அமீரக செய்திகள்

UAE: அடுத்த இரு நாட்களுக்கு மோசமாகும் வானிலை.. அரசு, தனியார் ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்ய பேரிடர் மேலாண்மை ஆணையம் பரிந்துரை..

ஐக்கிய அரபு அமீரகமானது கடந்த மாதத்தில் நிலவிய கனமழையால் மிகவும் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்பொழுது மீண்டும் நிலையற்ற வானிலை நாளை (வியாழன்) முதல் நிலவும் என தேசிய வானிலை மையம் அறிவித்திருக்கின்றது. இந்த அறிவிப்பையடுத்து அதற்கான முன்னேற்பாடுகள் அரசால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அந்த வரிசையில், நாட்டில் உள்ள தனியார் மற்றும் அரசுத் துறை நிறுவனங்கள், நாளை மற்றும் நாளை மறுநாள் நிலவ உள்ள நிலையற்ற வானிலை காரணமாக, தங்கள் ஊழியர்களின் பாதுகாப்பு கருதி வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதிக்குமாறு அமீரகத்தின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.

தேசிய அவசரநிலை, நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் (NCEMA) வெளியிட்டுள்ள செய்தியில் அலுவலகத்திற்கு சென்று வேலை பார்க்க வேண்டிய கட்டாய சூழலில் இருப்பவர்கள் அல்லது மீட்பு பணிகளில் ஈடுபடுபவர்களை தவிர மற்ற ஊழியர்கள் அனைவருக்கும் தொலைதூரப் பணியை செயல்படுத்த வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. இருப்பினும், இது ஒரு பரிந்துரை மட்டுமே என்றும், இறுதி முடிவு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விடப்பட்டுள்ளது என்றும் ஆணையம் கூறியுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகமானது வானிலை மையத்தின் இந்த அறிவிப்பால் எச்சரிக்கை நடவடிக்கையை தொடங்கியதுடன் மோசமான வானிலையை சமாளிக்க அதன் தயார்நிலையை மேம்படுத்தி வருகிறது. இருப்பினும் கடந்த மாதம் ஏற்பட்டதை போன்ற தாக்கம் இதில் இருக்காது என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஏப்ரல் 16 ஆம் தேதி ஏற்பட்ட முந்தைய புயலுக்குப் பிறகு, நாட்டின் சில பகுதிகளில் இதுபோன்ற வானிலையின் விளைவுகள் குறித்து அதிகாரிகள் அக்கறையுடன் ஆய்வு செய்து வருகின்றனர். இதன் காரணமாக பள்ளத்தாக்குகள், வெள்ளம் சூழக்கூடிய பகுதிகள் மற்றும் அணைகளுக்கு செல்லும் அனைத்து சாலைகளையும் ஐக்கிய அரபு அமீரகம் மூடும் என்று ஆணையம் அறிவித்துள்ளது. மேலும் அடுத்த சில நாட்களுக்கு மலை மற்றும் பாலைவனப் பகுதிகள் மற்றும் கடலுக்கு செல்வதை தவிர்க்குமாறும் குடியிருப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அமீரகத்தில் கடந்த ஏப்ரல் 16 அன்று ஒரே நாளில் ஒரு வருடத்திற்கான மழை பொழிந்த காரணத்தால், ​​நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டன, அதே நேரத்தில் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியதால் பொதுப் போக்குவரத்துச் சேவைகள் தடைபட்டன, வெள்ளம் சூழ்ந்த சாலைகளில் வாகனங்களைக் கைவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

இதனை முன்னிட்டு தற்போது அறிவிக்கப்பட்டுள்ள வானிலை முன்னறிவிப்பினால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் வழங்கப்பட்ட அனைத்து வழிகாட்டுதல்களையும் அறிவுறுத்தல்களையும் பின்பற்றுமாறு குடியிருப்பாளர்களை NCEMA வலியுறுத்தியுள்ளது.

அத்துடன் நாடு முழுவதும் உள்ள பள்ளிகள் தொலைதூரக் கல்வியைப் பயன்படுத்த வேண்டும் என்று ஆணையம் பரிந்துரைத்துள்ளது. இருப்பினும், அது உள்ளூர் பேரிடர் மேலாண்மை குழுக்கள் பொறுத்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து துபாய் மற்றும் ஷார்ஜா மே 2-3 தேதிகளில் அனைத்து பள்ளிகளிலும் தொலைநிலை கற்றலை அறிவித்துள்ளன.

அதே போல் கடந்த இரண்டு நாட்களாக நாடு முழுவதும் குறிப்பிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்து வந்தாலும், மே 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் நிலையற்ற வானிலை உச்சத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேசிய வானிலை ஆய்வு மையத்தின் (NCM) படி, இன்று (மே 1) ஓரளவு மழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்டுள்ள நிலையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு பல்வேறு பகுதிகளில் மிதமானது முதல் கனமழை பெய்யும், சில சமயங்களில் மின்னல் மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

 

Related Articles

Back to top button
error: Content is protected !!