UAE: எமிரேட்ஸ் ஐடியை புதுப்பிப்பதில் தாமதம் ஏற்பட்டதால் விதிக்கப்பட்ட அபராதமா..?? எந்தெந்த சந்தர்ப்பங்களில் உங்களால் அபராதங்களிலிருந்து விலக்கு பெற முடியும்..??

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அனைத்து குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களும் எமிரேட்ஸ் ஐடி வைத்திருப்பது கட்டாயமாகும். இது அடையாளம் மற்றும் குடியுரிமைக்கான பெடரல் ஆணையத்தால் (ICP) வழங்கப்படும் தேசிய அடையாள அட்டை ஆகும்.
இத்தகைய அத்தியாவசியமான எமிரேட்ஸ் ஐடியை மக்கள் காலாவதியாவதற்கு முன் புதுப்பிக்க வேண்டும், மாறாக இதனை புதுப்பிப்பதில் தாமதம் ஏற்பட்டால், அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.
இது தொடர்பாக ICP வெளியிட்டுள்ள பதிவின் படி, பின்வரும் மூன்று சூழ்நிலைகளில் ஒருவர் அபராதங்களிலிருந்து விலக்கு பெற விண்ணப்பிக்கலாம் என்று விவரிக்கப்பட்டுள்ளது. ஆகவே, விண்ணப்பதாரர்கள் எப்படி விலக்கு பெற விண்ணப்பிக்கலாம் மற்றும் அபராதங்களில் இருந்து விலக்கு பெற தகுதியுடைய மூன்று சூழ்நிலைகள் என்னென்ன போன்ற விவரங்களைப் பின்வருமாறு பார்க்கலாம்:
1. நாட்டை விட்டு வெளியேறி மூன்று மாதங்களுக்கும் மேலாக நாட்டிற்கு வெளியில் தங்கிய ஒரு தனிநபர் மற்றும் அவரது அடையாள அட்டையின் செல்லுபடியாகும் காலம் அவர்கள் நாட்டை விட்டு வெளியேறிய தேதிக்குப் பிறகு காலாவதியாகி இருத்தல்.
2. ஒரு உத்தரவு, நிர்வாக முடிவு அல்லது நீதித்துறை தீர்ப்பின் மூலம் நாடுகடத்தப்பட்ட பிறகு அல்லது நிலுவையில் உள்ள வழக்குகளில் பாஸ்போர்ட் கைப்பற்றப்பட்டதன் பின் ஒரு நபரின் எமிரேட்ஸ் ஐடி காலாவதியாகிவிட்டதை, தகுதிவாய்ந்த அதிகாரிகளால் வழங்கப்பட்ட கடிதம் அல்லது ரசீது மூலம் நிரூபிக்கப்பட்டால் .
3. அமீரக நேஷனலிட்டியைப் பெறுவதற்கு முன்பும் குடும்பப் புத்தகத்தைப் பெறுவதற்கு முன்பும் எமிரேட்ஸ் ஐடி பெறாத தனிநபர்.
விண்ணப்பிக்கும் வழிகள்:
- ICP வாடிக்கையாளர் மகிழ்ச்சி மையங்கள்
- ICP இன் ஸ்மார்ட் சேவைகள் இணையதளம் – http://smartservices.icp.gov.aeஅல்லது ‘UAEICP’ ஆப்
- ICP இல் பதிவுசெய்யப்பட்ட டைப்பிங் சென்டர்
விலக்கு கோரி ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?
- உங்கள் எமிரேட்ஸ் ஐடியை ஆன்லைனில் புதுப்பிக்க நீங்கள் விண்ணப்பிக்கும் போது, தாமத அபராதம் உட்பட ஐடி புதுப்பித்தலுக்கான ஒட்டுமொத்த கட்டணங்கள் உங்களுக்கு வழங்கப்படும்.
- இந்த கட்டத்தில், விலக்குக்கு விண்ணப்பிக்க உங்களுக்கு விருப்பம் இருக்கும், மேலும் நீங்கள் மேலே பட்டியலிடப்பட்டுள்ள மூன்று வகைகளில் ஏதேனும் ஒன்றின் கீழ் வந்தால், உங்கள் வழக்கை நிரூபிக்க ஆதார ஆவணங்களை நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.
- விலக்குக்கான உங்கள் கோரிக்கையை நீங்கள் சமர்ப்பித்தவுடன், உங்கள் விண்ணப்பம் ICP ஆல் ஏற்றுக்கொள்ளப்பட்டதா அல்லது நிராகரிக்கப்பட்டதா என்பது மின்னஞ்சல் மற்றும் SMS மூலம் உங்களுக்குத் தெரிவிக்கப்படும்.
செலவு: நீங்கள் இலவசமாக எமிரேட்ஸ் ஐடி அபராத விலக்கு கோரி விண்ணப்பிக்கலாம்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel