அமீரக செய்திகள்

துபாய் – அபுதாபி இடையே அடுத்த ஆண்டு தொடங்கப்படும் பறக்கும் கார் சேவை..!! வெர்ட்டிபோர்ட் விரைவில் கட்டப்படும் எனவும் தகவல்.!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தவும், கார்பன் உமிழ்வைக் குறைக்கவும் ஏர் டாக்ஸி போன்ற அதிநவீன போக்குவரத்து தீர்வுகளை அறிமுகப்படுத்துவதில் அரசும், தனியார் நிறுவனங்களும் தீவிரம் காட்டி வருகிறது.

தற்போது அதன் அடுத்த கட்டமாக,  குடியிருப்பாளர்களுக்கு பெரிதும் பயனளிக்கும் வகையில் மற்றொரு புதிய நடவடிக்கை அமீரகத்தில் எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அமீரகவாசிகள் 2025ஆம் ஆண்டில் வெகுவிரைவில் பறக்கும் காரில் எமிரேட்களுக்கு இடையே பயணிக்கலாம்.

அமீரகத்தை தளமாகக் கொண்ட விமான சேவை ஆபரேட்டர் நிறுவனமான ஃபால்கன் ஏவியேஷன் (Falcon Aviation), அமெரிக்காவின் எலக்ட்ரிக் பறக்கும் கார் உற்பத்தி நிறுவனமான ஆர்ச்சர் (Archer) நிறுவனத்துடன் இணைந்து துபாய் மற்றும் அபுதாபியில் வெர்டிபோர்ட் (vertiport) என்றழைக்கப்படும் செங்குத்து விமான நிலையத்தை உருவாக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பான ஒப்பந்தத்தில் இந்த இரண்டு நிறுவனங்களும் கையெழுத்திட்டதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இதன் முதல் வெர்டிபோர்ட் துபாயில் உள்ள அட்லாண்டிஸ் தி பாம் (Atlantis the Palm) பகுதியிலும் மற்றும் அபுதாபியின் கார்னிச்சில் உள்ள மெரினா மால் (Marina Mall) பகுதியிலும் கட்டப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வெர்டிபோர்ட்கள் ஆர்ச்சரின் பறக்கும் கார் மூலம் இணைக்கப்படும். மேலும் இந்த பறக்கும் ஒரு பைலட் மற்றும் நான்கு பயணிகள் பயணிக்கக்கூடிய அளவில் இருக்கும். அத்துடன் குறைந்த சார்ஜ் நேரத்துடன் அடுத்தடுத்து வேகமாகச் செயல்படும் வகையில் இந்த பறக்கும் கார் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கூடவே, 60-90 நிமிட தரைவழிப் போக்குவரத்தை வெறும் 10-30 நிமிடங்களாக இந்த பறக்கும் கார் குறைக்கும் என்றும், பாதுகாப்பானதாகவும், குறைந்த இரைச்சலாகவும், தரைவழிப் போக்குவரத்தை விட மலிவானதாகவும் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. பறக்கும் கார் முற்றிலும் தண்ணீருக்கு மேல் இயங்கும் என்பதால், பயணிகள் நகரம் மற்றும் அரபிக்கடலின் அழகிய காட்சிகளை ரசித்தவாறே பயணிக்கலாம்.

அதுமட்டுமில்லாமல், 2025 ஆம் ஆண்டில் துபாய் மற்றும் அபுதாபி எமிரேட்டுகளுக்கு இடையே பறக்கும் கார் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்னதாகவே இந்த வெர்டிபோர்ட்கள் உருவாக்கப்படும் என்றும் ஃபால்கன் ஏவியேஷன் நிறுவனத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முயற்சி குறித்து ஆர்ச்சரின் நிறுவனர் மற்றும் CEO ஆடம் கோல்ட்ஸ்டைன் (Adam Goldstein) கூறுகையில், அமீரகத்தில் பறக்கும் காரை அறிமுகப்படுத்துவதற்கு ஆவலுடன் எதிர்நோக்குவதாக தெரிவித்துள்ளார். அவரைத் தொடர்ந்து Falcon Aviation இன் CEO கேப்டன் ராமன்தீப் ஓபராய் (Captain Ramandeep Oberoi) கூறுகையில், சுமார் இருபது வருடங்களாக அமீரகத்தில் ஹெலிகாப்டர் பயணிகள் போக்குவரத்தில் எங்கள் நிறுவனம் முன்னணியில் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல், 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அமீரகத்தில் பறக்கும் டாக்ஸி சேவைகளை தொடங்க அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஜாபி ஏவியேஷன் (Joby Aviation) நிறுவனத்துடன், துபாயின் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) கடந்த பிப்ரவரி 2024ல் இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

அதுமட்டுமில்லாமல், துபாய் சர்வதேச விமான நிலையம், பாம் ஜுமேரா, துபாய் மெரினா மற்றும் டவுன்டவுன் ஆகிய நான்கு இடங்களில் இதற்கான வெர்டிபோர்ட் தளங்களை வடிவமைத்து, கட்டமைத்து அதனை இயக்க ஸ்கைபோர்ட்ஸ் (Skyports) எனும் நிறுவனத்துடனும் ஜாபி ஏவியேஷன் ஒப்பந்தம் செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!