அமீரக செய்திகள்

UAE: பார்வையாளர்களுக்காக ஷார்ஜாவில் புதிதாக திறக்கப்பட்டுள்ள “தொங்கும் தோட்டம்”..!!

அமீரகத்தில் சுற்றுலா துறையை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் பட்சத்தில் ஷார்ஜா எமிரேட்டும் அதற்கான பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றது. இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, ஷார்ஜாவில் உள்ள கல்பா நகரில் புதிய “தொங்கும் தோட்டம் (hanging garden)” இப்போது பார்வையாளர்களுக்காக அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டுள்ளது.

சுமார் 1.6 மில்லியன் சதுர அடி பரப்பளவில் 100,000 மரங்களைக் கொண்டுள்ள இந்த புதிய இடம் கடல் மட்டத்திலிருந்து 281 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ஷார்ஜா-கல்பா சாலையில் அமைந்துள்ள இந்த தோட்டம், சுப்ரீம் கவுன்சில் உறுப்பினரும் ஷார்ஜாவின் ஆட்சியாளருமான மாண்புமிகு டாக்டர் ஷேக் சுல்தான் பின் முஹம்மது அல் காசிமி அவர்களால் கடந்த மார்ச் 8 வெள்ளிக்கிழமை அன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மேலும், அங்கிருந்த அரை வட்ட கட்டிடக்கலை வடிவமைப்பைக் கொண்ட 215 பேர் அமரக்கூடிய மத்திய உணவகத்தையும், பசுமையான இடங்கள், அருவிகள் போன்ற தோட்டத்தின் அழகியல் கூறுகளையும் டாக்டர் ஷேக் சுல்தான் பார்வையிட்டதாகக் கூறப்படுகிறது.

அதைத் தொடர்ந்து, குழந்தைகளுடன் நினைவுப் புகைப்படங்களை எடுத்துக் கொண்ட ஷார்ஜா ஆட்சியாளர், குழந்தைகளுக்கான நியமிக்கப்பட்ட வயதுக் குழுக்களின் அடிப்படையில் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ள பொழுதுபோக்கு பகுதிகளையும் பார்வையிட்டுள்ளார்.

இது பற்றி கிடைத்துள்ள தகவல்களின் படி, இந்த புதிய பொழுதுபோக்கு இடமானது மூன்று நிலைகளாகப் பிரிக்கப்பட்டுள்ள மலை ஏறும் பாதைகள், விவசாய நிலங்கள், நீர்வீழ்ச்சிகள், அடர்ந்த மரங்கள் மற்றும் பூக்களின் அற்புதமான காட்சிகளை வழங்குவதாகவும், அத்துடன் 55 பேர் பயணிக்கும் வகையில் மற்றும் 820 மீட்டர் நீளம் கொண்ட ஒரு சுற்றுலா ரயில் இங்கு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், பூங்காவின் உட்புறத்தில் இருந்து அதன் அடையாளங்களைச் சுற்றி 760 மீட்டர் ஓடுதளம் உள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.

இது தவிர, தொங்கும் தோட்டத்தின் மேல் பகுதியில் பார்வையாளர்களுக்கு சேவை செய்வதற்காக பாரம்பரிய மரக் கட்டிடக்கலையால் கட்டப்பட்ட ஒரு உணவகம் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 270 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்த உணவகத்தில் 100 பேர் அமர வசதி கொண்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு சிறந்த சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு இடங்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ள இந்த திட்டம்,  262 பார்க்கிங் இடங்கள், ஊனமுற்றோர் பார்க்கிங் மற்றும் எலெக்ட்ரிக் வாகனம் சார்ஜ் செய்யும் நிலையங்கள், ஓய்வறைகள் ஆகியவற்றை வழங்குகிறது.

இவற்றுடன் இந்த தோட்டம் ஓய்வு, பொழுதுபோக்கு, விளையாட்டு மற்றும் இயற்கை சூழலை வழங்குவதன் மூலம், சுற்றுலா மற்றும் பொருளாதார நடவடிக்கைகளை மேம்படுத்துவதாகவும், நகர திட்டங்களுக்கு மதிப்பு சேர்ப்பதாகவும் கூறப்படுகிறது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!