அமீரக செய்திகள்

துபாய்: வங்கி கணக்கில் நூதன முறையில் பணத்தை திருடும் மோசடி கும்பல்..!! 494 பேர் அதிரடியாக கைது..!!

மக்களை ஏமாற்றி மோசடி செய்யும் நபர்கள் இந்தியாவில் மட்டுமல்ல உலகின் எல்லா பகுதிகளிலுமே காணப்படுகிறார்கள். குறிப்பாக சமீப காலமாக வங்கியில் இருந்து பேசுவதாகவும் சமூக வலைதளம் மூலமாகவும் நடத்தப்படும் மோசடி பெருகி வருகிறது. அந்த வகையில் துபாயில் கடந்த ஆண்டு மட்டுமே வங்கி வாடிக்கையாளர்களை குறிவைத்து நடத்தப்பட்டதாக நூற்றுக்கணக்கான மோசடி வழக்குகள் பதிவானதாக கூறப்பட்டுள்ளது.

அவற்றில் 406 வழக்குகளில் தொடர்புடைய 494 நபர்களை துபாய் காவல்துறை அதிரடியாக கைது செய்துள்ளது. அத்துடன் மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட கணிசமான தொகை, மொபைல் போன்கள், மடிக்கணினிகள் மற்றும் சிம் கார்டுகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும், மோசடி செய்பவர்கள் தொலைபேசி அழைப்புகள், மின்னஞ்சல்கள், மற்றும் சமூக ஊடக இணைப்புகள் மூலம், வங்கி வாடிக்கையாளர்களை ஏமாற்றி அவர்களின் சேமிப்பு மற்றும் வங்கிக் கணக்குகளை அணுகியதும் தெரிய வந்துள்ளது. இத்தகைய மோசடி கும்பல் பல ஆண்டுகளாக ஐக்கிய அரபு அமீரகத்தில் செயல்பட்டு வருகின்றனர் மற்றும் அதிகாரிகள் அவர்களுக்கு எதிராக குடியிருப்பாளர்களை பலமுறை எச்சரித்தும் வருகின்றனர்.

இது குறித்து குற்றப் புலனாய்வுக்கான பொதுத் துறையின் செயல் இயக்குநர் பிரிகேடியர் ஹரிப் அல் ஷம்சி பேசுகையில், மொபைல் அழைப்புகளில் ஃபைனான்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறிக்கொள்ளும் எவரிடமும் குடியிருப்பாளர்கள் தங்களுடைய வங்கி விவரங்கள் அல்லது கிரெடிட் கார்டு தகவல்களை தெரிவிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளார்.

பொதுவாக, இத்தகைய மோசடிகளில் ஈடுபடுபவர்கள் கையில் எடுக்கும் தந்திரம் என்னவென்றால், வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கி விவரங்களைப் புதுப்பிக்காவிட்டால் அவர்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்படும் என்பதுதான். எனவே, இவ்வாறான மோசடிகளில் சிக்கிய குடியிருப்பாளர்கள் உடனடியாக காவல்துறையிடம் புகார் அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வங்கிகள் ஒருபோதும் தொலைபேசி அழைப்பு மூலம் தகவல்களை புதுப்பிக்கக் கோருவதில்லை என்றும், ஆகவே, தங்கள் விவரங்களை வங்கிகளின் கிளைகள், அதிகாரப்பூர்வ வாடிக்கையாளர் சேவை பிரதிநிதிகள் அல்லது அங்கீகரிக்கப்பட்ட வங்கி விண்ணப்பங்கள் மூலம் நேரடியாக புதுப்பிக்குமாறும் அல் ஷம்சி வலியுறுத்தியுள்ளார்.

முன்னதாக, 2022 ஆம் ஆண்டில், ஷார்ஜா காவல்துறையின் குற்றப் புலனாய்வுத் துறை (Criminal Investigation Department – CID) இதேபோன்ற மோசடியில் ஈடுபட்ட ஐந்து பேர் கொண்ட கும்பலைக் கைது செய்திருந்தது. மோசடிக்காரர்கள் மொபைல் அழைப்புகள் மூலம், பாதிக்கப்பட்டவர்களிடம் தங்கள் வங்கி விவரங்களைப் புதுப்பிக்க வேண்டும் என்றும், அவர்கள் பதிலளிக்கவில்லை என்றால் அவர்களின் கணக்குகள் முடக்கப்படும் என்றும் கூறுவார்கள். அவர்கள் பிடிபடுவதற்கு முன்பு பல குடியிருப்பாளர்களின் வங்கி சேமிப்பைத் திருடியதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

பிற மோசடிகள்:

மோசடி செய்பவர்கள் வங்கி அதிகாரிகள் போல பேசுவது மட்டுமின்றி, சில சமயங்களில் அரசு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் போலவும் நடித்து மக்களை ஏமாற்றுகின்றனர் என கூறப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு, அமீரக குடியிருப்பாளர் ஒருவர், தன்னிடம் துபாய் காவல்துறை போல நடித்து அபராதம் மற்றும் விபத்து அறிக்கைகள் பற்றிய விவரங்களை SMS அனுப்பிய மோசடி கும்பலிடம் பல்வேறு விவரங்களைப் பகிர்ந்துள்ளார். கடைசியாக, அவர்கள் அவருடைய கிரெடிட் கார்டு விவரங்களைக் கேட்டபோது சந்தேகமடைந்து கவனமாக இருந்ததாக கூறியுள்ளார்.

இதேபோல், 2020 ஆம் ஆண்டில், மற்றொரு அபுதாபி குடியிருப்பாளரிடம், ஒரு நபர் UAE சென்ட்ரல் வங்கியில் இருந்து வந்ததாகக் கூறி எமிரேட்ஸ் ஐடி விவரங்களைக் கேட்டு, அவ்வாறு செய்ய மறுத்தால் அவரது அனைத்து வங்கிக் கணக்குகளும் முடக்கப்படும் என்று எச்சரித்த சம்பவமும் நிகழ்ந்துள்ளது. அத்துடன் அடையாளம் மற்றும் குடியுரிமைக்கான ஃபெடரல் அத்தாரிட்டியின் சுருக்கமான ‘ICA’ என்ற பெயரில் இருந்து SMS ஒன்றையும் பெற்றதாக பாதிக்கப்பட்டவர் தெரிவித்துள்ளார். எனவே மக்கள் இது போன்ற மோசடி கும்பலிடம் சிக்காமல் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!