அமீரக செய்திகள்

UAE: பயணிகளுக்கு இலவச சிகிச்சை அளிக்க ஏர்போர்ட்டிலேயே 24×7 கிளினிக்..!! அபுதாபி விமான நிலையம் அறிவிப்பு..!!

அபுதாபியின் சையத் சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளுக்கு இலவச சிகிச்சை அளிக்க அதிநவீன 24×7 கிளினிக் அமைக்கப்படும் என்று தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ளது. அபுதாபி விமான நிலையத்தின் CEO எலினா சோர்லினி மற்றும் புர்ஜீல் ஹோல்டிங்ஸின் (burjeel holdings) நிறுவனரும் தலைவருமான டாக்டர் ஷம்ஷீர் வயலிலும் இரு நிறுவனங்களுக்கிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டதையடுத்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த நிகழ்ச்சியில், புர்ஜில் ஹோல்டிங்ஸின் CEO ஜான் சுனில், புர்ஜில் ஹோல்டிங் குழுமத்தின் COO சபீர் அஹமத், இயக்குநர்கள் குழு உறுப்பினர் ஓம்ரான் அல் குரி, முதன்மை கார்ப்பரேட் அதிகாரி ஹமத் அல் ஹொசானி, BMCயின் துணை CEO ஆயிஷா அல் மஹ்ரி ஆகியோர் கலந்து கொண்டதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த கிளினிக் அமைக்கப்படும் பட்சத்தில், இனி விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் திடீரென ஏற்படும் நோய்களைப் பற்றியோ, விமானத்திற்கு முந்தைய உடல்நிலை சோதனைகள் அல்லது ஏதேனும் அவசரநிலைகளைப் பற்றியோ கவலைப்படத் தேவையில்லை என கூறப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின்படி, புர்ஜீல் ஹோல்டிங்ஸின் முதன்மை்யான புர்ஜீல் மெடிக்கல் சிட்டியின் (BMC) கீழ், இந்த கிளினிக் பயணிகளுக்கு 24/7 உயர்தர மருத்துவ சேவையை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மருத்துவ உதவி தேவைப்படும் பயணிகள் விமான நிலையத்தை விட்டு வெளியேற வேண்டிய அவசியமின்றி உடனடி மருத்துவ வசதியைப் பெறுவதை உறுதி செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான நிலையத்தில் திடீரென உடல்நலன் பாதிக்கப்படும் பயணிகளை மருத்துவமனைக்கு மாற்றப்படுவதற்கு முன்பு அவர்களின் நிலைமையை உறுதிப்படுத்த இந்த கிளினிக் இலவச மருத்துவ சேவையை வழங்கும் என்று கூறப்படுகிறது.

மேலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களுக்கு அருகிலுள்ள BMC-இல் கிடைக்கும் வசதிகள் மற்றும் நிபுணத்துவத்துடன் இந்த கிளினிக் இணைக்கப்படும் என்றும், அபுதாபி விமான நிலைய ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கும் கூடுதல் பலன்கள் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, இந்த முன்முயற்சி அபுதாபி விமான நிலையங்களில் பயணிகளின் நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளிப்பதற்கும், உலகின் முன்னணி விமான நிலைய அனுபவத்தை வழங்குவதற்கும் இந்த கூட்டாண்மையின் அர்ப்பணிப்பை பிரதிபலிப்பதாக எலினா சுட்டிக்காட்டியுள்ளார்.

அவரைத் தொடர்ந்து டாக்டர் ஷம்ஷீர் பேசுகையில், அதிநவீன கிளினிக் பயண அனுபவத்தை மேம்படுத்துவதோடு ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான விமான நிலைய சமூகத்தை வளர்க்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

அபுதாபியில் இருக்கக்கூடிய சையத் சர்வதேச விமான நிலையம் உலகின் மிகப்பெரிய விமான நிலையங்களில் ஒன்றாகும். ஆண்டுதோறும் 45 மில்லியன் பயணிகளை வரவேற்கும் திறன் மற்றும் சமீபத்திய பயோமெட்ரிக் மற்றும் ஸ்கிரீனிங் தொழில்நுட்பத்தை ஒருங்கிணைத்து, பயணிகளுக்கு தடையற்ற பயண அனுபவத்தை வழங்கும் வகையில் விமான நிலையம் அமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!