அமீரக செய்திகள்

துபாயில் 700 மில்லியன் திர்ஹம்ஸ் செலவில் புதிய மேம்பாலங்கள் அமைக்கும் திட்டம்: பயண நேரம் 30% குறைக்கப்படும் என RTA தகவல்….

துபாயில் சாலை மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. அதன் தொடர்ச்சியாக சென்ற ஞாயிற்றுக்கிழமை 700 மில்லியன் திர்ஹம்ஸ் மதிப்பிலான சாலை மேம்பாட்டுத் திட்டத்திற்கான ஒப்பந்தம் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலை நீக்க ஐந்து பாலங்கள் கட்டப்படும் என்பதால், அல் கைல் சாலையில் பயண நேரம் 30 சதவீதம் குறைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) வெளியிட்டுள்ள தகவல்களின் படி, ஜபீல், மேதான், அல் கூஸ் 1, கதீர் அல் தைர் மற்றும் ஜுமைரா வில்லேஜ் சர்க்கிள் உள்ளிட்ட பல இடங்களில் சாலை மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

துபாயின் பிரதான போக்குவரத்து வழித்தடங்களில் ஒன்றான அல் கைல் சாலை ஒவ்வொரு திசையிலும் ஆறு பாதைகளை உள்ளடக்கியது, இது பிசினஸ் பே கிராசிங்கில் இருந்து ஷேக் முகமது பின் சயீத் சாலையுடன் அதன் ஜங்க்‌ஷன் வரை நீண்டுள்ளது.

RTAவின் நிர்வாக இயக்குநர்கள் குழுவின் இயக்குநர் ஜெனரலும் தலைவருமான மட்டர் அல் டேயர் கூற்றுப்படி, இந்த மேம்பாட்டுத் திட்டம், ஷேக் சையத், ஷேக் முகமது பின் சையத் மற்றும் எமிரேட்ஸ் சாலைகளுக்கு இணையான மற்றும் ஆதரவளிக்கும் சாலைகளின் திறனை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, இந்த திட்டம் அல் கைல் சாலையில் பின்வரும் ஏழு இடங்களை மேம்படுத்தும் என்று ஆணையம் கூறியுள்ளது:

  • ஜபீல்

ஓட் மேத்தா ஸ்ட்ரீட் மற்றும் ஃபைனான்சியல் சென்டர் ஸ்ட்ரீட் இன்டர்செக்‌ஷன்களுக்கு இடையிலான பணி: இத்திட்டத்தில் ஜபீல் பேலஸ் ஸ்ட்ரீட் மற்றும் ஓட் மேத்தா சாலையில் இருந்து அபுதாபியின் திசையில் அல் கைல் சாலையில் நேரடியாக போக்குவரத்தை இணைக்க மூன்று வழி பாலம் கட்டுவது அடங்கும். அத்துடன் ஷேக் சையத் சாலையின் திசையில் அல் கைல் சாலையில் இருந்து பைனான்சியல் சென்டர் ஸ்ட்ரீட் செல்லும் போக்குவரத்தை இணைக்கும் சாலைகளும் மேம்படுத்தப்படும்.

  • மேதான்

அல் மேதான் மற்றும் ராஸ் அல் கோர் சாலைகளின் இன்டெர்செக்சனுக்கு இடையிலான பணி:  அல் மேதான் சாலையில் இருந்து அல் கைல் சாலையில் தேரா திசையில் போக்குவரத்தை இணைக்கும் இருவழிப் பாலம் கட்டுவது இதில் அடங்கும். அல் கைல் சாலையில் இருந்து ராஸ் அல் கோர் சாலைக்கு வரும் போக்குவரத்தை இணைக்கும் வகையில் சாலைகள் மேம்படுத்தப்படும்.

  • அல் கூஸ் 1

அல் மேதான் சாலை மற்றும் அல் வஹா ஸ்ட்ரீட் இன்டர்செக்‌ஷன்களுக்கு இடையிலான பணி: அல் மேதான் சாலையில் இருந்து அபுதாபியின் திசையில் அல் கைல் சாலையில் போக்குவரத்தை இணைக்கும் வகையில் இருவழிப் பாலம் கட்டப்படும். அல் கைல் சாலையில் இருந்து அல் வஹா ஸ்ட்ரீட் மற்றும் லதிஃபா பின்ட் ஹம்தான் ஸ்ட்ரீட் வரை போக்குவரத்தை இணைக்க இந்த மேம்பாடுகள் உதவும் என்று கூறப்பட்டுள்ளது.

  • கதீர் அல் தைர்

அல் மேதான் சாலை மற்றும் லதிஃபா பின்ட் ஹம்தான் ஸ்ட்ரீட் இன்டர்செக்‌ஷன்களுக்கு இடையிலான பணி: இது லதீபா பின்ட் ஹம்தான் ஸ்ட்ரீட்டில் இருந்து அல் கைல் சாலையில் தேரா திசையில் போக்குவரத்தை இணைக்க இருவழிப் பாலத்தின் கட்டுமானத்தை உள்ளடக்கியது. இதன் மூலம் அல் கைல் சாலையில் இருந்து அல் மேதான் சாலைக்கு வரும் போக்குவரத்து இணைக்கப்படும்.

  • ஜுமேரா வில்லேஜ் சர்க்கிள்:

ஹெஸ்ஸா மற்றும் அல் கமிலா ஸ்ட்ரீட்களுக்கு இடையிலான பணி: ஜுமைரா வில்லேஜ் சர்க்கிளில் இருந்து அல் கைல் சாலை வரை தேரா திசையில் போக்குவரத்து இணைப்பை மேம்படுத்தும் வகையில், அல் கைல் சாலையில் இருந்து ஹெஸ்ஸா ஸ்ட்ரீட்டுக்கு வரும் போக்குவரத்தை இணைக்கும் வகையில் இருவழிப் பாலம் அமைக்கப்படும்.

  • அல் ஜதாஃப்:

புதிய பாதை தேராவின் திசையில் ஒரு மணி நேரத்திற்கு சுமார் 2,000 வாகனங்கள் செல்லும் வகையில் சாலையின் திறனை அதிகரிக்கவும் போக்குவரத்தை மேம்படுத்தவும் அமைக்கப்படும்.

  • பிசினஸ் பே:

அல் கைல் சாலையில் இருந்து பிசினஸ் பே பகுதிக்கு கூடுதல் பாதையை சேர்ப்பதன் மூலம் போக்குவரத்து ஓட்டத்தை அதிகரிக்க அதன் நுழைவாயிலில் உள்ள சாலை விரிவுபடுத்தப்படும்.

இதற்கு முன் கடந்த 2012 ஆம் ஆண்டில், RTA சாலை மேம்பாட்டிற்காக அல் கைல் சாலையின் ரவுண்டானாக்களை மேம்பாலங்களாக மாற்றியது குறிப்பிடத்தக்கதாகும்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!