அமீரக செய்திகள்

UAE: தீவிரமாகும் மோசமான வானிலை.. ஏர்போர்ட்டிற்கு வரும் அனைத்து விமானங்களையும் திருப்பி விடுவதாக DXB தகவல்..!!

அமீரகத்தில் இன்று மிகவும் மோசமான வானிலை நிலவி வருவதை முன்னிட்டு விமான சேவைகளில் சிக்கல்களை எதிர்கொண்டு வரும் துபாய் விமான நிலையமானது (DXB), நிலைமை சீராகும் வரை துபாய்க்கு வரும் அனைத்து விமானங்களையும் தற்காலிகமாகத் திருப்பி விடுவதாகக் கூறியுள்ளது. இருப்பினும் துபாயில் இருந்து புறப்படும் விமான சேவைகளில் பாதிப்பின்றி அவை வழக்கம் போல் இயங்கும் என்றும் விமான நிலையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வெளியான அறிவிப்பில் “விமான நிலையமானது அதன் பதிலளிப்பு குழுக்கள் மற்றும் சேவை கூட்டாளர்களுடன் இணைந்து சாதாரண செயல்பாடுகளை மீட்டெடுக்கவும், பயணிகளுக்கு ஏற்படும் சிரமத்தை குறைக்கவும் கடுமையாக உழைத்து வருகிறது. பயணிகள் தங்கள் விமானத்தின் நிலை குறித்த சமீபத்திய தகவல்களைப் பெற, விமான நிறுவனத்துடன் நேரடியாக விமானங்களின் ஸ்டேட்டஸை சரிபார்க்குமாறும், விமான நிலையத்திற்கு கணிசமான கூடுதல் பயண நேரத்தை ஒதுக்குமாறும் முடிந்தவரை துபாய் மெட்ரோவைப் பயன்படுத்தவும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்” என்று கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, துபாய் விமான நிலையமானது மோசமான வானிலை காரணமாக விமான நிலையத்திற்கு வரும் மற்றும் புறப்படும் 45 விமானங்களை ரத்து செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த சீரற்ற காலநிலை காரணமாக புதன்கிழமை காலையிலும் விமானம் தாமதம் மற்றும் இடையூறு ஏற்படலாம் என்று விமான நிலையம் எச்சரித்துள்ளது.

மேலும் “விமான நிலையத்திற்குச் செல்லும் துபாயைச் சுற்றியுள்ள சாலைகளில் பெரும் வெள்ளம் உள்ளது மற்றும் தற்போதைய வானிலை முன்னறிவிப்புகள் ஏப்ரல் 17 புதன்கிழமை அதிகாலை வரை தாமதங்கள் மற்றும் இடையூறுகளை ஏற்படுத்தும் என்று சுட்டிக்காட்டுகின்றன” என்று கூறப்பட்டுள்ளது. அத்துடன் வெவ்வேறு சமூக ஊடக தளங்களில் பகிரப்பட்ட வீடியோக்கள், இன்று அதிகாலையில் ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் பெய்த கனமழைக்குப் பிறகு ஓடுபாதைகள் வெள்ளத்தில் மூழ்கியதைக் காட்டுகின்றன.

இதற்கிடையில், ஃப்ளைதுபாய் விமான நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் அளித்த அறிக்கையில், “இன்று ஐக்கிய அரபு அமீரகத்தில் ஏற்பட்ட மோசமான வானிலையானது துபாய் விமான நிலையத்தில் (DXB) விமான சேவைகளை பாதித்தது. இதன் விளைவாக நாங்கள் சில விமானங்களை ரத்து செய்துள்ளோம், தற்போது சில தாமதங்களை அனுபவித்து வருகிறோம்” என்று கூறியுள்ளார்.

மேலும் “பயணிகள் தங்கள் விமானம் புறப்படுவதற்கு 60 நிமிடங்களுக்கு முன்பு செக்-இன் முடிவடைவதால், அவர்கள் விமானம் புறப்படுவதற்கு குறைந்தபட்சம் நான்கு மணி நேரத்திற்கு முன்னதாக விமான நிலையத்திற்கு வருவதை இலக்காகக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். டெர்மினல் 2 இல் உள்ள எங்களின் புதிய சுய-சேவை கியோஸ்க்களில் ஒன்றைப் பயன்படுத்துவதன் மூலம் பயணிகள் விமான நிலையத்தில் பயணத்தை எளிதாக்கலாம். அங்கு அவர்கள் தங்கள் பேக்கேஜ் டேக்கை அச்சிட்டு ஆன்லைனில் செக்-இன் செய்து பின்னர் பிரத்யேக பேக் டிராப் டெஸ்க்கிற்கு நேரடியாகச் செல்லலாம்,” என்றும் கூறியுள்ளார்.

இதே போன்று அபுதாபியிலும் (AUH) கனமழை போன்ற மோசமான வானிலை காரணமாக, சில விமானங்கள் தாமதமாகலாம் என்று எதிஹாட் ஏர்வேஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்து கூறுகையில் “பயணிகள் தங்கள் விமானம் புறப்பாடு பற்றிய சமீபத்திய தகவல்களுக்கு எதிஹாட் இணையதளத்தை தவறாமல் பார்க்கவும், மேலும் விமான நிலையத்திற்கு பயணிக்க அதிக நேரத்தை அனுமதிக்கவும். எதிஹாட் எந்தவொரு இடையூறுகளாலும் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு அவர்களின் பயணத்திட்டங்களில் மாற்றங்களைச் செய்வதற்கும் அவர்களின் இறுதி இலக்கை அடைவதற்கும் அவர்களுடன் நெருக்கமாகப் பணியாற்றும். ஏதேனும் அசௌகரியம் ஏற்பட்டால் நாங்கள் வருந்துகிறோம், ”என்றும் தெரிவித்துள்ளார்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.

Related Articles

Back to top button
error: Content is protected !!