அமீரக செய்திகள்

UAE: பழுதான கார்களை நடுரோட்டில் நிறுத்தியதால் ஏற்பட்ட கோர விபத்து..!! பதைபதைக்கும் வீடியோக்களை வெளியிட்ட அபுதாபி காவல்துறை..!!

ஐக்கிய அரபு அமீரகம் சாலைப் பாதுகாப்பை மேம்படுத்தவும், அனைத்து சாலைப் பயனர்களும் போக்குவரத்து விதிகளுக்கு இணங்குவதை உறுதி செய்யவும் அவ்வப்போது பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வுப் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும், சில பொறுப்பற்ற வாகன ஓட்டிகளால் உயிருக்கு ஆபத்தை விளைவிக்ககூடிய விபத்துக்களும் ஏற்படுகின்றன.

இது தொடர்பாக அபுதாபி காவல்துறை தனது அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கில் வெளியிட்ட வீடியோ ஒன்றில், திடீரென ஏற்படும் பழுது காரணமாக சாலையின் நடுவில் வாகனங்களை நிறுத்துவதால் ஏற்படும் பெரும் ஆபத்துகள் குறித்து வாகன ஓட்டிகளை எச்சரித்துள்ளது.

அபுதாபி காவல்துறையால் பகிரப்பட்ட அந்த வீடியோவில், சாலையின் நடுவில் நிறுத்தப்படும் வாகனங்களால் ஏற்படும் கடுமையான விபத்துக்களின் பதைபதைக்க வைக்கும் காட்சிகளைக் காணலாம். முதல் வீடியோவில் வெள்ளை வேன் ஒன்று சாலையின் நடுவே நிறுத்தப்பட்டிருந்த காரின் பின்புறத்தில் அதிவேகத்தில் மோதுவதைக் காட்டுகிறது.

 

மற்றொரு வீடியோவில், நடுரோட்டில் திடீரென நின்ற ஒரு காரின் மீது வேகமாகச் செல்லும் வாகனம் மோதுவதையும், அதைத் தொடர்ந்து பல கார்கள் கட்டுப்பாட்டை இழந்து ஒன்றின் மீது ஒன்றாக மோதி பல கார்கள் தொடர்ந்து விபத்துக்குள்ளாகும் காட்சிகளையும் காட்டுகிறது.

இது குறித்து அபுதாபி காவல்துறை X தளத்தில் வெளியிட்ட பதிவில், “போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு ரோந்து இயக்குநரகம் சாலையின் நடுவில் வாகனங்களை நிறுத்துவதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து உங்களை எச்சரிக்கிறது” என்று தெரிவித்துள்ளது.

குறிப்பாக, காரில் திடீரென கோளாறு ஏற்பட்டாலோ அல்லது விபத்து ஏற்பட்டாலோ வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களை அருகில் உள்ள பாதுகாப்பான பார்க்கிங் இடத்திற்கோ அல்லது சாலையின் விளிம்பிற்கோ கொண்டு செல்லுமாறு அதிகாரிகள் நினைவூட்டியுள்ளனர். அது முடியாதபட்சத்தில், காவல்துறையை உடனடியாக தொடர்புகொண்டு தேவையான உதவியை நாடுமாறும் வாகன ஓட்டிகளை அபுதாபி காவல்துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.

இவ்வாறு பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விபத்துகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியில், அபுதாபி காவல்துறை சாலை விதிகளுக்கு இணங்காமல் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகளின் அதிர்ச்சியூட்டும் வீடியோக்களை தொடர்ந்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறது.

முன்னதாக இந்த மாத தொடக்கத்தில், கவனத்தை சிதறடித்து வாகனம் ஓட்டினால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து வாகன ஓட்டிகளை எச்சரிக்க, கார் விபத்துக்களின் வீடியோ காட்சிகளையும் அபுதாபி காவல்துறை தனது சமூக ஊடக பகலகங்களில் வெளியிட்டதும் குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!