அமீரக செய்திகள்

துபாயில் நிலவிய கடுமையான மூடுபனி.. 51 விபத்துகளுக்கும் 2500க்கும் மேற்பட்ட அவசர அழைப்புகளையும் கையாண்ட துபாய் போலீஸ்!!

துபாயில் இன்றைய தினம் (டிசம்பர் 28, வியாழன்) காலை 5 மணி முதல் 10 மணி வரை அடர்த்தியான கடும் மூடுபனி சூழ்ந்திருந்ததால் சாலைகளில் தெரிவுநிலை மிகவும் குறைந்திருந்தது. இதனால் காலையிலேயே வேலைக்கு சென்ற வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இதனிடையே, சாலைகளில் தெரிவுநிலை மோசமானதால், துபாய் காவல்துறைக்கு மொத்தம் 2,841 அவசர அழைப்புகள் வந்துள்ளதாகவும், இந்த கடும் மூடுபனியால் நடந்த 51 போக்குவரத்து விபத்துகளுக்கும் அதிகாரிகள் பதிலளித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பாக துபாய் காவல்துறையின் போக்குவரத்து பொதுத் துறையின் இயக்குநர் மேஜர் ஜெனரல் சைஃப் முஹைர் அல் மஸ்ரூயி கூறுகையில், நாட்டில் குளிர்காலம் தொடங்கியிருக்கும் நிலையில், வானிலை மாற்றம் குறித்து வாகன ஓட்டிகள் எப்போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், குறிப்பாக ஆண்டின் இந்த மாதங்களில் குறைந்த தெரிவுநிலை மிகவும் கடுமையானதாக இருக்கும் என்றார்.

மூடுபனி தொடர்பான விபத்துக்கள் பற்றி தொடர்ந்து பேசிய அல் மஸ்ரூயி, வாகனங்களுக்கு இடையே பாதுகாப்பான தூரத்தைக் கடைப்பிடிக்கத் தவறுவது உயிரிழப்புகள், காயங்கள் மற்றும் பொருள் இழப்புகளை ஏற்படுத்தும் என்று எச்சரித்துள்ளார்.

இத்தகைய ஆபத்தான போக்குவரத்து விபத்துகளைத் தவிர்க்க, அங்கீகரிக்கப்பட்ட ஊடகங்கள் மற்றும் நாட்டில் உள்ள திறமையான அதிகாரிகள் மூலம் வானிலை முன்னறிவிப்புகள் மற்றும் அறிக்கைகளை தெரிந்து கொள்ள நேரம் ஒதுக்குங்கள் என்று வாகன ஓட்டிகளை அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்

மேலும், எச்சரிக்கையுடன் செயல்படவும், பாதுகாப்பு விதிகளை கடைபிடிக்கவும், மூடுபனி மற்றும் நிலையற்ற வானிலையின் போது வாகனம் ஓட்டும் வேகத்தை குறைக்கவும் வாகன ஓட்டிகளை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். அதேபோல், சைக்கிள் ஓட்டுபவர்கள் மற்றும் இ-ஸ்கூட்டர் ஓட்டுபவர்கள் எல்லா நேரங்களிலும் பிரதிபலிப்பு ஜாக்கெட்டுகளை அணியுமாறு கடுமையாக அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

எப்போதும் மூடுபனியில் வாகனம் ஓட்டும்போது பின்வரும் பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றுமாறு துபாய் காவல்துறை சில குறிப்புகளை வெளியிட்டுள்ளது:

  • வேகத்தைக் குறைக்கவும்
  • அதிகாலை நேரங்களில் வாகன விளக்குகளை பயன்படுத்தவும்
  • மற்றொரு வாகனத்தை முந்திச் செல்ல முயற்சிப்பதைத் தவிர்க்கவும்
  • தேவைப்படும் போது மட்டுமே பாதைகளை மாற்றவும் மற்றும் எப்போதும் இன்டிகேட்டர்களைப் பயன்படுத்தவும்.
  • மற்ற ஓட்டுனர்களின் பார்வைக்கு இடையூறான அதிக வெளிச்சத்தை உண்டாக்கும் விளக்குகளைப் பயன்படுத்த வேண்டாம்
  • வாகனம் ஓட்டும்போது அபாய விளக்குகளை இயக்குவதைத் தவிர்க்கவும்
  • சிறிய விபத்துகள் ஏற்பட்டால் போக்குவரத்தைத் தடுப்பதைத் தவிர்க்கவும்
  • தாமதங்கள் அல்லது போக்குவரத்து நெரிசல்களால் ஏற்படும் மன அழுத்தத்தைத் தணிக்க பயணங்களுக்கு கூடுதல் நேரத்தை ஒதுக்கவும்

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!