அமீரக செய்திகள்

UAE: கனமழையால் மின்சாரம், இன்டர்நெட் துண்டிப்பு, குடிநீர் விநியோகம் தடை.. உங்கள் பகுதியில் நிலைமை என்ன..??

அமீரகக் குடியிருப்பாளர்கள் நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றனர். அதில் குறிப்பிட்ட இடங்களில் குடியிருப்பாளர்கள் மின்சாரம் துண்டிப்பு மற்றும் நீர் விநியோகம் தடை போன்ற பிரச்சனைகளால் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

அதிகளவு பெய்த கனமழையால் துபாய் மற்றும் ஷார்ஜாவில் குறிப்பிட்ட பகுதிகளில் சாலைகளிலும் வீடுகள் மற்றும் அபார்ட்மெண்ட்களிலும் மழைநீர் சூழ்ந்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் வெளியே செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அத்துடன் கனமழை காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மின்சாரம் மற்றும் இண்டர்நெட் வசதி இல்லாமல் பலர் சிரமத்திக்குள்ளாகி வருகின்றனர்.

ஷார்ஜாவில் உள்ள அல் மஜாஸ் பகுதியில் இருக்கக்கூடிய குறிப்பிட்ட அபார்ட்மெண்ட்களில் விடியற்காலை 3 மணி முதல் மின்சாரம் இல்லாமல் தவித்து வருவதாக கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் மின்சாரம், நெட் வசதி மட்டுமின்றி மின்சாரம் இல்லாத காரணத்தால் தண்ணீர் விநியோகத்திலும் தடை ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனால் அங்கு வசிப்பவர்கள் தண்ணீர் இல்லாமலும் மின்சாரம் இல்லாமலும் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

அத்துடன் கனமழை காரணமாக மாணவர்களுக்கு தொலைதூர கல்வி அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் மின்சாரம் மற்றும் இன்டர்நெட் இல்லாமல் ஆன்லைன் வகுப்புகளில் பங்குபெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

துபாய், ஷார்ஜா போன்றே மற்ற எமிரேட்டுகளிலும் இது போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக அபுதாபி ஐலண்ட் மற்றும் முரூர் பகுதியில், அதிவேகக் காற்றுடன் பெய்த பலத்த மழை காரணமாக குடியிருப்புகளில் பல ஜன்னல்கள் படபடவென ஆடியதால் கடைகள் மற்றும் கட்டிடங்களில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து அந்த பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தில் வசிக்கும் குடியிருப்பாளர் ஒருவர் கூறுகையில், “எங்கள் ஜன்னல் தலையில் விழுவது போல் ஆடிக்கொண்டிருக்கிறது. ஜன்னல்களை மூடினாலும் மழை அதன் வழியாக நுழைகிறது” என்று வேதனை தெரிவித்துள்ளார்.

இதேபோல், அந்த பகுதியில் வசிக்கும் மற்ற குடியிருப்பாளர்கள் மின்சாரம் மற்றும் குடிநீர் விநியோகம் தடை செய்யப்பட்டது குறித்து தங்கள் கவலைகளைப் பகிர்ந்துள்ளனர்.

இந்தப் புயலின் வலிமையை குறைத்து மதிப்பிட்டதாகக் கூறிய அப்பகுதியில் வசிக்கும் மற்றொரு குடியிருப்பாளர், பல ஆண்டுகளாக அந்தப் பகுதியில் வசிப்பதாகவும், இதுபோல் எப்போதும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதில்லை என்றும் கூறியுள்ளார்.

இதேபோல, துபாயிலும் மின்சாரம் மற்றும் தண்ணீர் பிரச்சினை தீர்க்கப்படாமல் இருப்பதாக குடியிருப்பாளர்கள் புகாரளித்து வருகின்றனர்.

முன்னதாக, அமீரகத்தின் தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) திங்கள்கிழமை வெளியிட்ட வானிலை முன்னறிவிப்பில், தீவிர வானிலை மற்றும் புயல் அபாயம் குறித்து குடியிருப்பாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது. இதற்கிடையில், அபுதாபி காவல்துறை மற்றும் உள்துறை அமைச்சகம் பாதகமான வானிலையில் எச்சரிக்கையுடன் செயல்படுமாறும், பாதுகாப்பாக வாகனம் ஓட்டுமாறும் கேட்டுக் கொண்டுள்ளது.

துபாயில் வெள்ளம் இன்னும் வடியாமல் இருப்பதால், உள்ள வார்கா 1 பகுதியில் மின்சாரம் மற்றும் தண்ணீர் விநியோகப் பிரச்சினை இன்னும் தீர்க்கப்படாமல் இருக்கிறது, ஆனால், அபுதாபியில் நிலைமை தீர்க்கப்பட்டுள்ளது, மேலும் தேங்கிய மழைநீர் தற்போது வெயில் அடிப்பதால் வறண்டு போகத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.

Related Articles

Back to top button
error: Content is protected !!