நகர தூய்மை மற்றும் பணி நெகிழ்வுத்தன்மைக்கான தரவரிசையில் இடம்பிடித்துள்ள துபாய்!! மத்திய கிழக்கு நாடுகளில் துபாய் முன்னணி…
நகரத்தின் தூய்மை, பணி நெகிழ்வுத்தன்மை, குறைந்த வேலையின்மை மற்றும் பெருநிறுவன வரி ஆகியவற்றிற்காக குளோபல் பவர் சிட்டி இன்டெக்ஸ் என்ற தரவு நிறுவனம் நடத்திய ஆய்வில் 2023 இல் துபாய் நகரமானது முன்னணியில் உள்ளது. இது சர்வதேச அளவில் எட்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.
இதன் மூலம், துபாய் ஒட்டுமொத்த தரவரிசையில் முதல் 10 இடங்களுக்குள் இடம்பிடித்த மத்திய கிழக்கின் முதல் நகரம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. மேலும், இந்த தரவரிசைப் பட்டியலில் நியூயார்க், டோக்கியோ, பாரிஸ், சிங்கப்பூர், ஆம்ஸ்டர்டாம் மற்றும் சியோலை விட லண்டன் முதலிடத்தில் உள்ளது.
ஒரு நகரின் பொருளாதாரம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, கலாச்சார தொடர்பு, வாழ்வாதாரம், சுற்றுச்சூழல் மற்றும் அணுகல்தன்மை ஆகிய ஆறு வகைகளை மதிப்பிடுவதன் மூலம் மக்கள், மூலதனம் மற்றும் வணிகங்களை ஈர்க்கும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த குறியீடு சிறந்த நகரங்களை வரிசைப்படுத்தியுள்ளது.
இது குறித்து துபாயின் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகமது அவர்கள் X தளத்தில் வெளியிட்ட பதிவில், “எங்கள் லட்சியங்களுக்கு எல்லையே இல்லை, நமது நாட்டு மக்களின் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன், எதிர்கால நகரங்களுக்கு முன்மாதிரியாக துபாயின் நிலையை வலுப்படுத்துவோம், உலகத் தரத்தை நிர்ணயிக்கும் மைல்கற்களை அடைவோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
அதுமட்டுமல்லாமல், துபாயை உலகளாவிய பொருளாதார சக்தியாக உறுதிப்படுத்தவும், தேசிய திறமைகளை மேம்படுத்தும் மற்றும் உலகம் முழுவதும் உள்ள பிரகாசமான மனதை ஈர்க்கும் உலகத்தரம் வாய்ந்த பணிச்சூழலை வளர்க்க வேண்டும் என்றும் ஷேக் ஹம்தான் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், துபாயின் துணைத் தலைவரும் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷீத் அவர்கள் துபாயின் சிறப்புக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். அதேபோல், துபாய் நகரத்தில் உள்ள வெளிநாட்டவர்களின் எண்ணிக்கையிலும் உலகளவில் முதலிடத்திலும், சொகுசு ஹோட்டல் அறைகளின் எண்ணிக்கையில் இரண்டாவது இடத்திலும் உள்ளது.
2008 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் வெளியிடப்படும் இந்தத் தரவரிசை, வணிகங்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் முதலீட்டிற்கான உலகின் மிகவும் கவர்ச்சிகரமான இடங்களில் ஒன்றாக துபாயை அங்கீகரித்துள்ளது. அத்துடன் டோக்கியோ, இஸ்தான்புல், மாட்ரிட், மாஸ்கோ மற்றும் சிங்கப்பூர் ஆகிய இடங்களை விட அதிக மதிப்பெண்களைப் பெற்று, கலாச்சார தொடர்புத் துறையில் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel