அமீரக செய்திகள்

அபுதாபியில் நிலவும் கடும் மூடுபனி.. துபாய் சாலையில் வேக வரம்பு குறைப்பு.. வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுத்த காவல்துறையினர்..!!

அபுதாபி, துபாய் உள்ளிட்ட ஐக்கிய அரபு அமீரகத்தின் அனைத்து எமிரேட்களிலும் இன்று திங்கள்கிழமை (மார்ச் 11) அதிகாலை முதலே கடும் மூடுபனி நிலவி வருகிறது. அமீரகத்தின் தேசிய வானிலை மையமும் நேற்று இது குறித்து குடியிருப்பாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது.

அதன்படி, தற்போது அபுதாபி முழுவதும் அதிகாலை முதல் கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. இந்த கடுமையான மூடுபனியை தொடர்ந்து அபுதாபி காவல்துறை வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை செய்திகளை அனுப்பியுள்ளது. அத்துடன் அபுதாபியின் பெரும்பாலான சாலைகளில் வேக வரம்பானது மணிக்கு 80 கிமீ என அபுதாபி காவல்துறையால் செயல்படுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக, மூடுபனி உருவாக்கம் நாடு முழுவதும் கிடைமட்டத் தெரிவுநிலையைப் (visibility) பாதிக்கும் என்று நேற்று தேசிய வானிலை மையம் (NCM) அறிவித்திருந்தது. மேலும் சில உள் மற்றும் கடலோரப் பகுதிகளில் சில நேரங்களில் தெரிவுநிலை மேலும் குறையும் எனவும் என்றும் NCM எச்சரித்திருந்தது.

வேக வரம்பு குறைப்பு:

அபுதாபி – துபாய் இரண்டையும் இணைக்கும் முக்கிய சாலையான ஷேக் முஹம்மது பின் ராஷித் சாலையில் வேக வரம்பு மணிக்கு 80 கி.மீ ஆக குறைக்கப்பட்டுள்ளது.

அடுத்ததாக அபுதாபி – அல் அய்ன் இரண்டையும் இணைக்கும் முக்கிய சாலையான அல் அய்ன் சாலையில் அபு சம்ராவிலிருந்து (Abu Samra) அல் கஸ்னா (Al Khazna) வரையிலும் வேக வரம்பு குறைக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று ஸ்வைஹான் (Sweihan) சாலையில் சையத் மிலிட்டரி சிட்டி மற்றும் ஏர்போர்ட் பிரிட்ஜ் இடையேவும் வேக வரம்பு குறைக்கப்பட்டுள்ளது.

அபுதாபியின் பல்வேறு பகுதிகளில் மூடுபனி காரணமாக தெரிவுநிலை பாதிக்கப்பட்டுள்ளதால், பனிமூட்டத்தின் போது பாதுகாப்பாக வாகனம் ஓட்டுமாறு குடியிருப்பாளர்களை அபுதாபி காவல்துறை எச்சரித்துள்ளது.

மேலும், மூடுபனி உருவாகும் போது ஓட்டுநர்கள் பாதுகாப்பான வாகனம் ஓட்டுவதைக் கடைப்பிடிக்க வேண்டும் மற்றும் வாகனம் ஓட்டுவதற்கு முன் வானிலை நிலவரத்தை சரிபார்க்க வேண்டும் என்று காவல்துறை ஒரு ட்வீட்டில் தெரிவித்துள்ளது.

அத்துடன், வாகன ஓட்டிகள் வாகனத்தின் வேகத்தை குறைக்கவும், வாகனங்களுக்கு இடையில் போதிய பாதுகாப்பு இடைவெளியை விட்டு செல்லவும், வேக வரம்புகளை கடைபிடிக்கவும் காவல்துறையினர் வாகன ஓட்டிகளை அறிவுறுத்தியுள்ளனர்.

NCM வெளியிட்ட தகவலின் படி, அமீரகமெங்கும் காணப்படும் இந்த கடும் பனிமூட்டம் காலை 10 மணி வரையிலும் நீடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

Back to top button
error: Content is protected !!