அமீரக செய்திகள்

அமீரகத்தில் பெயர் மாற்றம் காணப்போகும் துபாயின் பெட்ரோல் நிலையங்கள்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் பெட்ரோலியப் பொருட்களின் விநியோகத்தை பிரத்தியேகமாக கையாளும் அரசாங்க நிறுவனங்களில் ஒன்றான EMARAT, ‘Project Landmark’ என்கிற புதிய திட்டத்தை தொடங்குவதாக சனிக்கிழமை (மார்ச் 02) அறிவித்துள்ளது.

இந்த திட்டத்தின் மூலம், உள்ளூர் மற்றும் சர்வதேச நிறுவனங்கள் மற்றும் பிராண்டுகள் துபாய் மற்றும் அமீரகத்தின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள Emarat இன் பெட்ரோல் நிலையங்களுக்கு பெயரிடும் உரிமையைப் பெறுவதற்கான வாய்ப்பைப் பெற்றுள்ளன. Emarat துபாய் மற்றும் அமீரகத்தின் வடக்கு பகுதி முழுவதும் 139 சேவை நிலையங்களின் நெட்வொர்க்கைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

துபாயில் உள்ள அருங்காட்சியகத்தில் (Museum of the Future) நடைபெற்ற அதிகாரப்பூர்வ விழாவில் தொடங்கப்பட்ட இந்த புதிய உத்தியானது, நிறுவனங்கள் பெட்ரோல் நிலையங்களுக்குள் தங்கள் வணிக மாதிரிகளை ஒருங்கிணைக்க அனுமதிக்கிறது.

அதாவது, ஒரு நிறுவனம் அல்லது பிராண்ட் ராயல்டி செலுத்துவதன் மூலம் ஒரு இடம், கட்டிடம் அல்லது வசதிக்கு பெயரிடுவதற்கான பிரத்யேக உரிமையைப் பெற்றுக் கொள்கிறது, இதன் மூலம் அந்நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களிடையே விளம்பரப்படுத்திக் கொள்ள முடியும் மற்றும் அதன் வணிகம் மேம்படும் என கூறப்படுகின்றது.

இதற்கு சிறந்த உதாரணம் துபாய் மெட்ரோ நிலையங்களாகும். அதாவது எமிரேட்ஸ், ஆன்பாஸிவ் (onpassive), அபுதாபி கமர்ஷியல் பேங்க், UAE எக்ஸ்சேஞ்ச், தனூப் மற்றும் இது போன்ற பலவற்றை உள்ளடக்கிய உள்ளூர் மற்றும் சர்வதேச கார்ப்பரேட் நிறுவனங்களின் பெயரால் பல மெட்ரோ நிலையங்கள் பெயரிடப்பட்டுள்ளன என்பது துபாய்வாசிகளுக்கு தெரிந்த ஒன்றுதான்.

இது குறித்து Emarat இன் டைரக்டர் ஜெனரல் அலி கலீஃபா அல் ஷம்சி பேசுகையில், புராஜெக்ட் லேண்ட்மார்க் திட்டம், நிறுவனங்களுக்கு வாடிக்கையாளர்களை அடையவும், அமீரகத்தால் நிர்ணயிக்கப்பட்ட உயர்ந்த தரத்தை பூர்த்தி செய்யும் மதிப்புமிக்க சேவைகளை வழங்கவும் ஒரு புதுமையான வணிக தளத்தை வழங்கும் என்று எடுத்துரைத்துள்ளார்.

எமாரத்தின் சேவை நிலையங்கள் தினசரி 8,000 வாகனங்களுக்கு சேவை செய்கின்றன, மேலும் எரிபொருள் நிரப்புதல், வாகன பராமரிப்பு, மசூதிகள் மற்றும் உணவகங்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை வழங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!