துபாய்: 332 மில்லியன் திர்ஹம்ஸ் செலவில் புதிய சாலை மேம்பாட்டுத் திட்டம்!! உம் சுகீம் ஸ்ட்ரீட் திட்டத்திற்கான ஒப்பந்தத்தை வழங்கிய RTA….
துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) பயண நேரத்தை கணிசமாகக் குறைப்பதற்கும், போக்குவரத்து ஓட்டத்தை மேம்படுத்துவதற்குமான உம் சுகீம் ஸ்ட்ரீட் திட்டத்திற்கு 332 மில்லியன் திர்ஹம் மதிப்புடைய ஒப்பந்தத்தை வழங்கியுள்ளது.
இத்திட்டம் துபாயின் சாலை உள்கட்டமைப்பை மேம்படுத்த அமீரக துணைத் தலைவரும் பிரதமரும் துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அவர்களின் வழிகாட்டுதலின்படி அறிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 4.6 கிமீ நீளமுள்ள இந்தத் திட்டம், கிங்ஸ் பள்ளிக்கு அருகில் அமைந்துள்ள அல் பர்ஷா சவுத் ஸ்ட்ரீட்டுடன் சந்திப்பை மேம்படுத்தி, ஒவ்வொரு திசையிலும் நான்கு வழிகள் கொண்ட 800 மீட்டர் நீள சுரங்கப்பாதையை உருவாக்குகிறது.
எனவே, இது துபாயில் உள்ள ஷேக் சையத் சாலை, அல் கைல் சாலை, ஷேக் முகமது பின் சையத் சாலை மற்றும் எமிரேட்ஸ் சாலை ஆகிய நான்கு முக்கிய போக்குவரத்து வழித்தடங்களை தடையின்றி இணைக்கும் என RTA அறிவித்துள்ளது.
இதனால் இரு திசைகளிலும் சாலையின் திறன் ஒரு மணி நேரத்திற்கு 16,000 வாகனங்கள் வரை செல்லும் வகையில் மேம்படுத்தப்படுவதுடன் சீரான போக்குவரத்து மற்றும் பயண நேரத்தை 9.7 முதல் 3.8 நிமிடங்கள் வரை கணிசமாகக் குறைக்க முடியும் என்று RTAவின் இயக்குநர் ஜெனரலும் நிர்வாக இயக்குநர்கள் குழுவின் தலைவருமான மட்டர் அல் டயர் தெரிவித்துள்ளார்.
இந்தத் திட்டம் முடிக்கப்பட்டதும், அல் பர்ஷா சவுத் 1, 2, மற்றும் 3 மற்றும் துபாய் ஹில்ஸ் பகுதிகள் உட்பட பல்வேறு குடியிருப்பு மற்றும் மேம்பாட்டுப் பகுதிகளுக்குச் சேவை செய்யும் என்றும் அவர் கூறியுள்ளார்.
எமிரேட்டில் மக்கள்தொகை தேவைகளுக்கு இடமளித்து, சீரான போக்குவரத்து ஓட்டத்தை உறுதி செய்யும் முயற்சியில், துபாயின் பட்டத்து இளவரசரும், துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையத்தின் (RTA) நிர்வாகக் குழுவின் தலைவருமான ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அவர்களால் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
முந்தைய திட்டங்கள்:
துபாயில் உம் சுகீம் ஸ்ட்ரீட் திட்டத்தை மேம்படுத்துவதற்கான ஆரம்ப கட்டம் முதன்முதலில் 2013 இல் முடிக்கப்பட்டது. அப்போது, ஷேக் சையத் சாலைக்கும் அல் கைல் சாலைக்கும் இடையே இரண்டு 3-வழிப் பாலங்கள் RTA ஆல் திறக்கப்பட்டது.
அல் கூஸ் மற்றும் அல் பர்ஷா இடையே பாதசாரி அணுகலை மேம்படுத்த மூன்று பாதசாரி பாலங்கள் உம் சுகீம் தெருவில் கட்டப்பட்டன.
அதையடுத்து 2020 ஆம் ஆண்டில், துபாய் ஹில்ஸ் மால் திட்டத்திற்கு செல்லும் மத்திய 500 மீட்டர் பாலத்தை RTA திறந்தது. இது உம் சுகீம் ஸ்ட்ரீட் சந்திப்பிலும் துபாய் ஹில்ஸ் மற்றும் அல் பர்ஷா பகுதிகளின் நுழைவாயிலிலும் அமைந்துள்ளது. இது ஒவ்வொரு திசையிலும் நான்கு பாதைகளைக் கொண்டுள்ளது மற்றும் ஒரு மணி நேரத்திற்கு 16,000 வாகனங்களைக் கையாளும் திறன் கொண்டது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel