அமீரக செய்திகள்

3 மாதங்களில் மட்டும் 6.9 மில்லியன் பயணிகள் போக்குவரத்தை கையாண்ட அபுதாபி ஏர்போர்ட்ஸ்..!!

அபுதாபியில் உள்ள ஐந்து விமான நிலையங்களின் (சையத் இன்டர்நேஷனல் ஏர்போர்ட், அல் பதீன் ஏர்போர்ட், அல் அய்ன் இன்டர்நேஷனல் ஏர்போர்ட், டெல்மா ஏர்போர்ட், சர் பனியாஸ் ஏர்போர்ட்) ஆபரேட்டரான அபுதாபி ஏர்போர்ட்ஸ், நடப்பு ஆண்டான 2024 இன் முதல் காலாண்டில் சுமார் 6.9 மில்லியன் பயணிகளுக்கு சேவை செய்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது. இது 2023 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் 5.1 மில்லியனாக இருந்த எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது, 35 சதவிகிதத்திற்கும் அதிகமான பயணிகள் போக்குவரத்தை பதிவு செய்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் விமான இயக்கங்கள் கணிசமாக அதிகரித்து, சுமார் 61,737 இயக்கங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும், இது 2023 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 11.4 சதவீதம் அதிகமாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த காலகட்டத்தில், சையத் சர்வதேச விமான நிலையம் (AUH) மட்டும் 6.8 மில்லியன் பயணிகளை கையாண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக தொடங்கப்பட்ட இந்த டெர்மினல் விமான இயக்கங்களில் 26.6 சதவீதம் மற்றும் பயணிகள் போக்குவரத்தில் 36 சதவீதத்துடன் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைப் பதிவு செய்துள்ளதாக தரவுகள் கூறுகின்றன.

முக்கிய நகரங்கள்

மேலும் முக்கிய 5 நகரங்களில் கிட்டத்தட்ட 290,000 பயணிகள் போக்குவரத்துடன் லண்டன் முக்கிய நகரமாக அதன் அந்தஸ்தைத் தக்க வைத்துக் கொண்டது, அதேசமயம், 240,681 பயணிகள் எண்ணிக்கையுடன் மும்பை, 206,139 பயணிகளுடன் கொச்சி, 203,395 பேருடன் டெல்லி மற்றும் 184,317 பயணிகள் எண்ணிக்கையுடன் தோஹாவும் முதல் ஐந்து இடங்களில் அடுத்தடுத்து உள்ளன.

இது குறித்து அபுதாபி ஏர்போர்ட்ஸின் நிர்வாக இயக்குநர் மற்றும் CEO எலினா சோர்லினி பேசிய போது, உலகெங்கிலும் இருந்து அதிகரித்து வரும் விமான நிறுவனங்கள் மற்றும் பயணிகளை ஈர்ப்பதில் விமான நிலையங்களின் தொடர்ச்சியான வெற்றியை இந்த புள்ளிவிவரங்கள் நிரூபிக்கின்றன என்று குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து அபுதாபி ஏர்போர்ட்ஸ், பயணிகளின் அனுபவத்தை மேம்படுத்தவும், எங்களது தற்போதைய விமானப் பங்காளிகள் மற்றும் எங்கள் பொதுவான வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்தவும் அதன் வசதிகள் மற்றும் சேவைகளில் முதலீடு செய்வதில் உறுதியாக உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சரக்கு போக்குவரத்து:

அபுதாபி ஏர்போர்ட்ஸ் பயணிகள் போக்குவரத்து மட்டுமின்றி, சரக்கு போக்குவரத்திலும் முதல் காலாண்டில் குறிப்பிடத்தக்க விரிவாக்கத்தை பதிவு செய்துள்ளது. நடப்பு ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் 162,000 டன்கள் விமான சரக்கு கையாளப்பட்டுள்ளது என்றும், இது 2023 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் கையாளப்பட்ட 129,000 டன் சரக்குகளுடன் ஒப்பிடும்போது 25.6 சதவீதம் அதிகமாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புள்ளிவிவரங்கள் உலகளாவிய வர்த்தகம் மற்றும் வணிகத்தை எளிதாக்குவதில் அபுதாபியின் பங்கை எடுத்துக்காட்டுகின்றன என கூறப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!