அமீரக செய்திகள்

துபாய் மெட்ரோ பயணிகளின் கவனத்திற்கு.. ஏப்ரல் 15 முதல் ரெட்-லைனில் புதிய மாற்றம்.. பயணத்தை எளிதாக்க நடவடிக்கை..!!

துபாயில் பொதுப்போக்குவரத்து வசதிகளில் தினந்தோறும் அதிகளவிலான பயணிகளை கையாளும் துபாய் மெட்ரோவில், நாளை ஏப்ரல் 15-ம் தேதி முதல் புதிய ஜங்க்‌ஷனை RTA திறக்கவுள்ளது. அதாவது, துபாய் மெட்ரோவின் ரெட் லைனில் (Red Line) பயணிக்கும் பயணிகளுக்கு விரைவான பயணத்தை வழங்கும் வகையில், ஜெபல் அலி மெட்ரோ ரயில் நிலையத்தில் புதிய மாற்றத்தை RTA அறிவித்துள்ளது.

துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) ரெட் லைனில் அறிவித்துள்ள இந்த மாற்றங்கள் நாளை (ஏப்ரல் 15) முதல் நடைமுறைக்கு வரவிருக்கும் நிலையில், அதனைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய அம்சங்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

துபாய் மெட்ரோவின் ரெட் லைன் ஆனது, ஒரு முனையில் ரஷிதியாவில் உள்ள சென்டர்பாயிண்ட் மெட்ரோ நிலையத்தையும் Centerpoint Metro Station), மறுமுனையில் எக்ஸ்போ 2020 மெட்ரோ நிலையம் (Expo2020 Metro Station) மற்றும் ஜெபல் அலியில் உள்ள UAE எக்ஸ்சேஞ்ச் நிலையம் (UAE Exchange Metro Station) என இரண்டு இறுதி நிலையங்களையும் கொண்ட துபாயின் மிகவும் நீண்ட மெட்ரோ வழித்தடமாகும்.

தற்போது, ​​இந்த பாதையானது சென்டர்பாயிண்ட் மெட்ரோ நிலையத்திலிருந்து எக்ஸ்போ 2020 மெட்ரோ நிலையத்திற்கு பயணிகளை நேரடியாக அழைத்துச் செல்கிறது. அதுவே, UAE Exchange நிலையத்திற்குச் செல்ல வேண்டிய பயணிகள் ஜெபல் அலி மெட்ரோ நிலையத்தில் (Jebel Ali Metro Station) இறங்கி தங்கள் ரயில்களை மாற்ற வேண்டும்.

அதற்குப் பதிலாக, தற்போது RTA கொண்டு வந்துள்ள புதிய மாற்றத்தின் மூலம், நீங்கள் ரஷிதியாவின் சென்டர்பாயிண்ட் ஸ்டேஷனிலிருந்து புறப்பட்டால் ரயில்களை மாற்றும் அவசியமின்றி ஒரே ரயிலில் நேரடியாக எக்ஸ்போ 2020 ஸ்டேஷன் அல்லது UAE எக்ஸ்சேஞ்ச் நிலையத்திற்கு செல்ல முடியும் என்று RTA கூறியுள்ளது. அதாவது, ஜெபல் அலி நிலையத்தில் மெட்ரோ ரயிலின் வழித்தடம் தற்போது மூன்று திசைகளில் (Y ஜங்க்ஷன்) செல்லும் வகையில் பிரிக்கப்பட்டுள்ளது.

துபாய் மெட்ரோவின் ரெட்-லைன் வழித்தடம்

நீங்கள் செல்ல வேண்டிய மெட்ரோ நிலையத்திற்கு செல்லும் ரயிலைக் கண்டறிவது எப்படி?

RTA வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, ரயில் வரும் போது, பிளாட்பாரங்களில் உள்ள தகவல் திரைகளில் மெட்ரோவின் கடைசி நிலையமான டெர்மினல் ஸ்டேஷன் பற்றிய தகவல் காட்டப்படும் மற்றும் பொது சேவை அறிவிப்புகள் மூலமும் மெட்ரோ சென்றடையும் நிலையம் குறித்து அறிவிக்கப்படும்.

கூடுதலாக, பயணிகளுக்கு உதவவும், அவர்கள் விரும்பிய பாதையின்படி சரியான ரயிலில் செல்கிறார்களா என்பதை உறுதிப்படுத்தவும் நிலையத்தில் ஊழியர்கள் நிறுத்தப்படுவார்கள் என்றும் RTA தெரிவித்துள்ளது. அத்துடன், இந்த புதிய ஜங்க்‌ஷன் மூலம் பயணிகள் எளிதாகவும், ரயில் மாற்றம் செய்ய வேண்டிய தேவையில்லாததால் சிரமமின்றியும் பயணிக்க முடியும் எனவும் RTA தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!