருந்து நிறுத்த இடங்கள்:
ராஸ் அல் கைமாவில், அல் தைத் பகுதியில் உள்ள அல் ஹம்ரா பேருந்து நிலையம் பிக்-அப் பாயிண்ட் ஆகும். இங்கிருந்து புறப்படும் RAKTA பஸ், டூரிஸ்ட் டிராப் ஏரியா என்று அழைக்கப்படும் துபாய் மால் பொது பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை இறக்கிவிடும். இது துபாய் மாலின் கீழ் தரை தளத்தில் கிராண்ட் டிரைவ் நுழைவாயிலுக்கு முன்னால் அமைந்துள்ளது.
டிக்கெட் முன்பதிவு செய்வது எப்படி?
நீங்கள் ‘RAKBUS’ செயலி அல்லது RAKTA பேருந்து சேவைகளுக்கான அதிகாரப்பூர்வ இணையதளம் –http://www.rakbus.ae -இன் மூலம், உங்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். ஆன்லைனில் எப்படி முன்பதிவு செய்வது என்பதைப் படிப்படியாக விளக்கும் வழிகாட்டி இங்கே கொடுக்கப்பட்டுள்ளது:
படி 1: பயண விவரங்களை உள்ளிடவும்
- rakbus.ae என்ற இணையதளத்திற்குச் சென்று, உங்கள் புறப்படும் இடத்தை RAK – ‘அல் ஹம்ரா பேருந்து நிலையம்’ மற்றும் ‘துபாய் மால்’ எனத் தேர்ந்தெடுக்கவும்.
- வெளிச்செல்லும் மற்றும் திரும்பும் தேதியை உள்ளிடவும்.
- பயணிகளின் எண்ணிக்கையைத் தேர்ந்தெடுத்து, ‘Find my Journey’ என்பதைக் கிளிக் செய்யவும்.
படி 2: நேரத்தைத் தேர்ந்தெடுக்கவும்
- வெளிச்செல்லும் மற்றும் திரும்பும் பயணத்திற்கான நேரத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
- பின்னர், ‘Continue’ என்பதைக் கிளிக் செய்யவும்.
படி 3: உங்கள் இருக்கையைத் தேர்ந்தெடுக்கவும்
- RAKTA பேருந்தில் உங்கள் இருக்கையை இலவசமாகத் தேர்ந்தெடுக்கலாம். முதியவர்கள், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. கூடுதல் லெக் ரூம் கொண்ட இருக்கைகளைத் தேர்ந்தெடுக்கவும் உங்களுக்கு விருப்பம் உள்ளது.
- ‘Confirm’ என்பதைக் கிளிக் செய்து உங்கள் இருக்கைகளைத் தேர்ந்தெடுக்கவும். ‘Continue’ என்பதைக் கிளிக் செய்யவும்.
படி 3: புதிய கணக்கை உருவாக்கவும்
உங்களிடம் ஏற்கனவே RAKTA கணக்கு இல்லையென்றால், ‘Log In’ என்பதன் கீழ் உள்ள ‘Sign Up’ விருப்பத்தை கிளிக் செய்து, உங்களின் முழு பெயர், தேசியம், மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டு, கடவுச்சொல்லை உருவாக்கவும். அடுத்து, உங்கள் வயதைத் தேர்ந்தெடுக்கவும்.
படி 4: பயணிகளின் விவரங்களை உள்ளிடவும்
நீங்கள் ஒரு கணக்கை உருவாக்கியதும், உங்கள் முழுப்பெயர், மொபைல் எண், வயது, பாலினம் மற்றும் தேசியம் ஆகியவற்றை உள்ளடக்கிய பயணிகளின் விவரங்களை உள்ளிட வேண்டும்.
படி 5: உங்கள் பேமன்ட் முறையைத் தேர்ந்தெடுக்கவும்:
- Pay Now – இந்த விருப்பத்தை நீங்கள் தேர்ந்தெடுத்தால், ஆன்லைனில் உங்கள் கிரெடிட் அல்லது டெபிட் கார்டு மூலம் டிக்கெட்டுகளுக்கு பணம் செலுத்த வேண்டும். இவ்வாறு ஆன்லைனில் செலுத்தும் போது, உங்கள் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரியில் டிஜிட்டல் டிக்கெட்டைப் பெறுவீர்கள். பேருந்தில் ஏறும் முன் டிஜிட்டல் டிக்கெட்டை ஓட்டுநரிடம் காட்ட வேண்டும்.
- Pay at the counter – இந்த விருப்பத்தைத் தேர்ந்தெடுத்தால், நீங்கள் ஒரு குறிப்பு எண்ணைப் பெறுவீர்கள், அதை நீங்கள் ராஸ் அல் கைமாவின் அல் தைத் பகுதியில் உள்ள அல் ஹம்ரா பேருந்து நிலையத்தில் உள்ள டிக்கெட் கவுன்டர்களில் வழங்க வேண்டும்.
ராஸ் அல் கைமாவிலிருந்து குளோபல் வில்லேஜுக்கு பேருந்து:
துபாயில் உள்ள மற்றொரு பிரபலமான இடமான குளோபல் வில்லேஜுக்கு RAKTA பேருந்து சேவையை வழங்குகிறது. ஒவ்வொரு வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் இயக்கப்படும் பேருந்தில் ஒரு பயணத்திற்கான கட்டணமாக 30 திர்ஹம் வசூலிக்கப்படுகிறது.
நேரங்கள்:
- ராஸ் அல் கைமாவிலிருந்து குளோபல் வில்லேஜ் – மாலை 4 மணி
- குளோபல் வில்லேஜில் இருந்து ராஸ் அல் கைமா – இரவு 11 மணி
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel