அமீரக செய்திகள்

தினசரி 1.92 மில்லியன் பயணிகள்.. கடந்த ஆண்டு மட்டும் 702 மில்லியன் பயணிகள்.. பொதுபோக்குவரத்து பயன்பாட்டில் புதிய சாதனை படைத்த துபாய்..!!

கடந்த ஆண்டான 2023இல் துபாயின் பொதுப்போக்குவரத்து மற்றும் பகிரப்பட்ட போக்குவரத்து வசதிகளை சுமார் 702 மில்லியன் பயணிகள் பயன்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது. இது 2022 ஆம் ஆண்டில் 621.4 மில்லியனாக இருந்த பயணிகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும் போது 13 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அதேபோல், 2022 இல் துபாயின் பொதுப் போக்குவரத்து, பகிரப்பட்ட இயக்கம் மற்றும் டாக்ஸிகளில் பயணித்த சராசரி தினசரி பயணிகளின் எண்ணிக்கை 1.7 மில்லியனாகவும், 2023 ஆம் ஆண்டில் 1.92 மில்லியனாகவும் பதிவாகியுள்ளதாக சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) தெரிவித்துள்ளது.

இது குறித்து RTAவின் நிர்வாக இயக்குநர்கள் குழுவின் தலைவரான இயக்குநர் ஜெனரல் மேட்டர் அல் டேயர் பேசுகையில், துபாயின் பொதுப்போக்குவரத்து பயனர்களின் எண்ணிக்கையில் காணப்படும் வருடாந்திர அதிகரிப்பு குறித்து தனது மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளார்.

இந்த அதிகரிப்பு பொதுப் போக்குவரத்தை மேம்படுத்துவதற்கான கணிசமான முதலீடுகள் மற்றும் ஒருங்கிணைந்த முயற்சிகளில் இருந்து உருவாகியதாகக் குறிப்பிட்ட அவர், 90 கிமீ நீளமுள்ள உலகின் மிக நீளமான ஓட்டுநர் இல்லாத மெட்ரோ நெட்வொர்க், 11 கிமீ நீளமுள்ள துபாய் டிராம் மற்றும் 2006 முதல் 2023 வரை பேருந்து வழித்தடங்கள் 2,095 கிமீ முதல் 3,967 கிமீ வரை (இரு திசைகளிலும்) நீட்டிக்கப்பட்டது குறித்து விவரித்துள்ளார்.

இதில் 1,400 பேருந்துகளை உள்ளடக்கிய நவீன பொதுப் பேருந்துகள் மற்றும் பாரம்பரிய அப்ரா (abras), துபாய் ஃபெர்ரி மற்றும் வாட்டர் டாக்சிகள் உள்ளிட்ட ஒருங்கிணைந்த கடல் போக்குவரத்து நெட்வொர்க்கை இயக்குவதும் அடங்கும் என்று அல் டேயர் மேலும் கூறியுள்ளார்.

பொதுப் போக்குவரத்தை மேம்படுத்துதல்:

துபாயின் RTA, எமிரேட்டில் தொடர்ந்து பொதுப் போக்குவரத்து நெட்வொர்க்கை விரிவுபடுத்தி மேம்படுத்தி வருகிறது. 30 கிமீ நீளமுள்ள துபாய் மெட்ரோ புளூ லைன் திட்டமும் RTAவின் போக்குவரத்து மேம்பாட்டு முயற்சிகளில் ஒன்றாகும்.

துபாயைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் ஒரு மில்லியன் மக்களுக்கு சேவை செய்ய துபாயின் முக்கிய பகுதிகளை இணைக்கும் வகையில், 3 இன்டர்சேஞ்ச் நிலையங்கள் உட்பட 14 நிலையங்களை இந்த திட்டம் உள்ளடக்கியது.

துபாய் மெட்ரோ பயனர்கள்:

எண்டர்பிரைஸ் கமாண்ட் அண்ட் கண்ட்ரோல் சென்டர் (EC3) வெளியிட்ட புள்ளிவிவரங்களின் படி, துபாய் மெட்ரோவின் ரெட் மற்றும் கிரீன் லைன்களைப் பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை 2023 இல் 260 மில்லியனாக இருந்துள்ளது, இது 2022 உடன் ஒப்பிடும்போது 15% வளர்ச்சியைப் பிரதிபலிக்கிறது. குறிப்பாக, ரெட் மற்றும் கிரீன் லைன்கள் இரண்டிலும், புர்ஜுமன் ஸ்டேஷன் 15 மில்லியன் பயணிகளுக்கும், யூனியன் ஸ்டேஷன் 11.9 மில்லியன் பயணிகளுக்கும் சேவை செய்ததாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன.

அதேபோல், ரெட் லைனில், அல் ரிக்கா ஸ்டேஷன் 11.7 மில்லியனையும், மால் ஆஃப் தி எமிரேட்ஸ் ஸ்டேஷன் 11 மில்லியனையும், புர்ஜ் கலீஃபா/துபாய் மால் ஸ்டேஷன் 10 மில்லியனுக்கும் அதிகமான பயணிகளையும் பதிவு செய்துள்ளன. க்ரீன் லைனில், ஷரஃப் டிஜி ஸ்டேஷன் 9.3 மில்லியன் பயணிகளைப் பதிவுசெய்து 8.2 மில்லியனுடன் உள்ள பனியாஸ் நிலையத்தை விட முதலிடத்தைப் பிடித்துள்ளது.

இதர போக்குவரத்து:

2023 ஆம் ஆண்டில், துபாய் டிராம் 8.84 மில்லியன் பயணிகளுக்கு சேவை செய்திருப்பதாகவும், இது 2022 இல் இருந்து 18% உயர்வைக் குறிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பொதுப் பேருந்துகள் முந்தைய ஆண்டை விட 10% அதிகரித்து 173.5 மில்லியன் பயணிகளைக் கண்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

அதுபோலவே, அப்ரா, வாட்டர் பஸ், வாட்டர் டாக்சிகள் மற்றும் துபாய் ஃபெர்ரி உள்ளிட்ட கடல் போக்குவரத்து வழிகள் 17.43 மில்லியன் பயணிகளுக்கு சேவை செய்துள்ளதாகக் கூறப்படுகிறது, இது 9% அதிகரிப்பைக் காட்டுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவை தவிர, இ-ஹெய்ல், ஸ்மார்ட் கார் ரென்ட் மற்றும் பஸ்-ஆன்-டிமாண்ட்  போன்ற பகிரப்பட்ட இயக்கங்கள் மூலமாக சுமார் 43.61 மில்லியன் பயணிகள் பயணித்துள்ளனர், இது கணிசமான 34% வளர்ச்சியைப் பிரதிபலிக்கிறது என கூறப்பட்டுள்ளது. மேலும், துபாய் டாக்ஸி நிறுவனம் மற்றும் உரிமையாளர் நிறுவனங்களை உள்ளடக்கிய டாக்ஸிகள், 198.44 மில்லியன் பயணிகளை ஏற்றிச் சென்றுள்ளது, இது 2022ஐ விட 8% அதிகரிப்பாகும் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!