அமீரக செய்திகள்தமிழக செய்திகள்

கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக சென்னை விமான நிலையம் தற்காலிகமாக மூடல்.. திருப்பிவிடப்படும் விமானங்கள்.. MAA அறிவிப்பு..!!

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் தீவிர மழை பெய்துவருகிறது. குறிப்பாக சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக சென்னை நகரின் முக்கிய பகுதிகள் மற்றும் சாலைகளில் வெள்ளநீர் புகுந்துள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் வெளியில் செல்ல முடியாமல் வீட்டிற்குள்ளேயே அடங்கியுள்ளனர்.

இந்நிலையில் தற்போது வங்கக்கடலில் மையம் கொண்டுள்ளமிக்ஜாம் (michuang cyclone)புயலின் காரணமாக நேற்று முதல் சென்னையில் பலத்த மழை பெய்து வருகிறது. மேலும் இந்த புயல் இன்று முற்பகல் தீவிர புயலாக மாறும் என்றும், இதனால் இன்று இரவு வரையிலும் சென்னையில் கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.

இந்த சூழ்நிலையில் கனமழையின் காரணமாக சென்னை விமான நிலையம் தற்காலிகமாக இன்று முழுவதும் மூடப்படுவதாக விமான நிலையம் அறிவித்துள்ளது. இது குறித்து சென்னை விமான நிலையம் (MAA) தனது அதிகாரப்பூர்வ X தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், வருகை (arrival) பகுதியில் தேங்கியிருக்கும் வெள்ளநீர் காரணமாக விமான நிலையம் மூடப்படுவதாக தெரிவித்துள்ளது. இதற்கு முன்னதாக காலை 11.30 வரையிலும் மூடப்படும் எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

மேலும் கனமழையின் காரணமாக சென்னை விமான நிலையம் வரவேண்டிய விமானங்கள் அருகிலுள்ள விமானநிலையங்களுக்கு திருப்பிவிடப்பட்டுள்ளதாகவும், சென்னையிலிருந்து புறப்படும் விமானங்கள் தாமதமாக புறப்படும் என்றும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போது தீவிர புயலாக மாறிவரும் மிக்ஜான் புயல் காரணமாக சென்னை முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதுடன், பொதுமக்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும், அனைவரும் பாதுகாப்பாக வீட்டிலேயே இருக்கவும் தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!