அமீரக செய்திகள்

துபாய்: கண்களைக் கவரும் ஆயிரக்கணக்கான காகிதத் தேனீக்கள்..!! எக்ஸ்போ சிட்டி துபாயில் நிறுவப்பட்டுள்ள கலைப் படைப்பு….

எக்ஸ்போ சிட்டி துபாயில் உள்ள பசுமை மண்டலத்தின் மையத்தில் மஞ்சள் நிற காகிதத்தில் கையால் வடிவமைக்கப்பட்ட ஓரிகமி தேனீக்களின் கூட்டத்தைக் காட்டும் கலைநிறுவல் அமைக்கப்பட்டுள்ளது.

SWARM என்ற தலைப்பில் உள்ள இந்த கலைப் படைப்பில் ஏராளமான பொதுமக்களும் ஓரிகமி தேனீக்களை மடித்து வைத்து, கார்பன் தடத்தை குறைப்பது, மரங்களை நடுவது என சுற்றுச்சூழலைப் பாதுகாக்க விழிப்புணர்வை ஏற்படுத்தும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு பார்வையாளர்களும் மஞ்சள் நிற காகிதத்தில் இயற்கையை பாதுகாப்பதற்கான தங்கள் உறுதிமொழியை எழுதி, தங்களுக்குச் சொந்தமான மினியேச்சர் ஓரிகமி தேனீயை உருவாக்கி அந்த சிற்பத்தில் இணைத்து வருவதாக கூறப்பட்டுள்ளது.

இந்த கலை நிறுவல் குறித்து பேசிய ஓரிகமி கலைஞர் லியோனி பிராட்லி என்பவர், எக்ஸ்போ சிட்டியில் நிறுவப்பட்டுள்ள சிற்பம் காலநிலை மாநாடு முடிந்ததும் டெர்ரா பெவிலியனுக்குள் கொண்டு செல்லப்படும் என்று கூறியுள்ளார்.

அவர் தொடர்ந்து பேசுகையில், “நாங்கள் சுமார் 900 ஓரிகமி தேனீக்களை மடித்து வைத்துள்ளோம், மேலும் விரைவில் பொதுமக்கள் கூடுதலான தேனீக்களை சேர்ப்பார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், ஒரிகமி தேனீக்களை பொருத்துவதற்கான வயர்ஃப்ரேமை உருவாக்கி, கடந்த ஒரு வாரமாக குழுவுடன் சேர்ந்து தேனீக்களை மடித்து சிற்பத்தில் சேர்த்து வருவதாக பிராட்லி தெரிவித்துள்ளார்.

தேனீக்களைப் பாதுகாப்பதற்கான உலகளாவிய இயக்கம், அனைத்து மகரந்தச் சேர்க்கையாளர்களுக்கும் உதவ உலகளாவிய கூட்டணியாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது. இந்த பிரச்சாரம் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட டிரில்லியன் பீஸ் (Trillion Bees) கூட்டணியின் ஒரு பகுதியாகும்.

இது இரண்டு பில்லியனுக்கும் அதிகமான மக்களைத் திரட்டி, தேனீக்களைப் பாதுகாக்கும், வாழ்விடங்களைப் பாதுகாக்கும் மற்றும் பல்லுயிர் பெருக்கத்தை வளர்க்கும் திட்டங்களுக்கு ஆதரவாக 1 பில்லியன் டாலர் நிதி திரட்டுவதை நோக்கமாகக் கொண்ட அறிவியல் தலைமையிலான முயற்சி என்று கூறப்படுகிறது.

துபாயில் வசிக்கும் மலேசியாவைச் சேர்ந்த கர்மென் லாங் என்பவர், புதிய ஒரிகமி தேனீ குறித்துப் பேசிய போது, “நான் துபாயில் வசிப்பதால் COP28 ஐப் பார்ப்பது நல்லது என்று நினைத்தேன். இந்த அமைப்பானது என் கண்ணைக் கவர்ந்த முதல் விஷயம். சுற்றுச்சூழலை தூய்மையான மற்றும் பசுமையான இடமாக மாற்றுவதற்கான செயல்முறைகளை நான் ஆதரிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

இவரைப் போலவே, இந்த கலை நிறுவலை பார்வையிட்ட பலரும் இயற்கையின் மீது அக்கறை காட்டுவது தொடர்பான உறுதிமொழியை எடுத்து, இந்த அற்புதமான முயற்சிக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!