அமீரக செய்திகள்

துபாய்: விமான சேவைகளில் கடும் பாதிப்பு.. “ஏர்போர்ட்டிற்கு வரவேண்டாம்” என சுற்றறிக்கை…!! பயணிகளுக்கு வழங்கிய அறிவுறுத்தல்கள் என்ன..??

அமீரகத்தில் வரலாறு காணாத மழை நேற்று பெய்ததை முன்னிட்டு போக்குவரத்து சிக்கல், குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேக்கம், வெள்ளம் உள்ளிட்ட பல இன்னல்களை அமீரகம் சந்தித்து வருகின்றது. அவற்றில் ஒன்றாக துபாய் விமான நிலையமானது (DXB) விமான செயல்பாட்டில் தாமதம், சில விமானங்களை திருப்பிவிடுதல் போன்ற பல செயல்பாட்டு சவால்களை நேற்று முதல் எதிர்கொண்டு வருகிறது. இந்த நிலையில் விமான நிலையமானது மக்களுக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

விமான நிலைய ஆணையம் அந்த அறிக்கையில் “மிகவும் தேவையில்லாமல், மக்கள் விமான நிலையத்திற்கு வர வேண்டாம். விமானங்கள் தொடர்ந்து தாமதமாகி, திருப்பிவிடப்படுகின்றன. தயவுசெய்து உங்கள் விமான நிறுவனத்துடன் நேரடியாக உங்கள் விமானத்தின் நிலையைச் சரிபார்த்துக் கொள்ளவும்” என்று தெரிவித்துள்ளது.

நேற்று பெய்த கனமழை காரணமாக துபாயில் இருந்து புறப்படவிருந்த மற்றும் துபாய்க்கு வரவிருந்த பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டது. இதனால் பல பயணிகள் விமான நிலையத்திற்கு வந்தும் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் விமான நிலையத்திற்கு வந்த பயணிகளும் மோசமான வானிலையாலும் போக்குவரத்து பாதிப்பாலும் விமான நிலையத்தை விட்டு வெளியேற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே பயணிகள் எந்த விசாரணையுமின்றி விமான நிலையத்திற்கு வர வேண்டாம் என்றும் தாங்கள் பயணிக்கக்கூடிய விமானத்தின் நிலையை விமான நிறுவனத்துடன் சரிபார்த்து உறுதி செய்து கொண்ட பின்னரே விமான நிலையத்திற்கு வருமாறும் விமான நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.

முன்னதாக DXB வெளியிட்ட ஒரு அறிக்கையில், “நாங்கள் தற்போது வானிலை காரணமாக குறிப்பிடத்தக்க இடையூறுகளை சந்தித்து வருகிறோம், மேலும் எங்களின் அவசரகால பதில் குழுக்கள் மற்றும் சேவை கூட்டாளர்களுடன் கூடிய விரைவில் இயல்பான செயல்பாடுகளை மீட்டெடுக்க தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். விமானங்கள் தாமதமாகி, திசைதிருப்பப்பட்டு, வருகின்றன. இவை மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப சிறிது கால தாமதம் ஆகலாம்” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

மேலும் சாலை மூடல் மற்றும் வெள்ளம் காரணமாக விமான நிலையத்தில் சிக்கித் தவிக்கும் பல பயணிகளுக்கு முடிந்தவரை பானங்கள் மற்றும் உணவுகள் வழங்கப்பட்டு வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் அவசரகால பதிலளிப்பு குழுக்கள் மற்றும் சேவை கூட்டாளர்களுடன் கூடிய விரைவில் விஷயங்களை மீட்டெடுக்க ஆணையமானது 24 மணி நேரமும் உழைத்து வருகிறது எனவும் கூறப்பட்டுள்ளது.

அத்துடன் மக்கள் தங்கள் விமான நிலையை நேரடியாக தங்கள் விமான நிறுவனத்துடன் உறுதிப்படுத்திக் கொள்ளுமாறும், விமான நிலையத்திற்கு வர கூடுதல் நேரத்தை அனுமதிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் அதன் அதிகாரப்பூர்வ சமூக ஊடக பக்கத்தில், DXB க்கு வரும் மற்றும் புறப்படும் பல விமானங்கள் தாமதங்கள் அல்லது இடையூறுகளை சந்தித்து வருவதாக கூறப்பட்டுள்ளது. துபாயை மையமாக கொண்டு இயங்கும் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமான நிறுவனமானது துபாயில் இருந்து புறப்படும் பயணிகளுக்கான செக்-இன்களை விமான நிறுவனம் இடைநிறுத்தியுள்ளது, மேலும் பயணிகள் புறப்பாடு மற்றும் வருகையில் தாமதங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் எனவும் விமான நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

அதே போல் ஃப்ளைதுபாய் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “கடுமையான வானிலை காரணமாக துபாய் இன்டர்நேஷனல் (DXB) விமானத்தின் செயல்பாடுகளில் குறிப்பிடத்தக்க இடையூறு ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக, பல ஃப்ளைதுபாய் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன அல்லது விரிவான தாமதத்தை சந்தித்துள்ளன” என்று தெரிவித்துள்ளார்.

துபாயைப் போன்றே மற்ற எமிரேட்டுகளில் உள்ள விமான நிலையங்களும் மழையால் பாதிக்கப்பட்டுள்ளன. அபுதாபி விமான நிலையத்திலும் இதே போன்ற தாமதங்கள் மற்றும் இடையூறுகளை சந்தித்து வருவதாகவும் அதற்காக வருந்துவதாகவும் அபுதாபியை மையமாக கொண்டு இயங்கும் எதிஹாட் ஏர்வேஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!