அமீரக செய்திகள்

துபாய் சாலிக்கை பேலன்ஸ் இல்லாமல் கடந்தால் என்னவாகும்..?? கட்டணமில்லாமல் பயணிக்கும் நேரம் தெரியுமா..??

துபாயில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும் மற்றும் போக்குவரத்து செயல்திறனை மேம்படுத்தவும் கடந்த 2007ம் ஆண்டில் முதன் முறையாக சாலிக் டோல் கேட்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. சாலிக் நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும் இந்த கேட்கள் துபாயில் உள்ள முக்கிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் அந்த வழியாக செல்லும் வாகனங்களிடம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

துபாயில் இதுவரை 8 சாலிக் கேட்கள் செயலில் உள்ள நிலையில் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இரண்டு புதிய டோல் கேட்களை அறிவித்திருக்கின்றது. அத்துடன் இவை எதிர்வரும் நவம்பரில் செயல்படும் என்றும் தெரிவித்திருந்தது. இதன் மூலம் துபாய் எமிரேட்டில் உள்ள சாலிக் கேட்களின் எண்ணிக்கை எட்டிலிருந்து பத்தாக உயரும் என கூறப்பட்டுள்ளது.

துபாயில் தற்பொழுது வரை, அல் பர்ஷா, அல் கர்ஹூத் ப்ரிட்ஜ், அல் மக்தூம் ப்ரிட்ஜ், அல் மம்சார் சவுத், அல் மம்சார் நார்த், அல் சஃபா, ஏர்போர்ட் டன்னல் மற்றும் ஜெபல் அலி ஆகிய இடங்களில் சாலிக் கேட்கள் உள்ளன. வாகன ஓட்டிகள் ஒவ்வொரு முறை இந்த சாலிக் கேட்களை கடக்கும் போதும், ரேடியோ அதிர்வெண் அடையாள தொழில்நுட்பமானது (RFID) சாலிக் டேக்களை ஸ்கேன் செய்கிறது, பின்னர் ஓட்டுநர்களின் ப்ரீபெய்டு டோல் கணக்கில் இருந்து 4 திர்ஹம்ஸ் கட்டணம் கழிக்கப்படுகிறது.

இதற்கான சாலிக் ப்ரீபெய்டு அக்கவுண்டினை ஓட்டுநர்கள் ஆன்லைனிலோ அல்லது பங்கேற்கும் சில்லறை விற்பனை நிலையத்திலிருந்தோ ரீசார்ஜ் செய்யலாம். இருப்பினும், கணக்கில் போதுமான இருப்பை பராமரிக்கத் தவறினால் அபராதம் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

சாலிக் கட்டணமில்லா நேரம்:

அனைத்து சாலிக் கேட்களிலும் வாகன ஓட்டிகள் கடக்கும் போது கட்டணம் விதிக்கப்படும் என்றாலும், துபாயில் உள்ள சில டோல் கேட்கள் குறிப்பிட்ட நேரங்களில் டோல் கட்டணங்களில் இருந்து ஓட்டுனர்களுக்கு விலக்கு அளிக்கின்றன.

அதில் ஞாயிற்றுக்கிழமைகளில் அல் மக்தூம் ப்ரிட்ஜ் வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் இலவசமாக டோல் கேட்களைக் கடந்து செல்லலாம். மேலும், மீதமுள்ள நாட்களில் இரவு 10:00 மணி முதல் காலை 6:00 மணி வரை இந்த சாலிக் கேட்டில் கட்டணம் ரத்து செய்யப்படுகிறது.

அதேபோல், அல் மம்சார் நார்த் மற்றும் சவுத் சாலிக் டோல் கேட்களை ஒரு மணி நேரத்திற்குள் ஒரே திசையில் கடந்து செல்லும் பயணிகளுக்கு ஒரு முறை மட்டுமே கட்டணம் விதிக்கப்படுகிறது.

துபாயின் சாலிக் கேட்கள் அபுதாபியின் டார்ப் சாலை டோல் முறையைப் போலல்லாமல், காலை மற்றும் மாலை நேரங்களில் மட்டுமே கட்டணம் வசூலிக்கின்றன. டார்ப் டோல் கேட் அமைப்பும் சாலிக் போல் அல்லாமல், பொது விடுமுறை நாட்களில் கட்டணமின்றி கடக்க அனுமதிக்கிறது.

சாலிக் அபராதம்

சாலிக்கின் கணக்குகளில் ரீசார்ஜ் செய்யப்பட்ட தொகையை திரும்பப்பெறவோ மாற்றவோ முடியாது. இந்த பேலன்ஸ் ஐந்து ஆண்டுகள் வரை உங்கள் சாலிக் அக்கவுண்டில் இருக்கும், அதன் பிறகு டேக் செயலிழந்தால், மீதி பணம் பறிமுதல் செய்யப்படும்.

மேலும், உங்கள் சாலிக் கணக்கில் போதுமான பேலன்ஸ் இல்லாவிட்டால் போதுமான கிரெடிட் இல்லாமல் கேட் கடந்து வந்த நாளிலிருந்து 5 நாள் சலுகை காலத்திற்குள் அக்கவுண்டை ரீசார்ஜ் செய்வது அவசியம். இல்லையெனில் ஆறாவது நாளிலிருந்து ஒரு வாகனத்திற்கு தினமும் 50 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும்.

அதே போல் துபாயில் உள்ள டோல் கேட் வழியாக சாலிக் டேக் இல்லாமல் வாகனம் ஓட்டினால், அந்த முதல் பயணத்திலிருந்து பத்து நாட்களுக்குள் சாலிக் டேக் வாங்குவதற்கான அவகாசம் அளிக்கம்படும். இந்த காலக்கெடுவை தவறவிட்டால் அபராதம் விதிக்கப்படும்.

அந்த பத்து நாட்களுக்குப் பிறகு மீண்டும் டேக் இல்லாமல் நீங்கள் டோல் கேட்டைப் பயன்படுத்தினால், உங்களுக்கு 100 திர்ஹம்ஸ் அபராதம் விதிக்கப்படும். இரண்டாவது முறை டோல் கேட் வழியாக டேக் இல்லாமல் சென்றால் 200 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும். அதன் பிறகு, ஒவ்வொரு முறையும் சாலிக் கேட் வழியாக செல்லும் போது 400 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!