வளைகுடா செய்திகள்

சவுதி அரேபியாவில் கனமழை எச்சரிக்கை.. ரெட் அலர்ட் விடுத்த வானிலை மையம்.. பாதுகாப்பாக இருக்க குடியிருப்பாளர்களுக்கு அறிவுரை..!!

சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத், ஜித்தா உட்பட ராஜ்யத்தின் பல்வேறு நகரங்களிலும் இன்று செவ்வாய்கிழமை காலையிலிருந்து மிதமான முதல் ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்து வருகிறது. இதனால், ரியாத் (Riyadh), காசிம் (Qassim), ஹஃப்ர் அல் பாட்டின் (Hafr Al Batin) மற்றும் பல பகுதிகளில் உள்ள பல பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் சீரற்ற வானிலையின் காரணமாக இன்று வகுப்புகளையும் ரத்து செய்துள்ளன.

மேலும், பல்வேறு கவர்னரேட்டுகளில் அதிவேக காற்று, குறைந்த பார்வை, ஆலங்கட்டி மழை மற்றும் திடீர் வெள்ளம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும், குறிப்பாக வடக்கு தபூக் (Tabuk) பிராந்தியத்தில் கடுமையான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அறிவித்துள்ள சவூதி அரேபியாவின் தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) குடியிருப்பாளர்களுக்கு சிவப்பு எச்சரிக்கையையும் விடுத்துள்ளது.

அதேசமயம், நாட்டின் ஒரு சில இடங்களில் மோசமான வானிலை நிலவும் என்பதால், குறிப்பிட்ட இடங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையையும் (yellow alert) சவூதி வானிலை மையம் விடுத்துள்ளது. மேலும், இத்தகைய மோசமான வானிலை சவூதி அரேபியாவின் பெரும்பாலான பகுதிகளில் நாளை புதன்கிழமை வரை தொடரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் சிவப்பு மற்றும் மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறும், அத்தியாவசிய தேவையின்றி வெளியில் செல்ல வேண்டாம் எனவும் சவூதியின் குடிமைத் தற்காப்பு ஆணையமும் (Civil Defence) எச்சரிக்கை விடுத்துள்ளது.

NCM வெளியிட்டுள்ள வானிலை தொடர்பான முன்னறிவிப்பில், மதீனா, தபூக், மக்கா மற்றும் பல வடக்கு மற்றும் கடலோரப் பகுதிகள் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்று, தூசிப் புயல்கள் மற்றும் ஆலங்கட்டி மழை ஆகியவற்றுடன் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

ஆகவே, குடியிருப்பாளர்கள் வெள்ளம் அல்லது மழைநீர் தேங்கக்கூடிய பகுதிகளைத் தவிர்க்குமாறும் பாதுகாப்பான இடங்களில் தங்கியிருக்குமாறும் அதிகாரிகளால் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதேநேரத்தில், அதிகாரிகள் கனமழை மற்றும் அதனுடன் தொடர்புடைய அபாயங்கள் காரணமாக எழும் நெருக்கடிகளை சமாளிக்க கூடுதல் எச்சரிக்கையுடன் தயாராக இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் இந்த கனமழை மற்றும் ஆலங்கட்டி மழை போன்ற வானிலை இடையூறுகள் மக்கா பகுதியையும், ரியாத் பிராந்தியத்தில் உள்ள கூடுதல் பகுதிகளையும் கடுமையாக பாதிப்பதாக வானிலை மைய அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இது போன்ற வளைகுடா நாடுகளின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!