அமீரக செய்திகள்

அமீரகத்தில் வேலையின்றி கஷ்டப்படுபவர்களுக்கு இலவசமாக மளிகைப் பொருட்களை வழங்கும் தமிழர்.. ரமலானை முன்னிட்டு இல்லாதவர்களுக்கு உதவி..!!

ரமலான் மாதம் தொடங்கியதை முன்னிட்டு, அமீரகக் குடியிருப்பாளர்கள் பலரும் புனித மாதத்தின் ஈகை மனப்பான்மையையும், இரக்கத்தையும் பிரதிபலிக்கும் வகையில், தங்களால் முடிந்த உதவிகளை ஏழை எளிய மக்களுக்கு நன்கொடையாக வழங்கி வருகின்றனர்.

அவர்களின் வரிசையில், ரமலானின் உணர்வை எடுத்துக்காட்டும் விதமாக துபாயில் உள்ள தேரா (Deira) பகுதியில் வசிக்கும் தமிழ்நாட்டைச் சேரந்த ஹமீத் யாசின் என்பவர், துபாய் எமிரேட்டில் வேலையில்லாமல் கஷ்டப்படுவோருக்கும், ஏழைகளுக்கும் இலவச மளிகைப் பொருட்களை தாராளமாக வழங்கி வருகிறார்.

அமீரகத்தில் வேலையிழந்தவர்களுக்கு இலவச மளிகைப் பொருட்களை வழங்குவதற்கான இம்முயற்சியை முன்னெடுத்துள்ள ஹமீத் யாசின் அவர்கள், தேராவில் உள்ள முரக்காபாத் காவல் நிலையத்திற்கு எதிரே உள்ள வோல்வோபென்ஸ்  (Volvobenz) என்ற நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக பணிபுரிந்து வருகிறார். அமீரகத்தில் சுமார் 25 ஆண்டுகளாக வசித்து வரும் ஹமீத் யாசின் அவர்களின் சொந்த ஊர் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கீழக்கரை ஆகும்.

இந்த சேவை குறித்து அவர் கூறும்போது, “வேலை இழந்தவர்களுக்கும், விசிட் விசாவில் இருப்பவர்களுக்கும் உதவுவதே எங்கள் நோக்கம்” என்று தெரிவித்துள்ளார். மேலும், இலவச மளிகைப் பொருட்களை தேவைப்படும் மக்களுக்கு விநியோகிக்க அவரிடம் பல தன்னார்வலர்கள் உள்ளதாகவும், அவர்களுக்கு நன்றியுள்ளவனாக தான் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், சமூக சேவைக்காக நான் கோல்டன் விசாவைப் பெற்றேன், இது எனக்கு உத்வேகம் அளிக்கிறது, நான் மேலும் மக்களுக்கு உதவ முடிவு செய்துள்ளாதாக அவர் கூறியதுடன், தற்காலிக நிவாரணமாக இல்லாமல் நீண்ட காலத்திற்கு குடும்பங்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதே எங்கள் நோக்கம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது அவர் வழங்கும் ரமலான் கிட்களில் அரிசி, கோதுமை, எண்ணெய், தண்ணீர் மற்றும் பல அத்தியாவசிய பொருட்களுடன், புதிய காய்கறிகள் உட்பட பல்வேறு பொருட்களையும் சேர்த்து வழங்குவதாக கூறியுள்ளார். அதாவது ஒவ்வொரு பெட்டியும் தனிநபர்கள் மற்றும் குடும்பங்களுக்கு 20 நாட்கள் முதல் ஒரு மாதம் வரை போதுமானதாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும், ரமலான் பண்டிகையில் மற்றவர்களின் வாழ்க்கையில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதற்காக ஹதீத் யாசின் அவர்களின் இத்தகைய அர்ப்பணிக்கப்பட்ட பல சமூக சேவைகளுக்காக அமீரக அரசாங்கம் அவருக்கு ஏற்கனவே கோல்டன் விசா வழங்கி கவுரவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!