அமீரக செய்திகள்

அமீரகத்தில் பெய்த கனமழை: அனைத்து போக்குவரத்து விதிமீறல்களையும் தள்ளுபடி செய்த எமிரேட்..

அமீரகத்தில் கடந்த வாரம் பெய்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. அத்துடன் கனமழை தாக்கத்தால் அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்ததுடன் மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாத சூழலும் ஏற்பட்டது. மேலும் பல வாகனங்கள் வெள்ளநீரால் சூழ்ந்து பாதிப்படைந்துள்ளன.

இதனால் அமீரகம் முழுவதும் பல வாகன ஓட்டிகள் கடும் மழைக்குப் பிறகு வாகன சேதத்தை எதிர்கொண்டனர். கடுமையான வானிலையின் தாக்கம் தொடர்ந்ததால், நூற்றுக்கணக்கான குடியிருப்புவாசிகள் தங்கள் வாகனங்களை சாலையோரங்களில் விட்டுச்செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

மேலும் போக்குவரத்து விதிமீறல்கள் குறித்த அச்சத்துடன், பல கார்கள் தண்ணீரில் சிக்கியதால், தொழில்நுட்ப சிக்கல்கள், சேதங்கள் மற்றும் கார் நம்பர் பிளேட் தொலைதல் போன்றவற்றால், வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களை பழுதுபார்க்கும் கடினமான சவாலையும் எதிர்கொண்டு வருகின்றனர்.

அதிலும் குறிப்பாக மற்ற எமிரேட்டுகளை காட்டிலும் ஷார்ஜா எமிரேட்டானது இந்த கனமழையால் மிகவும் பாதிப்படைந்துள்ளது. மற்ற எமிரேட்டுகளில் மழையின் பாதிப்பு குறைந்து இயல்பு நிலைக்கு திரும்பினாலும் ஷார்ஜாவில் உள்ள ஒரு சில இடங்களில் தற்பொழுது வரையிலுமே மழைநீர் வெள்ளம் முற்றிலும் வற்றாமல் இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த நிலையில் ஷார்ஜா காவல்துறையின் தலைமைத் தளபதி மேஜர் ஜெனரல் சைஃப் அல் ஜாரி அல் ஷம்சியின் உத்தரவின்கீழ், இந்த சவாலான காலகட்டத்தில் குடியிருப்பாளர்களுக்கு ஆதரவு அளிக்கும் வண்ணம் கன மழை பெய்த காலத்தில் வாகன ஓட்டிகள் செய்த அனைத்து போக்குவரத்து மீறல்களும் தள்ளுபடி செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.

இதே போன்று வாகனம் சேதமடைந்ததற்கான சான்றிதழைப் பெறுவதற்கு வாகன ஓட்டிகள் செலுத்த வேண்டிய கட்டணத்தையும் ஷார்ஜா காவல்துறை தள்ளுபடி செய்துள்ளது.

ஷார்ஜா காவல்துறையின் இந்த முடிவானது, நாட்டில் நிலவிய மோசமான வானிலைக்குப் பிறகு எழும் இந்த அசாதாரண சூழ்நிலைகளின் போது சமூகத்திற்கு சேவை செய்வதில் காவல்துறையின் அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த வாரம் பெய்த மழையானது 75 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்த அதிகளவு மழையாகும். 1949-இல் மழைக்கான தரவு சேகரிப்பு தொடங்கியதில் இருந்து பதிவுசெய்யப்பட்ட மழைப்பொழிவில் இதுவே அதிகமானது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!