அமீரக செய்திகள்

UAE: கடந்த ஆண்டு மட்டும் சட்டவிரோதமாக ஆட்சேர்ப்பு செய்த 55 நிறுவனங்கள்.. அதிரடியாக நடவடிக்கை எடுத்த அதிகாரிகள்!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டில், அமைச்சகத்திடமிருந்து தேவையான அனுமதிகளைப் பெறாமல் சட்டவிரோதமாக ஆட்சேர்ப்பு செய்த 55 நிறுவனங்கள் மற்றும் 5 சமூக ஊடக கணக்குகளுக்கு எதிராக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அதாவது, மீறலில் ஈடுபட்ட நிறுவனங்களுக்கு அபராதத்துடன், அமைச்சகத்தின் பதிவேடுகளில் கட்டுப்பாடு மற்றும் பொது வழக்கு விசாரணைக்கு பரிந்துரைத்தல் உள்ளிட்ட தண்டனை விதிக்கப்பட்டதுடன், சமூக வலைதள கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டப்படி அமீரகத்தின் மனித வளங்கள் மற்றும் குடியேற்ற அமைச்சகத்திடம் (MoHRE) முறையான அனுமதியின்றி வீட்டுப் பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்வது அல்லது தற்காலிகமாக வேலைக்கு அமர்த்துவது போன்றவை தண்டனைக்குரிய குற்றமாகும்.

MoHRE இன் படி, இவ்வாறு அமீரகத்தில் ஆட்சேர்ப்பு விதிகளை மீறுபவர்களுக்கு ஒரு வருடத்திற்கு குறையாத சிறை தண்டனை மற்றும் 200,000 திர்ஹம் முதல் 1 மில்லியன் திர்ஹம் வரை அபராதம் விதிக்கப்படலாம் என கூறப்பட்டுள்ளது.

இது குறித்து MoHRE இன் மனித வள விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் கலீல் அல் குர்ரி என்பவர் பேசுகையில், முறையான உரிமம் இல்லாமல் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டதாக கண்டுபிடிக்கப்பட்ட எந்தவொரு நிறுவனத்திற்கும் எதிராக சட்ட நடவடிக்கைகள் மற்றும் அபராதங்களை அமல்படுத்துவதற்கு அமைச்சகம் உறுதிபூண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

அந்தவகையில், சட்டவிரோத நடைமுறைகளைக் கண்டறியவும், மீறல் வழக்குகளை பொது வழக்கறிஞருக்குப் பரிந்துரைக்கவும் சந்தேகத்திற்குரிய நிறுவனங்களில் அமைச்சகத்தால் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதாக கலீல் அல் குரி கூறியுள்ளார்.

மேலும், சமூக ஊடகங்களில் அல்லது வேறு ஏதேனும் தளங்களில் பரப்பப்படும் ப்ரோமோஷன் மற்றும் விளம்பரப் பிரச்சாரங்களைக் கண்காணித்தல், வேலை சந்தையில் விதிமீறல்களைக் கண்டறிதல் என அமைச்சகத்தின் ஆய்வு அமைப்புகளால் பல்வேறு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இது போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளைத் தவிர்ப்பதற்காக, விளம்பர வேலைவாய்ப்பு அல்லது மத்தியஸ்த சேவை நிறுவனங்கள், அவர்களுடன் ஈடுபடுவதற்கு முன், அமைச்சகத்திடம் அனுமதி பெற்றுள்ளனவா என்பதைச் சரிபார்க்கும்படி குடியிருப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேசமயம், மீறல்கள் மற்றும் சட்டவிரோத ஆட்சேர்ப்பு நடைமுறைகள் குறித்து அமைச்சகத்தின் கால் சென்டருக்கு 600590000 அல்லது MoHRE ஸ்மார்ட் அப்ளிகேஷன் மூலம் புகாரளிக்குமாறு பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!